Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் பத்திரங்கள் பத்திரமா? சொத்துக்கள் பத்திரமா?


பத்திரங்களை பாதுகாப்பது எப்படி?


- கே. அழகுராமன், வழக்கறிஞர்


ருவரின் அந்தஸ்து… அது அளவிடப்படும் அளவுகோல்தான் அவர்  பெயரில் வாங்கப்படும் சொத்துக்கள். நீங்கள் வாங்கிய சொத்துக்கள் பத்திரமாக உங்கள் வசம் வந்து சேருவது இவ்வாறான பத்திரங்கள் மூலமாகத்தான்.... உங்கள் பத்திரங்கள் பத்திரமா?  சொத்துக்கள் பத்திரமா?  என்ன செய்ய வேண்டும் ?

சொத்துக்களை பத்திரப்படுத்தும் பத்திரங்களை பத்திரமாக வைக்க வேண்டியதால்தான் “பத்திரங்கள்” எனப் பெயர் வந்தது. அக்காலத்திலேயே சுவடிகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமாக செய்யப்பட்ட அனைத்தும்கூட ஒருவகையான பதிவுகளே. அதனையே இன்றைய காலத்திற்கேற்ப,  முன்பு கையால் எழுதப்பட்டும் தற்போது கம்ப்யூட்டர் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பதே நமது பத்திரப்பதிவும் அது சார்ந்த நடைமுறையும்.

 

 பதிவு:-

பத்திரங்கள் மூலமாக ஒருவரது விருப்பம், எண்ணம் போன்றவை செயலாக்கம் பெறப்பட்டு உயிரூட்டும் விதமாக சட்டப்பூர்வமாக செல்லத்தக்க விதத்தில், ஆவணங்களாக ஏற்படுத்தப்பட்டு மோசடிகளை தவிர்க்கும் விதமாக ஒரு நபருக்கு ஒரு சொத்து எந்த பிரச்னையுமின்றி , பிறர் உரிமை கோராதவாறு அந்நபரை சென்றடைவதற்கு வழி வகை செய்து தருவதே "பதிவு" எனப்படும். உங்கள் சொத்துக்காக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் பத்திரமாக உள்ளதா? என்ன செய்ய வேண்டும்?  எவையெல்லாம் பத்திரப்படுத்த வேண்டிய ஆவணங்கள்?  எப்படி பத்திரப்படுத்த வேண்டும்?


ஒரு சொத்தை,  கிரயத்தொகையான பிரதிபலனை (Sale Consideration) கொடுத்து, விற்பவர் உங்கள் பெயருக்கு  எழுதிக்கொடுத்து,  உங்கள் பெயருக்கான உரிமை மாற்றம் (Title Transfer) செய்து கொடுத்து, அந்தப்   பதிவு முடிந்த பின் சில வாரங்களில் சம்மந்தப்பட்ட பதிவு  அலுவலகம்   சென்று  பதிவு செய்யப்பட்ட கிரயப்  பத்திரத்தினை (Sale Deed) திரும்பப் பெறுதல் வேண்டும். அந்தக்  கிரய  பத்திரத்துடன்  நகல் சேர்த்து பதிவு செய்யபட்டிருப்பின், அதனையும் மறக்காமல் திரும்பப்பெறுதல் வேண்டும். இப்போது உங்கள் சொத்துக்கான ஒரிஜினல்  பத்திரங்கள் உங்கள் வசம் வந்துவிடும்.


சரி பார்த்தல் :-


பதிவான  பத்திரத்தின்  அனைத்து பக்கங்களிலும்  விற்ற  நபரின்  கையொப்பம், அவரது  அடையாள அட்டை விபரங்கள், பதிவாளர் கையொப்பம், ஸ்கேன் செய்து கொண்ட விபரங்கள், குறைவான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி இருந்தால்  அது குறித்த விபரங்கள், புகைப்படங்கள் களப்பணி மேற்க்கொள்ளப்பட்டிருப்பின் சொத்தின்   மதிப்பு சரி என்ற சான்றிதழ், உங்கள் ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட   எண் ,  ஆவணத்தின்   மொத்தப் பக்கங்கள்  என  அனைத்தையும் சரிபார்த்தல் அவசியம்.


இந்த அசலுடன், சம்பந்தப்பட்ட  இதர மூல ஆவணங்களின் ஒரிஜினல், அதன் தாய்பத்திரங்களின் நகல்கள்,  வில்லங்கமில்லா சான்றிதழ்கள், பட்டா, சிட்டா, போன்ற வருவாய் துறை  ஆவணங்கள், வரி ரசீதுகள், லே அவுட் பிளான் மற்றும் லீகல் ஒபீனியன் பெறப்பட்டிருந்தால் அதனையும் இணைத்துக் கொண்டால் பின்னாளில், நாம் அந்த சொத்தினை அபிவிருத்தி செய்யும் போதோ, விற்பனை செய்யும் போதோ, குழம்பி நிற்க வேண்டிய அவசியமில்லை.


இவை அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கோப்புதான் நமது சொத்திற்கான பத்திரப்படுத்த வேண்டிய பத்திரங்கள்.

எப்படி ?


பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக  "லேமினேஷன்" செய்தல் கூடாது. ஆவணங்களின் நம்பகத் தன்மை பின் வரும் நாட்களில் கேள்விக் குறியாகிவிடும்.


ஆவணங்களை தனித் தனியே பிரித்து, தைத்து வைத்தல் நல்லது. ரப்பர் பேண்ட், கிளிப்புகள் போன்றவைகளை பத்திரங்களை பத்திரப்படுத்தும் போது தவிர்த்தல் நல்லது.


அடுத்து, ஆவணங்களை பாலித்தீன் கவரில் போட்டு, அதற்குள் அந்துருண்டை போன்ற ரசாயன பொருட்களை போட்டு வைப்பதன் மூலம்  ஆவணங்கள் பாழ்படும் அபாயம் அதிகம்.


பத்திரங்களை சாதாரண  ஃபைல்களில் வைத்து பத்திரப்படுத்துவதே  நல்லது. முடிந்தால் அனைத்து  ஆவணங்களையும்  தேதிப்படி  வரிசைப்படுத்தி  பென்சிலால் பக்க எண்கள் கொடுத்து வைக்கலாம்.
பயணங்களின் போது, ஒரிஜினல் மற்றும் இதர பத்திரங்களை பத்திரமாக கையாள்கிறோம் என சுமந்து செல்வதை தவிர்த்தல் வேண்டும்.


அடிக்கடி பத்திரங்களை எடுத்து, நல்ல சூரிய வெளிச்சத்தில்  ஒவ்வொரு தாளாக, தனித்து, பிரித்து, சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவ்வாறே பத்திரப்படுத்தி வைத்தாலே போதுமானது.


வங்கி  லாக்கர்களில்  வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை, ஆண்டுக்கு இரண்டு முறையாவது இவ்வாறு, எடுத்து, வெளி உலகை காட்டிய பின்பு மீண்டும் பெட்டகப்படுத்தலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ