Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக்கின் புதிய சேவைக்கு ஆபத்து! ஆதரவு கொடுக்க நீங்கள் தயாரா?


ஃபேஸ்புக் மிகத் தீவிரமாக தனது புதிய 'ஃப்ரீ பேசிக்ஸ்' சேவைக்கு ஆதரவு தேடி வருகிறது. சில வாரங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் அனைவரிடமும் ஆதரவு கேட்டதோடு நண்பர்களுக்கும் பரிந்துரைக்கச் சொல்லி கேட்டது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக, 'மிஸ்டு கால்' கொடுத்து ஆதரவு தருமாறு செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களையும் கொடுத்து வருகிறது. அப்படி ஃபேஸ்புக்கின் 'ஃப்ரீ பேசிக்ஸ்' சேவைக்கு என்னதான் பிரச்சனை?

உலகம் முழுவதும் இணைய சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. கூகுள், ஃபேஸ்புக் அதில் முன்னணியில் இருக்கின்றன. அந்த முயற்சியில் ஃபேஸ்புக் 'ஃப்ரீ பேசிக்ஸ்' ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

'ஃப்ரீ பேசிக்ஸ்' சேவைகள்:

ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் சமீபத்தில் அறிமுகப்படுத்தியதுதான் இந்த 'ஃப்ரீ பேசிக்ஸ்' ஆப். இந்த ஆப்பை ஒருவர் தனது மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்வதன் மூலம், இணையத்தில் சில அடிப்படை சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவை தவிர பிற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். இதுதான் இந்த 'ஃப்ரீ பேசிக்ஸ்' சேவையின் சுருக்கம்.
இந்தச் சேவையை இந்தியாவில் நிறுவுவதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

எதிர்ப்பும் தடையும்:

இலவசமாக இணைய வசதி கிடைக்கிறது என்றால் நல்லதுதானே என்கிறீர்களா? இல்லை, இதிலும் சில சிக்கல்கள் உள்ளன என்றும் இதனால் 'நெட் நியூட்ராலிட்டி' இல்லாமல் போய்விடும் என்றும் மேலும் இந்த 'ஃப்ரீ பேசிக்ஸ்' சேவைகள் குறித்து ஃபேஸ்புக் தெளிவான விளக்கம் தரவில்லை என்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த 'ஃப்ரீ பேசிக்ஸ்' சேவைகள் மூலம் சில அடிப்படை சேவைகள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், புகைப்படம், வீடியோ போன்றவற்றை தரவேற்றம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தச் சேவைகள் ஃபேஸ்புக்கில் இலவசமாகவே உள்ள நிலையில் இந்த 'ஃப்ரீ பேசிக்ஸ்'  எந்த வகையில் நம்முடைய காசை மிச்சம் பிடிக்க உதவப் போகிறது என்பது சந்தேகம்தான்.

அப்படி இலவசமாகப் பயன்படுத்தும் சேவைகள் என்றால் எதற்காக நம்முடைய மொபைலில் மொபைல் டேட்டாவை 'ஆன்' நிலையில் வைத்திருக்க வேண்டும். அதே சமயம், மொபைல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் இந்த சேவைகளுக்கும் இடையிலான தெளிவான உடன்படிக்கை ஏதும் இல்லை. இப்படி பல வகையிலும் அதற்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கவே ட்ராய் தற்காலிகமாக இந்தச் சேவையை இந்தியாவில் முடக்கியுள்ளது.

என்னவென்று தெரியாமலேயே ஆதரவு:

இந்தத் தடையை அடுத்தே இந்தியாவில் அடிப்படை இணைய தேவையை பூர்த்தி செய்யும் 'ஃப்ரீ பேசிக்ஸ்' திட்டத்தை ஆதரக்கிறீர்களா? ட்ராய்க்கு தெரிவியுங்கள் என்று ஃபேஸ்புக் அனைத்து ஃபேஸ்புக் பயனாளிகளிடமும் ஆதரவு கேட்டு ஒரு தானியங்கி விண்டோவை உருவாக்கியது. இது என்ன ஏதென்று தெரியாமலே பலர் ஆதரவு அளிக்க தொடங்கியதோடு நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டனர். பின்னரே எல்லோருக்கும் அந்தச் செய்தியின் நோக்கம் புரிந்தது. அதற்குள் ஃபேஸ்புக் 'மிஸ்டு கால்' ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

இந்த 'ஃப்ரீ பேசிக்ஸ்' சேவைக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தெளிவான விளக்கம் அளித்த பின்னர்தான் ட்ராய் அதற்கு அனுமதி அளிக்கும். அதற்குமுன் ஃபேஸ்புக்குக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும். 
 

- ஜெ.சரவணன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ