Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உரிமைகளைப் பறிக்கும் ஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ்?

ஃப்ரீ பேசிக்ஸ்! டிஜிட்டல் நியூட்ராலிட்டி! நெட் நியூட்ராலிட்டி! கடந்த சில வாரங்களாக கிட்டத்தட்ட அனைத்து இந்திய பத்திரிக்கைகளிலும் வந்த அந்த இரு பக்க விளம்பரத்தை விட மீடியாக்களின் வாதங்களினாலேயே அதிகம் பழகிப்போன வார்த்தைகள் இவை.

ஃப்ரீ பேசிக்ஸ் என்ற பெயர் அடிபடும் இடங்களிலெல்லாம் நெட் நியூட்ராலிட்டியை ஏன் மறுபடியும் தூசி தட்டுகிறார்கள் என்பதே பெரும்பாலான இந்திய பிரஜைகளுக்கு புதிராக இருக்கும்போது இதற்கு சப்போர்ட் செய்யச் சொல்லி மறுபக்கம் விளம்பரங்கள், ஈமெயில் என கதிகலங்க வைக்கிறது ஃபேஸ்புக்!

டிஜிட்டல் நியூட்ராலிட்டியின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரோ நாட்டினரோ இணையதள வாடிக்கையாளர்களோ ஒரே சமமான தரத்தையுடைய இன்டர்நெட்/தொழில்நுட்ப வசதிகளைப் பெறலாம். அதாவது அவர்கள் அனைவரும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வெப்சைட்களை /தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

நெட் நியூட்ராலிட்டி என்பது எல்லா வெப்சைட்களையும் கன்டென்ட்களையும் சமமாக பார்ப்பது. அதாவது எல்லா வெப்சைட்களைப் பயன்படுத்துவதற்கும் ஒரே சமமான கட்டணம் வசூலிப்பது. எந்த பாரபட்சத்திற்காகவும் எந்தவொரு வெப்சைட்டையும் முடக்காமல் இருப்பது. அனைவருக்கும் ஒரே சமமான வேகத்தில் இன்டர்நெட் தேவைகளைப் பூர்த்தி செய்வது.       

ஃப்ரீ பேசிக்ஸ் குறித்து பிரெசிஷன் இன்ஃபோமேடிக் நிறுவனத்தின் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர் புவனேஷ் கூறுகையில் “ ஃப்ரீ பேசிக்ஸ் என்பது டிஜிட்டல் நியூட்ராலிட்டி வகையறா. கல்வி, மருத்துவம் போன்ற அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான சில வெப்சைட்களை முற்றிலும் விளம்பரங்களே இல்லாமல் இலவசமாக தரிசிக்கலாம். இலவசம் தான். ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இலவசம். உதாரணமாக ரூ.50 மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பேக்கிற்கு நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்திருந்தால் உங்களால் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான வெப்சைட்களை  மட்டும் தான் இலவசமாகவும் அன்லிமிடெட்டாகவும் பயன்படுத்த முடியும். வேறு வெப்சைட்களுக்குள் பிரவேசிக்க முடியாது. அதற்கென்று வேறு பேக்கிற்கு சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும்” என்றார்.

இதிலென்ன சிக்கல் ? TRAI முதற்கொண்டு பலரும் இந்த ஃப்ரீ பேசிக்ஸ் –ஐ எதிர்ப்பதற்கான காரணம் என்ன ?

“சமீபத்தில் மகாராஷ்ட்ராவில் ஒரு விவசாயி இந்த ஃப்ரீ பேசிக்ஸ் பயன்படுத்தியதைப் பற்றி படித்தேன். அவர் இதன் மூலம் பருவமழை காலத்திற்கான முன்னேற்பாடுகளை இன்டர்நெட் மூலம் இலவசமாக கற்றவர். கமாடிட்டி சந்தையின் நிலவரத்தை தெரிந்து வைத்துக்கொண்டு அதன் மூலம் சிறந்த ஒப்பந்தங்கள் செய்தவர். இப்பொழுது அவர் புதிய பயிர்களிலும் கால்நடைகளிலும் முதலீடுகள் செய்துள்ளார்.

இவ்வாறு வளர்ச்சியையே காணாத சமூகம் ஒரு பக்கம் முன்னேறி செலவதற்கான அறிகுறியாக இது தென்பட்டாலும் இதில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம். சிக்கல்களின் தொடக்கப்புள்ளி உரிமை மீறல். ஒரு புறம் இது ஒரு முன்னேற்றப்பாதையாக இருந்தாலும் இன்னொரு புறத்தில் முற்றிலும் திறந்த விஸ்தாரமான இன்டர்நெட் உலகத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டு இலவசமாக கிடைக்கும் ஒரே காரணத்திற்காக மட்டுமே குறைந்த வசதிகளுக்குள் குறுகிப் போய் நிற்கும் விவசாயியைக் காணமுடிகிறது.

மக்களுக்கு வசதி செய்து தருகிறோம் என்ற பெயரில் அவர்களைக் குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். ஒருவர் தான் எந்தந்த வெப்சைட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை ஃபேஸ்புக்கே முடிவு செய்வதால் தான் இந்த பிரச்சினையே. மேலும் முக்கியமான சூழலில் நமக்கு மிகவும் உபயோகப்படும் என்று நாம் நினைக்கும் பல வெப்சைட்களுக்குள் நம்மால் நினைத்தவுடன் செல்ல இயலாது. ஃபேஸ்புக் நிறுவனமோ இதனால் ஏற்படும் குறைவான வளர்ச்சிகளை மட்டுமே பிரம்மாண்டமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

விளம்பரங்கள் அற்ற இலவச இன்டர்நெட். எப்படி இது ஃபேஸ்புக்கினால் சாத்தியம் ஆனது. இதனால் ஃபேஸ்புக்கிற்கு கிடைக்கும் லாபம்?

இலவசம் என்ற சொல்லின் தாக்கம் இந்தியர்கள் மத்தியில் அதிகம் இருப்பதால் தான் internet.org என்ற பெயரில் முதலில் ஃபேஸ்புக் வெளியிட்ட அந்த ஸ்கீமை இப்பொழுது Free basics என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஃப்ரீ பேசிக்ஸில் ஃபேஸ்புக் இந்தியாவின் சிறந்த பல தொலைதொடர்பு நிறுவனங்களுடன் டை அப் வைத்திருப்பதால் அதன் மூலம் லாபத்தையும் எளிதில் பார்த்துவிடுகிறது ஃபேஸ்புக்.

மேலும் எந்தந்த வெப்சைட்களை இந்த ஃப்ரீ பேசிக்ஸிற்குள் கொண்டு வருவது எவற்றையெல்லாம் நீக்குவது என்பதை கவனித்து செயல்படும் முக்கிய பொறுப்பு ஃபேஸ்புக் வசம் இருப்பதால் பல வெப்சைட்களும் இந்த ஃபேஸ்புக்கின் வலையில் விழத் தயாராய் இருக்கின்றன.

ஆகவே ஃபேஸ்புக்கிற்கு இதில் லாபம் கிடைப்பது எவ்வளவு இன்டர்நெட் பயன்படுத்துகிறோம் என்பதில் இல்லை. இன்டர்நெட்டில் எவ்வளவு பிரிவுகளைப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் .
ஃப்ரீ பேசிக்ஸ் கேம்பைன் போலவே மோசில்லா பவுண்டேஷனால் துவக்கப்பட்ட இலவச இன்டர்நெட் ஏற்கனவே பங்களாதேஷில் நடைமுறையில் உள்ளது. மேலும் பல நாடுகளில் இத்தகைய வசதிகளை அரசே ஏற்று நடத்துகிறது. நாம் அந்த நிலையை அடைவதற்கு முன்பே TRAI ( Telecom Regulatory Authority of India ) இந்திய இணைய பயனாளர்களிடம் வாக்குகள் சேகரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பலர் இவற்றைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலேயே இதற்கு வாக்களித்திருக்கின்றனர் ” என்கிறார் புவனேஷ்.

ஒடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் TRAI க்கு எழுதிய கடிதத்தில் “ஏழைகள் எவற்றைப் பெற வேண்டும் எவற்றைப் பெறக்கூடாது என்பதை ஃபேஸ்புக் முடிவுசெய்வது அவர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற செயலாகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.        

இந்தியா சமீப காலமாக இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மும்முரம் செலுத்தி வருகிறது. ஆனால் இந்த ஃப்ரீ பேசிக்ஸ் இந்திய மக்களை முற்றிலும் வெளிப்படையான இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள்  (Open Web users) மற்றும் குறுகிய இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள் (Free Basics users) என இரண்டு வகையினராக பிரித்துவிடுவது என்னமோ நிதர்சனமான உண்மை.

                                  
- ஸ்ரீ.தனஞ்ஜெயன்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP