Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேள்வி - பதில்

கேள்வி:

நான் 02.04.1997 தேதியில் வீட்டு மனையை ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மூலம் கிரையம் பெற்றேன். கிரையப் பத்திரமும் கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் 15.12.1997 ல் இந்தச் சொத்து தொடர்பாக 1983 ஜனவரி முதல் வில்லங்கச் சான்று பெற்றேன். அதில் நான் கிரையம் வாங்கிய விபரம் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் 21.04.2006 அன்று 01.01.1987 முதல் மற்றுமொரு வில்லங்கச் சான்று பெற்றேன். அந்தச் சான்றிதழிலும் நான் கிரையம் வாங்கிய விபரம் மட்டுமே இருந்தது. மேலும் 2012-ல் மேற்படி மனைக்கு வட்டாட்சியர் மூலம் பட்டா மாறுதல் சான்று பெற்றுள்ளேன். தற்போது 29.09.2015 அன்று மேற்படி வீட்டுமனை சொத்தில் வில்லங்கம் பார்த்தபோது எனக்கு கிரையம் செய்து கொடுத்த மூன்று மாத காலத்திற்கு பிறகு, எனக்கு கிரையம் கொடுத்த அதே ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வேறொரு நபருக்கு 04.07.1997-ல் விற்பனை உடன்படிக்கை (Sale Agreement) செய்திருப்பதாக உள்ளது. தற்போது அந்த வில்லங்கத்தை சரி செய்ய கீழ்கண்ட சந்தேகங்களுக்கு தேவையான சட்ட உதவி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


1.மாவட்ட பத்திர பதிவு அலுவலர் அவர்களுக்கு மேற்படி வில்லங்கத்தைச் சரி செய்ய அதிகாரம் உண்டா.
2.பவர் கொடுத்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டாத கூறப்படும் நிலையில் உடன்படிக்கை செய்தவர்கள் இருவரும் சேர்ந்து முறைகேடாக செய்யப்பட்ட உடன்படிக்கை பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியுமா.
3. நான் மேற்படி வில்லங்கத்தைச் சரி செய்ய யாரிடம் முறையீடு செய்ய வேண்டும். தயவு செய்து சட்ட உதவி அளித்து வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மா. இராமமூர்த்தி, பண்ருட்டி, மெயில் மூலமாக

பதில்:  
கே.அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.


"உங்கள் கிரயப்பத்திரத்திற்கு பின்பு மூன்று மாதங்கள் கழித்து ஏற்படுத்தி இருந்ததாக கூறப்படும் கிரய உடன்படிக்கை, உங்களது 15-12-1997 தேதியன்று பெறப்பட்ட முதல் வில்லங்க சான்றிதழிலேயே இடம்பெற்றிருத்தல் வேண்டும். இல்லையென்றாலும் அந்த தவறினை எவ்விதத்திலும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இயலாது.


எப்படி இருப்பினும், உங்களுக்கு விற்பனை செய்த அதே நபரே, அந்த சொத்தினை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்ய மேலும்  ஒரு ஒப்பந்தம் செய்திருந்தால் அது ஒரு மோசடியான ஒப்பந்தமே. மேலும் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த கிரய உடன்படிக்கையின் சான்றிட்ட நகலை உடனடியாக  சம்பந்தப்பட்ட பதிவகத்திலிருந்து பெற்று, அதில் கிரயத்துக்காக குறிப்பிட்டுள்ள கால அவகாசத்தை பாருங்கள். 18 ஆண்டுகளாக அந்த உடன்படிக்கையை நடப்பில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை.


இவ்வாறான வில்லங்கத்தை சரி செய்யும் அதிகாரம்  மாவட்ட பத்திரப் பதிவு அலுவலருக்கு  கிடையாது. பவர் கொடுத்திருந்த நபர் இறந்திருந்தால், அன்றோடு அந்த பவர் பத்திரம்  காலாவதியாகிவிடும். இவ்வில்லங்கத்தை சரி செய்ய,  இவையெல்லாம் குறிப்பிட்டு, வில்லங்க சான்றிதழில் கண்டுள்ள கிரய உடன்படிக்கை குறித்த  குறிப்பினை "காலாவதியாகிவிட்ட செல்லாத ஒரு ஒப்பந்தம்" என விளம்புகை உத்தரவு கோரி (Declaration) சிவில் நீதிமன்றத்தை  அணுக வேண்டும்.  உத்தரவுக்குப் பின்பு  அந்த குறிப்பினை  நீக்கிய விவரத்தை  சார்பதிவகத்தில் பதிவு செய்து வில்லங்க சான்றிதழில் இடம்பெறச் செய்யலாம்."
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ