Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

21. சும்மா வருமா வேலை...?


             
நேருக்கு நேர்

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி


'ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கே...?'

'உனக்கென்ன.. ஈசியா கேட்டுருவே... இன்டர்வியூவுக்குப் போறது நான் தானே...?'

'இன்டர்வியூவுக்குப் போனா...? பதட்டப்படணுமா...? ஒன்னு தெரிஞ்சுக்கோ... பதட்டம் இல்லாம நார்மலா இருந்தாதான் கேள்விங்களுக்கு நல்லா தெளிவா பதில் சொல்ல முடியும்...'

மிகச் சரியான அறிவுரை. ஆனாலும் யாரும் கேட்பதாக இல்லை. ஏன் இத்தனை பதட்டம்...? நேர்முகத் தேர்வு அதாவது 'இன்டர்வியூ' பற்றிய தெளிவின்மைதான் காரணம். 


இன்டர்வியூவுக்கு நம்மைத் தயார் செயார் செய்து கொள்வதற்கு முன்பாக, 'இன்டர்வியூ'ன்னா என்ன..? அது எதுக்காக வைக்கறாங்க... அங்கே நம்ம கிட்ட என்னவெல்லாம் கேட்பாங்க.. நம்ம கிட்ட இருந்து, என்னதான் எதிர்பார்க்கறாங்க... இதை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே ஆவணும்..'

இன்டர்வியூவுல பல விதம் இருக்கு. அரசாங்க வேலைக்கு நடக்கிற இன்டர்வியூ ஒரு விதமா இருக்கும். அதுவே தனியார் நிறுவனங்கள்ல நடத்துறது முழுக்கவுமே வேற மாதிரி இருக்கும். 'காம்பஸ் இன்டர்வியூ', 'வாக் இன் இன்டர்வியூ', 'டெக்னிகல் இன்டர்வியூ' 'ஃபார்மல் இன்டர்வியூ'..... எத்தனை இருக்கு!

ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் மற்றதில் இருந்து மாறுபட்டது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்..?எல்லாவற்றையும் ஒன்றே போல்தான் பார்க்கிறோம். அதுவே தவறுதானே...? அப்படி இருக்கும் போது, இன்டர்வியூவுக்கான நம்முடைய 'தயாரிப்பு' மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்...?

முதலில் அரசாங்கப் பணிக்கான நேர்முகத் தேர்வு.
இது பெரும்பாலும், மிகப் பெரிய அளவில் எழுத்துத் தேர்வு (போட்டித் தேர்வு) நடைபெற்று, அதில் தேர்ச்சி பெற்ற பிறகே,
நடைபெறும். உயரிய பதவிக்கு எனில், எழுத்துத் தேர்வுமே கூட இரண்டு நிலைகளில் நடைபெற்று, அதன் பிறகே
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோம்.

இந்த நிலையில், பெரும்பாலான அரசுப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு, 2016 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட இருக்கிறது என்ற பிரதமரின் அறிவிப்பு, பெரிதும் வரவேற்கத்தக்கது.

அரசுப் பணி மட்டுமல்ல; வங்கிகள், இன்ஷூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் கூட, மிகப் பெரிய அளவில்,
எழுத்துத் தேர்வு(கள்) வைத்து, அதன் மூலமே, நேர்முகத் தேர்வுக்கு, தேர்வு செய்யப் படுகின்றனர். இத்தகைய நடைமுறை எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் இன்டர்வியூவின் கருத்துரு அதாவது 'கான்செப்ட்', பிற 'இன்டர்வியூ'க்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

மேற்சொன்ன உதாரணங்களில், எழுத்துத் தேர்வு என்பது, போட்டியில் இருந்து 'வடிகட்டுகிற' ('filtering') பணியைச் செய்து விடுகிறது. அதன் முடிவில், 'இன்டர்வியூ' என்பது, தேர்ச்சிக்கான ஒரு வழிமுறையாக ('process of selection') மட்டுமே நடத்தப்படுகிறது. (written examination is meant to be a process of filtering whereas interview is purely a process of selection)
என்ன புரிகிறது...?

எப்படி ஒருவனை 'வடி கட்டலாம்' என்கிற எண்ணத்துடனேயே நடத்தப்படுவதால், எழுத்துத் தேர்வு ஒரு வகையில், எதிர்மறை நோக்கத்தை அடிப்படையாய்க் கொண்டு இருக்கிறது. ஆனால், நேர்முகத் தேர்வு என்பது, தேர்ச்சிக்கான வழிமுறை. 'எப்படி இவரைத் தேர்ந்து எடுக்கலாம்..?' என்கிற நேர்மறைச் சிந்தனையே இங்கே முக்கிய இடம் வகிக்கிறது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று, நேர்முகத் தேர்வுக்குப் போகிறவர் முதலில் ஒன்றை நன்கு நினைவில் கொள்ள வேண்டும். 'வடிகட்டுகிற' கட்டத்தைத் தாண்டி வந்தாயிற்று'!

தன்னைத் தேர்வு செய்யத்தான் அழைத்து இருக்கிறார்கள்' என்பது கூட பலருக்கு மறந்து போகிறது. நேர்முகத் தேர்வில், கேட்கப்படுகிற ஒவ்வொரு கேள்வியுமே, ஒருவரைத் தேர்வு செய்ய வழி இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கிற வகையில்தான் இருக்கும். தானாகத் தன்னுடைய குறைகளை வெளிக் காட்டினால் ஒழிய, ஒருவருடைய வாய்ப்பு பறி போக வழியே இல்லை.



 

சரி. நேர்முகத் தேர்வு பற்றிய 'இலக்கணக் குறிப்புகள்' சிலவற்றைப் பார்ப்போமா..?

1. இது, கேள்வி-பதில் பகுதி அல்ல. (it is not meant to be a question - answer session.)
ஒருவர் அல்லது பலர் கேள்வி கேட்க, அத்தனைக்கும் சரியான பதில் தருகிறவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தவறு.
'சரியான' பதில் அல்ல; நேர்மையான பதில்தான் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.
(it is not the precise answer but an honest answer that fetches more marks) அதாவது, 'தெரியாது' என்கிற நேர்மையான விடையும், தேர்ச்சிக்கு வழி வகுக்கலாம்.

2. பதிலை விடவும், பதில் சொல்கிற விதம்தான் முக்கியம். (it is not the answer but answering that matters)
மென்மையாக, இனிமையாகத் தரப்படும் பதில், அதிக பயன் தரும்.

3. துல்லியமான விடையை விடவும், 'தோராயமான' விடை, கூடுதல் நன்மை பயக்கலாம்.
மே மாதம் 15ஆம் தேதி, சென்னையில் வெயிலின் அளவு என்ன..? என்று கேட்டால், 42.5 டிகிரி செல்சியஸ் என்று சொல்வதைக் காட்டிலும், சுமார் 42 டிகிரி இருக்கக் கூடும் என்று சொல்வதே சிறப்பு. கேள்வியின் நோக்கமும் அதுதான்.
பொதுவாக தட்ப வெப்பம் குறித்த புரிதல் இருக்கிறதா என்பதை அறிவதற்கான வினாதானே இது...? ஆகவே, வினாவின் நோக்கத்துக்கு ஏற்றவாறு, 'முன் பின்' அமைந்த பதிலை சொல்வதே சமயோசிதம் ஆகும். இதைப் புரிந்து கொள்ளாமல் பலர், 'நினைவில்லை... தெரியாது..' என்றெல்லாம் சொல்லி 'நேர்மைக்கு' மதிப்பெண்களை எதிர்பார்ப்பதும் நடக்கிறது.

4. 'இன்டர்வியூ' நடத்துபவரைத் திருப்தி செய்வது பலன் அளிக்காது. அது நமது பணி அல்ல. பல சமயங்களில் இதுதான் நடக்கிறது. கேள்வி கேட்கிறவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று தானாக யூகித்து, அவருக்கு 'ஏற்றாற் போல்' பதில் சொல்வதெல்லாம் கூடவே கூடாது. கேட்பவரின் பின்னணி என்னவாக இருக்கும் என்று கணித்து, பதில் சொல்கிற போக்கு ஆபத்தானது. கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

5. நாம் நாமாக இருத்தல் வேண்டும். எந்தக் கேள்விக்கும், இயல்பாக நம்முடைய கருத்தை வெளியிடல் வேண்டும். மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதற்காக, செயற்கையான பதில் தந்து 'மாட்டிக் கொள்ள' கூடாது.

6. மனப்பாடம் செய்து ஒப்பித்தல்; நாடக பாணியில் நடந்து கொள்ளல், பதில் சொல்லுதல்; அதீத ஒப்பனை மற்றும்  கண்ணைப் பறிக்கும் விதத்தில் உடை அணிந்து கொள்ளல்; பதட்டம், தேவைக்கு அதிகமான பணிவு... தவிர்க்கப் பட வேண்டியன.


 

சுருக்கமாகச் சொல்வதானால், எவ்வித சிறப்புத் தயாரிப்பும் இன்றி, நேரடியாகக் 'களத்தில்' இறங்கி, எளிதில் வெற்றி பெற, நேர்முகத் தேர்வு, மிகச் சிறந்த வழி.

இதுவரை பார்த்தது, அரசுப் பணிகளுக்கானது. தனியார் துறைக்கு...?

(தொடரும்)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ