Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிரேடிங் ரிப்போர்ட் - அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் ஏலக்காய் விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. இந்த நிலையிலும் ஏலக்காய் விளையும் பகுதிகளில் மழைப்பொழிவு கணிசமாக இருந்ததால் வரும் பருவத்தில் ஏலக்காய் விளைச்சலை அதிகரிக்கும் ஆர்வத்தில் விவசாயிகள் உள்ளனர்.

வேளாண் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2014-15) ஏலக்காய் விளைச்சல் 22,000 டன்னாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 21,000 டன்னாக இருந்தது. இந்த கணிப்பினாலும் விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்த இருப்பதாலும் ஏலக்காய் வரத்து அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏலக்காய்க்கான தேவை சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்பது விவசாயிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிடங்குகளில் உள்ள ஏலக்காய் இருப்பும் தேக்கமடையும் நிலை உருவாகி உள்ளது. இதனால் ஏலக்காய் முக்கியச் சந்தைகளில் விலை குறைந்தது. கடந்த புதன் அன்று கிலோ ஏலக்காய் விலை 3.85% குறைந்து 686 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இந்த நிலையில் வரும் வாரங்களில், ஏலக்காயின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதாலும், சந்தையில் ஏலக்காய்க்கான தேவையும் குறைந்து காணப்படுவதாலும், விலை மேலும் குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

 

அட்டவணை தகவல்கள் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டவை

மஞ்சள் (Turmeric)
 
 
இரண்டு மாதங்களாக விலை குறைந்து வர்த்தகமான மஞ்சள், கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் சற்று உயர்ந்து வர்த்தகமானது. ஆனால் கடந்த வாரத்தில் மீண்டும் மஞ்சள் விலை குறைந்தது.

இதற்கு மஞ்சளுக்கான தேவை அதிகரிக்காததே காரணம். வரும் வாரங்களில் பண்டிகைகள் உள்ள நிலையில் மஞ்சளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வட மாநிலங்களில் பொங்கல் பண்டிகை பெருமளவில் களை கட்டாது என்பதால் மஞ்சளுக்கான தேவையில் எந்த மாற்றமுமில்லை.

ஈரோடு சந்தையில் கடந்த புதன் கிழமையன்று குவிண்டால் மஞ்சள் ரகத்திற்கேற்ப 9900 ரூபாய் முதல் 9600 ரூபாய் வரை வர்த்தகமானது. இது முந்தைய நாளை விட ரூ. 200 குறைவு. இந்த நிலையில் முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரிக்கும் என்ற நிலை இருப்பதால், தற்போது இருப்பில் உள்ள மஞ்சளை விற்க வேண்டிய அழுத்தம் வியாபாரிகளுக்கு உருவாகியுள்ளது. இதனால் வரும் வாரங்களிலும் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்பு உள்ளது.
 

ஜீரகம் (Jeera)


முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரித்திருந்த போதிலும் ஜீரகம் விலையின் ஏற்ற, இறக்கங்கள் ஒரு கட்டுக்குள்ளேயே இருந்தன. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதே காரணம்.

அரசு வேளாண் துறை தரப்பில் 2014-2015 (ஜூலை-ஜூன்)க்கான ஜீரக விளைச்சல் 599000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 514000 டன்னாக மட்டுமே இருந்தது. இதனால் வரத்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜீரகம் அதிகம் விளையும் குஜராத்தில் விளைச்சல் நன்றாக இருப்பதால், முக்கியச் சந்தைகளில் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விலை குறையும் என்று வியாபாரிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர். மேலும் தேவை அதிகரிக்காதபட்சத்தில் ஜீரக இருப்பு, தேக்க நிலையை அடையும் சூழலும் உள்ளது. இதனால் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனாலும் ஜீரகத்துக்கான வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை குறைவு பெரிய அளவில் இருக்காது என்று நம்பலாம்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ