Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்... இந்தியச் சந்தையை பாதிக்குமா?

டந்த டிசம்பர் 12-ம் தேதி சனிக்கிழமை, மொத்தம் 195 நாடுகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக ஒன்று கூடின. டிசம்பர் 1 முதல் 12-ம் தேதி வரை இந்த மாநாடு நடத்தப்பட்டது. இத்தனை வருடங்களாகக் கண்டுகொள்ளாமல் விட்ட அந்த விஷயத்தை இப்போதாவது கையில் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் இந்த மாநாடு கூட்டப்பட்டது. ஏனெனில் மனிதனின் உயிர் பெரும் அச்சுறுத்தலில் உள்ளதே அதற்கு காரணம். இதில் ஏழை, பணக்காரன், வல்லரசு, வளரும் அரசு என்று எந்த பாரபட்சமும் இல்லை.

வரலாற்று திருப்புமுனை ஒப்பந்தம்!

உலகின் மிகப் பெரிய வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இப்படித்தான் அதனை வர்ணித்தார். "வரலாற்று திருப்புமுனை ஒப்பந்தம்". அனைத்து உலக பத்திரிகைகளும் இதைத் தலைப்புச் செய்தியாகவும் வெளியிட்டன. இந்த வரலாற்று திருப்புமுனை ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம் புவி வெப்பமடைதலை 1.5 - 2 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் தடுக்க வேண்டும் என்பதும், அதற்கு புவி வெப்பமடைதலுக்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதும்தான். இதற்கு இந்தியா உட்பட, 195 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரபூர்வ விழாவானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பலரும் பல்வேறு கோணங்களில் விமர்சித்து வந்தாலும், இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்துமென்பது முக்கியமான விஷயம்.

இந்தியாவுக்கு லாபமா, நஷ்டமா?

இந்த ஒப்பந்தத்தின்படி கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியீட்டை குறைக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்தால் புவி வெப்பமடைதல் கணிசமாக குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்தக் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமே இருப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் பிரச்னை. வளரும் நாடுகள் மட்டுமே இந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருவதாலும், பணக்கார நாடுகள் தொடர்ந்து தங்களுடைய போக்கிலேயே செயல்படும் என்பதாலும் புவி வெப்பமயமாதலில் பெரிய மாற்றத்தை நம்மால் கொண்டு வந்துவிட முடியாது.
அதே சமயம், இதன் மூலம் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் மேலும் வலுவடையும்.

ஏனெனில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம். இந்தியா ஏற்கனவே வல்லரசாகும் கனவை நோக்கி மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படலாம்.
கார்பன் - டை- ஆக்சைடு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் பெட்ரோலியம், மின்சாரம் உள்ளிட்ட துறைகள் ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. இதனால் தொழில்துறைகளும் பாதிக்கப்படும், இது பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பங்குச் சந்தையில் பாதிப்பு!

பங்குச் சந்தையில் இந்தப் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், எந்தளவுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு ஒத்துவரும், எந்தெந்தத் துறைகள் இதனால் பாதிக்கப்படும் என்பதை கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் தெளிவாக விளக்கிச் சொன்னார்.

“இன்றைய நவீன உலகில் மாசுபடுதல் என்பது, நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார உலைகள், போக்குவரத்து அதிகரிப்பதன் மூலம் ஏற்படுவது, தொழிற்சாலைகள் வெளியிடுகின்ற மாசுப்புகை போன்றவை காரணமாக சொல்லப்படுகின்றன. இதன் தாக்கம் வருகின்ற 10 முதல் 20 ஆண்டுகளில் அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்றில் கலக்கும் கார்பன் உமிழ்வு அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சம், பல்வேறு நடவடிக்கைகளை - அதாவது மாற்று வழிகளை உலக நாடுகள் ஆராய வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகளை  இப்போதிலிருந்தே எடுக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான, சவால்களும் பொறுப்புகளும் மற்றும் நிதி ஆதாரங்களைப் பற்றியும் விவாதம் நடைபெற்றுள்ளது.
பருவநிலை மாறுதல்களால், வளரும் நாடுகளில், சந்தைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில், நிலவும் அதிக மழை, அதிக வெப்பம், கடும் குளிர் -ஆகியவற்றால் ஏற்படுகின்ற உற்பத்தி இழப்பு, நாடுகளின் பொருளாதாரங்களில் மிகப் பெரிய தாக்கங்களை உண்டு செய்கின்றன. அவற்றில் கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு ஆகியவை முக்கியமானவை.

இந்தப் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க பூமிக்கு கீழ் எடுக்கப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தாமல், காற்றாலை, சூரிய சக்தி போன்ற மாற்று வழிகளை உபயோகிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நம் எதிர்கால தேவைகளை அதிக பாதிப்பில்லாமல் பூர்த்தி செய்ய முடியும் என்று கருதப்படுகிறது.

நிலக்கரி - இதை உற்பத்தி செய்வதில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது, இந்தியா மூன்றாவது மற்றும் ஆஸ்திரேலியா நாங்காவது இடத்திலும் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியா, சீனா ஆகிய வளரும் நாடுகளில் மின்சார உற்பத்திகாக நிலக்கரித்தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2030-ம் ஆண்டில் இந்தத் தேவையானது, இப்போது உள்ள அளவை போல் இரண்டு மடங்கு தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைவதை 2 சதவிகிதமாக குறைக்க வேண்டுமானால்,  நிலக்கரி 80 சதவிகிதமும், இயற்கை எரிவாயு 50 சதவிகிதமும், கச்சா எண்ணெய் 33 சதவிகிதமும் 2050-ம் ஆண்டு வரை பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
அப்படியென்றால், இந்த மேற்சொன்ன சந்தைப் பொருட்கள் மீதான முதலீடுகள் குறைக்கப்படலாம். இதை உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். இவற்றைப் பயன்படுத்தும்  நிறுவனங்கள் மீது மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

இந்த சந்தைப் பொருட்களை ஏற்றுமதி/இறக்குமதி செய்யும் நாடுகள், தங்களது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த மாற்று வழிகளை கண்டறிய வேண்டும். உடனடியாக இந்த துறைகளுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், நீண்ட காலஅடிப்படையில் ஒருவிதமான இருக்கமான, முட்டுக்கட்டைகளுடன் இந்தத் துறைகள் செயல்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பது தெரிகிறது.

ஆகையால், இவற்றுகெல்லாம் மாற்றாக, இந்தியாவில் சோலார் மின்சக்தி பயன்பாடு இனி வரும் காலங்களில் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் நிலவுகின்றன. சோலார் தொழில் நுட்பம் மேம்பட்டு வருவது, உற்பத்தி செலவு குறைந்து வருவது, சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய ஏலத்தில் பங்கெடுத்தது என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த சோலார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் / மின் பகிர்மானம் செய்யும் நிறுவனங்கள் / நிதி உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள் அனைத்துக்குமே ஒரு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக பார்க்கப்படுகிறது’’ என்றார்.


இவர் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும்பட்சத்தில் பெட்ரோலிய மற்றும் நிலக்கரி சார்ந்த துறைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் காற்றாலை, சூரியசக்தி ஆகியவை சார்ந்த துறைகளும் நிறுவனங்களும் அபரிமிதமாக வளர்ச்சி அடையும் என்றும் பங்குச் சந்தையில் கணிசமான எழுச்சியை அடையும் என்றும் எதிர்பார்க்கலாம்.


மொத்தத்தில் இந்தப் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் இந்தியாவுக்கு சில சாதகமான அம்சங்களையும் சில பாதகமான அம்சங்களையும் கொண்டுள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் வீரியத்தைப் பொறுத்தே விளைவுகளும் பலன்களும் இருக்கும்.

- ஜெ. சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP