Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் நம் தலைகளுக்கு மேலே கூகுளின் "ப்ராஜக்ட் லூன்" பலூன்

லகம் முழுவதும் தேடு பொறிக்கு பேர் போன கூகுள் நிறுவனம், "ப்ராஜக்ட் லூன்" என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் பட்டிதொட்டியெல்லாம் இணைய சேவை வழங்கும் திட்டத்தைத் தொடங்க உள்ளது.

அது என்ன "ப்ராஜக்ட் லூன்":

கம்பியில்லா இணைய சேவையை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த ப்ராஜக்ட் லூன்.

15 மீட்டர் அகலமும், 12 மீட்டர் உயரமும் கொண்ட ஹீலியம் வாயு அடைத்த பலூன்கள் காற்றில் 20 கிமீ உயர்த்தில் (விமானங்கள் பறக்கும் உயரத்திற்கும் மேல்) ஸ்ட்ரெட்டோஸ்பியர் அடுக்கில் பறக்க விடப்படும்.

இந்த பலூன்கள் செல்போன் டவர்களைப் போல செயல்படும். இவை அலைக்கற்றை சிக்னல்களைப் பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள சோலார் பேனல் அமைப்பு அது இயங்குவதற்கான மின்சக்தியைக் கொடுக்கும். பலூன் அது பறக்கும் உயரத்திற்கு ஏற்ப காற்றை சேர்த்தும், வெளியேற்றியும் இயக்கப்படும். இவை காற்றில் மிதந்தபடி இணைய வசதியை வழங்கும்.

இந்த பலூன்களிலிருந்து அலைக்கற்றை சிக்னல்களைப் பெறுவதற்கான ஆன்டெனாவும் அதன் மூலம் இணையத்தை இயக்கும் கருவியும் ஒவ்வொரு பயனாளிக்கும் தரப்படும்.

என்ன பயன்?

கம்ப்யூட்டர்தான் வளர்ச்சிக்கு வித்து என்று மாறிவிட்ட இந்தக் காலத்திலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இணைய சேவை இன்னும் முழுமையாக பரவலாகவில்லை. இந்த ப்ராஜக்ட் பலூன் மூலம் கூகுள் அதை முன்னெடுத்திருக்கிறது.

கம்பிவழியாகவும், டவர்கள் மூலம் வழங்கப்படும் இணைய வசதிகளில் பலவித கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த ப்ராஜக்ட் லூன் அந்தக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து மூலைமுடுக்கெல்லாம் சென்றடையும் தொழில்நுட்பமாக விளங்குகிறது.

மலைப்பிரதேசங்கள், கிராமங்கள் போன்றவற்றில் டவர்கள் அமைப்பது, அவற்றிற்கு மின்சாரம் கொடுப்பது போன்றவை சவால்கள் நிறைந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் இருப்பதால் இந்த பலூன் தொழில்நுட்பம் எளிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதன் மூலம் இணையத்தின் வளர்ச்சியையும், பயன்பாட்டையும் புதுப்புது வேலைவாய்ப்புகளையும் நகரங்களில் மட்டுமல்லாமல் குக்கிராமங்களிலும் ஏற்படுத்த முடியும்.
மேலும், இயற்கைப் பேரழிவுகளின்போது காற்றில் மிதக்கும் இவை எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது. எனவே இதன் மூலம் எந்தச் சூழ்நிலையிலும் இன்டர்நெட் வசதியை வழங்க முடியும்.
எல்லாவற்றையும் விட இந்தியாவில் 3ஜி தொழில்நுட்பம் வழங்கும் 2எம்பிபிஎஸ் இணைய சேவை வேகத்தை விட அதிகமாக 10 எம்பிபிஎஸ் வேகம் வரை இணைய சேவை வழங்க முடியுமாம்.

சந்திக்கும் சவால்கள்:

இந்த பலூனை வடிவமைத்தவர் ராவன் ஏரோஸ்டார். முதலில் அடிக்கடி கீழே விழுந்துவிடும் இந்த பலூன் பின்னர் 6 மாதங்களுக்குக் காற்றில் மிதக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பலூன்கள் கீழே விழும்போது மின்சாரக் கம்பிகளில் விழுந்தால் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் நடக்கவும், மின் துண்டிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஏர்டெல், ஏர்செல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களெல்லாம் 3ஜி, 4ஜி என்று அறிவித்துக்கொண்டிருக்க, கூகுள் அறிவித்துள்ள இந்த "ப்ராஜக்ட் லூன்" அறிவிப்பு இன்டர்நெட் பிரியர்கள் அனைவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. விரைவில் இந்த பலூன்கள் நம் தலைகளுக்கு மேலே பறக்கலாம்.

 "ப்ராஜக்ட் லூன்"  குறித்த வீடியோ:

-ஜெ. சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ