Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்

மெட்டல் & ஆயில்!

கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தினேஷ் பாலாஜி விளக்குகிறார் .

கச்சா எண்ணெய்!
“கடந்த இரண்டு வருடங்களில் கச்சா எண்ணெய்யின் விலை இறங்கு முகமாகவே உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை இறக்கம் 2014-ம் ஆண்டிலே துவங்கிவிட்டது. ஆனால், 2015-ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் அதிக உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து அதன் விலை சரிந்தது. பிரண்ட் கச்சா எண்ணெய்யின் விலையானது 36% சரிந்து, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி 2016-ம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் மீதிருந்த தடை நீக்கப்பட்டதால், மீண்டும் ஈரான் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு நாளைக்குக் கூடுதல் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும். இதன் விளைவாக அதன் விலை மேலும் சரிவதற்கான வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்யின் ரெசிஸ்டன்ஸ் ரூ.2,520, சப்போர்ட் ரூ.2,420. கச்சா எண்ணெய்யின் விலை ரூ.2,520 என்ற நிலைக்கு மேல் சென்றால், விலை ரூ.2,700 வரை உயரலாம். அதுவே விலை ரூ.2,520க்குக் கீழ் முடிந்தால் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது.’’



தங்கம்!
தங்கத்தின் விலை கடந்த வாரம் முழுவதும் சரிவிலே வர்த்தகமானது. கடந்த வாரத்தின் முதல் நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,076 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால், விலை படிப்படியாக குறைந்து, கடந்த வியாழன் அன்று 1061 டாலருக்கு வர்த்தகமானது. 2015ம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளான வியாழன் அன்று விலை சிறிய மாற்றம் இருந்தது. ஆனால், கடந்த மூன்று வருடமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து இறக்கத்திலே இருக்கிறது.

புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்காவில் சந்தைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை அடுத்துவரும் வாரங்களில்தான் தெரியவரும். அதாவது, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி இனி எப்போது வட்டி விகிதத்தை உயர்த்தும், அதற்கான சாதகமான சூழல் சந்தையில் உள்ளதா போன்றவற்றை முதலீட்டாளர்கள் அதிகமாகக் கவனிக்கிறார்கள்.

மேலும், வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) அன்று அமெரிக்காவின் வேலையில்லாதவர் விவரம் வெளியாக உள்ளது. இது வட்டி விகித உயர்வுக்கு முக்கிய கராணியாக உள்ளது. இந்த விவரத்தின் அடிப்படையில்தான் விரைவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா அல்லது காலதாமதம் ஆகுமா என்பது தெரிய வரும். வருகிற மார்ச் 2016-ல் வட்டி விகித உயர்வு இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மேலும், வரும் வாரத்தில் அமெரிக்காவின் பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்பு விவரம், 2015 டிசம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற்ற ஃபெட் வங்கியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் குறிப்புகள் ஆகியவை வெளியாக உள்ளது. எனவே, வரும் வாரத்தில் அமெரிக்காவில் வெளியாக உள்ள விவரங்களின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலைப்போக்கு இருக்கும்.

 

அட்டவணை தகவல்கள்:குட்வில் கமாடிட்டி நிறுவனத்தால் வழங்கப்பட்டவை.


வெள்ளி!
தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலை கடந்த வாரம் முழுவதும் சரிவிலே இருந்தது. அதாவது, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 14.37 டாலரில் இருந்து, 13.84 டாலராக சரிந்துள்ளது.

வெள்ளியின் விலை இனிவரும் நாட்களில் சற்று உயருவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் 2015-ல் வளரும் நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக சரிந்தது. இதனால் தொழில் துறையின் வளர்ச்சியும் மந்தநிலையில் இருந்தது. தொழில் துறையின் வளர்ச்சி அதிகமாக இருந்தால், வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்கும். ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், பேட்டரி தயாரிப்பு, பேரிங் தயாரிப்பு ஆகிய துறைகளில் வெள்ளி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உலக நாடுகளில் வெள்ளியை அதிகமாக இறக்குமதி செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு வருடத்துக்கு 7 ஆயிரம் டன் வெள்ளி இறக்குமதி செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் அடுத்த வட்டி விகித உயர்வு குறித்த முடிவு வரும் வாரத்தில் எடுக்கப்படும். அதன் அடிப்படையில் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

காப்பர்!
காப்பரின் தேவை வெகுவாக குறைந்துள்ள நிலையில்ம் அதனுடைய உற்பத்தி அதிகமாகி உள்ளது. மேலும், காப்பரை அதிகமாக நுகர்வு செய்யும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால், அங்கு இன்னும் பொருளாதார மந்தநிலை சீரடையாத காரணத்தினால், காப்பரின் தேவை குறைந்துள்ளது.

லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு டன் காப்பரின் விலை 0.1% அதிகரித்து, ஒரு டன் 4,375 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால், கட்டுமானம், பவர் மற்றும் காப்பரை பயன்படுத்தும் துறைகளில் இழப்பு 25 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. காப்பரின் விலை கடந்த ஆறரை வருடங்களில் இல்லாத அளவுக்குக் கடந்த மாதம் விலை சரிந்து ஒரு டன் 4,450 டாலருக்கு வர்த்தகமானது. காப்பரின் மொத்த உற்பத்தியில் பாதிக்கு மேல் நுகர்வு செய்யும் சீனாவில் இந்த வருடம் வெறும் 23 மில்லியன் டன்தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கச்சா எண்ணெய்யின் விலை குறைவு, எரிபொருள் விலை குறைவு மற்றும் தொழிலாளர் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக காப்பரை உற்பத்தி செய்யும் செலவும் குறைந்துள்ளது. அதாவது, ஒரு பவுன் காப்பரை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவானது 1.655 டாலரில் இருந்து 1.625 டாலராகக் குறைந்துள்ளது. பொருளாதார சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டால் காப்பரின் விலை உயருவதற்கு வாய்ப்புள்ளது.

இரா.ரூபாவதி

இந்த வாரம் ஏலக்காய் விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் வரத்து குறைந்து காணப்பட்டதால், ஏலக்காய் விலை சற்று உயர்ந்து வர்த்தகமானது. அதே நேரத்தில் ஏலக்காய்க்கான தேவை அதிகரித்து காணப்பட்டதும் விலை உயர்ந்ததற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே விலை குறைந்து வர்த்தகமாகி வந்ததால் கவலை அடைந்த வியாபாரிகள், இப்போது ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமாவதைத் தொடர்ந்து  மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், வெளிநாடுகளிலும் ஏலக்காய்க்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏலக்காய் ஜனவரி மாத ஃப்யூச்சர்ஸ் 3.99% உயர்ந்து,  ஒரு கிலோ ரூ.708.10-ஆக வர்த்தமானது. 

வேளாண் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2014 - 15) ஏலக்காய் விளைச்சல் 22,000 டன்னாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 21,000 டன்னாக இருந்தது. இதன்படி விளைச்சல் அதிகமாக இருக்கும் என்றாலும், தரமான ஏலக்காய் வரத்து இல்லாத காரணத்தினாலும் தேவை அதிகரித்துள்ளபடியினாலும் ஏலக்காய் விலை கட்டுக்குள் வர்த்தகமாகுமே தவிர, விலை குறைய வாய்ப்பில்லை என்று பரவலாக பேசப்படுகிறது.


 

அட்டவணை தகவல்கள் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டவை

மஞ்சள் (Turmeric)
 
 

முக்கியச் சந்தைகளில் மஞ்சளின் விலை ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் தொடக்கத்தில் தேவை குறைந்து காணப்பட்டதால், அதன் விலையும் குறைந்து வர்த்தகமானது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் மஞ்சளுக்கான தேவை சற்று அதிகரித்ததால், விலை உயர்ந்து வர்த்தகமானது. வரும் வாரங்களில் பண்டிகைகள் உள்ள நிலையில் மஞ்சளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. மஞ்சளின் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்டில் குவிண்டால் மஞ்சள் 0.73% உயர்ந்து, ரூ.9,974-க்கு வர்த்தகமாகிறது.

ஆனாலும் மஞ்சளின் பிரதான சந்தையாக உள்ள வட மாநில பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்குப் பெருமளவில் வரவேற்பு இருக்காது என்பதால், மஞ்சளுக்கான தேவை வரம்புக்குள் மட்டுமே உள்ளது. வெளிநாடுகளிலும் மஞ்சளுக்கான தேவை குறைவாகவே உள்ளது.

சமீபத்திய நறுமண பொருட்கள் வாரியத்தின் அறிக்கைப்படி, மஞ்சள் ஏற்றுமதி இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கடந்த காலத்தைக் காட்டிலும் 2,094 டன் மட்டுமே அதிகரித்து 46,500 டன்னாக உள்ளது.  

இந்த நிலையில் முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரிக்கும் என்ற நிலை இருப்பதால், தற்போது இருப்பில் உள்ள மஞ்சளை விற்க வேண்டிய அழுத்தம் வியாபாரிகளுக்கு உருவாகியுள்ளது. ஆனால், வரும் வாரங்களில் பண்டிகைகள் காரணமாக மஞ்சளுக்கான தேவையும் கணிசமாக இருக்கும் என்பதால், மஞ்சள் விலை ஒரு வரம்புக்குள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாக வாய்ப்பு உள்ளது. 

 

ஜீரகம் (Jeera)


முக்கியச் சந்தைகளில் ஜீரக வரத்து அதிகரித்திருந்ததாலும், அதே சமயம் தேவை குறைந்ததாலும் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமானது.

அரசு வேளாண் துறை தரப்பில் 2014 - 2015 (ஜூலை - ஜூன்) ஜீரக விளைச்சல் 5,99,000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 5,14,000 டன்னாக மட்டுமே இருந்தது. மேலும், ஜீரகம் அதிகம் விளையும் குஜராத்தில் விளைச்சல் நன்றாக இருப்பதால், முக்கியச் சந்தைகளில் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், தேவை அதிகரிக்காதபட்சத்தில் தற்போது இருப்பில் உள்ள ஜீரகம் தேக்கநிலையை அடையும் சூழலும் நிலவுகிறது. இதனால் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆனாலும், வெளிநாடுகளில் ஜீரகத்துக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பதன் மூலம் விலை குறைவு பெரிய அளவில் இருக்காது என்று நம்பலாம்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ