Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"எங்கேயும் எப்போதும்" பத்திரங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர்...!


- கே. அழகு ராமன், வழக்கறிஞர்
உயர்நீதி மன்றம், சென்னை.

ழை, வெள்ளம், தீ இன்ன பிற இன்னல்கள்.  எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. உங்கள் ஆவணங்களும், சான்றிதழ்களும் பத்திரம். இதோ, ஆன்லைன் ( Onlin)e  மூலமாகவே  அவைகளை நீங்கள் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே  தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ, அனுப்ப முடியும். ஆம். ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆவணங்களையும் தனித் தனியே அரசாங்கத்தின் இணைய பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்தும் நோக்கோடு, அதே சமயம் "பேப்பர் இல்லா ஒரு செயல்பாடு" (Paperless Governance) என்ற  சுற்றுச் சூழலை பாதுகாக்கும்  எண்ணத்துடனும்  இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பது தான் டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இந்த "இணைய பெட்டகம்". சுருக்கமாக சொன்னால் இது ஒரு “Online Document Storage  Facility”.

தேவைகள் :

இதனை பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் அவசியத் தேவைகள்.  ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது  இருப்பிட உறுதிக்கென  பிற ஆவணங்களை கொடுத்து  அதன் சரி பார்ப்பிற்கு பின்னர் இதனை பயன் படுத்தமுடியும்.

பதிவு:

இதில் பதிவு செய்த பின்புதான் இந்த பெட்டகத்தை  நீங்கள் பயன்படுத்த இயலும். அரசின் இந்த இணையதளம் சென்று உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்த பின்பு, நாம் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ் வோர்ட் எஸ் எம் எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும்.
உடனடியாக அந்த பாஸ் வோர்டை பதிவு செய்த பின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) / பாஸ் வோர்டை குறிப்பிட்டு உங்களுக்கான இப்பெட்டகத்தை பயன்படுத்தி, உங்கள் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையத்தில் பெட்டகப்படுத்தலாம்.

ஆவணங்களின் சேமிப்பு:

     நமது ஆவணங்கள்  மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, அதனை மின்வருடல் ஆவணங்களாக மாற்றிய பின்பு  இந்த  இணைய பெட்டகத்தில் மின் கோப்புகளாக  சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி பைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும். எல்லாம் முடிந்து இந்த பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப் பக்கத்திற்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற உங்களால்  ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த  இணைய தளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.

அளவு:  

தற்போது இப்பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவிற்கான  பைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன் பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.

பாதுகாப்பு:

அனைத்து பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு  மற்றும் மையமானது  ஐ எஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால் உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படுவதில்  சந்தேகமில்லை.  அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு “தானியங்கி நேரப் பாதுகாப்பு (Auto Time Log-Out) மூலம்  தடை செய்யப்படும். பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை, குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாத பட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.

ஆவணங்களின் பயன்பாடு:

இணைய  கையெழுத்து (e-Sign)  எனும் தொழில் நுட்பம் இந்த இணைய பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்த உள்ளது. தற்போது  கம்பெனி பதிவகங்கள்  மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த  இணைய கையெழுத்து  எனப்படும்  இணைய கையெழுத்து பெரிய  அளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில்  இந்த டிஜி லாக்கர் -ல்  இணைய கையெழுத்து தொழில் நுட்பம் இந்த பெட்டகத்தில் உள்ள பைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்துச் செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டிய ஆவணங்களைக்கூட இம்முறையில் அனுப்ப முடியும். மேலும் ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இப்பெட்டகத்தில் இருந்து  பதிவேற்றி  நேரடியாக அனுப்ப இயலும்.  இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.
இந்த தளத்தில் இருந்து செய்யப்படும் "ஆவணப் பதிவேற்றத்திற்கு" அரசு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள் , இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படுவதில்லை

நேஷனல் புள்ளி விவரப்படி இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான பயன்பாட்டாளர்களுடன், சுமாராக பதினான்கு லட்சம் ஆவணங்கள் பதிவேற்றி  பாதுகாக்கப்பட்டுள்ளது.
Any Time, Any Where, Share your Documents Online  என்ற  கோட்பாட்டில் அரசால் துவங்கப்பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய  அரசின்  பெட்டகம் இது.

மேலும் விவரங்களுக்கு www.digilocker.gov.in என்ற வலை தளத்தை காணலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ