Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2. பதிவிற்குப் பின் பத்திரம்.


 பதிவிற்குப் பின் பத்திரம்.
      - கே. அழகுராமன், வழக்கறிஞர்

ஐயா... இங்க இருந்த என் கெணத்த ஆட்டைய போட்டுட்டாய்ங்க ஐயா.... காமெடிக்காக எழுதப் பட்டு, படமாக்கப்பட்ட ஒரு காட்சி. தற்போது நிஜத்திலும் அரங்கேற்றப்படுவது வேதனை.  காரணம் - பதிவிற்குப்பின்  பாதுகாத்தல் என்ற ஒரு விஷயத்தையே நாம் கவனிக்கத் தவறுவது தான்.


பல லட்சங்கள் கிரய தொகையாகவும், சில லட்சங்கள் பத்திர வகையறாக்களுக்குமாக செலவு செய்து கிரயம் பெற்ற சொத்தை, அதன் பின்பு என்ன செய்ய வேண்டும்? எப்படி பாதுகாத்து பராமரித்தல் வேண்டும்?
முதலில், பத்திரப் பதிவு முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட பதிவகம் சென்று பதிவு செய்யப்பட்ட பத்திரத்தினை திரும்ப பெறுதல் வேண்டும்.

சில நாட்களுக்குப் பின் அதே பதிவகத்தில், உங்கள் பத்திரத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் (Certified Copy of Sale Deed) வேண்டி மனு கொடுத்து, அதனை, அந்த அலுவலகத்திலிருந்து, 20 ரூபாய் பத்திரத்தில் சான்றிட்ட நகலாக தருவதை பெற்று, ஏற்கெனவே பதிவு செய்து திரும்பப் பெற்றிருந்த ஒரிஜினல் ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்தல் நல்லது.


தற்போது,  உங்கள் சொத்திற்கான  பத்திரங்களைப் பொறுத்த மட்டில் உங்களது கிரயப் பத்திரம் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகி விட்டது.


இப்போது, கிரயப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, உங்கள் சொத்திற்கான  வரி விதிப்பினை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.


காலி இடம் என்றாலும் சரி, கட்டப்பட்ட வீடு என்றாலும் சரி, அதன் அளவிற்கேற்பவும், சொத்து அமைந்துள்ள கிராமம், அமைவிடம், போன்றவைகளுக்கேற்பவும் சொத்து வரி விதிப்பு செய்யப்படும். நீங்கள் வாங்கிய சொத்திற்கான வரி விதிப்பு உங்கள் பெயருக்கு ஏற்படுத்துவதும் உங்கள் உரிமையை நிலை நாட்டக்கூடிய ஒரு கூடுதல் ஆவணமே.


எனவே, நம் சொத்து தானே.. பதிவு செய்யப்பட்ட  கிரயப்பத்திரம் தான் நம் வசம் உள்ளதென பல காலம் பார்க்காமல் இருக்கும்பட்சத்தில், "கிணத்தை காணோம்" கதையாகிவிடும் வாய்ப்புகள் அதிகம்.


பட்டா :-
கிரயப் பத்திரம், சொத்து வரி என உங்கள் பெயரிலுள்ள உரிமையை நன்கு பரிசீலித்து வருவாய் துறையின் பதிவேடுகளில் ஏற்றி, உங்கள் பெயருக்கு பட்டயமாக வழங்கப்படுவது தான் "பட்டா" எனப்படுவது.


சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் சிட்டா, அடங்கல், போன்ற அந்தந்த கிராம கணக்கினங்களில் உங்கள் பெயரும், சொத்து விபரமும், பதிவேற்றம் செய்யப்படும்.   
இப்போது வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரு முறை என  உங்கள் சொத்திற்கான வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தாக்கல் செய்து தேவை இல்லாத வில்லங்கம் எவையும் உள்ளனவா? அல்லது உருவாக்கப்பட்டுள்ளனவா? என பார்த்து வருதல் அவசியம்.


இப்போது உங்கள் சொத்திற்கான பத்திரங்களும், பதிவக வேலைகள், ரெவின்யூ இலாகா வேலைகள் என அனைத்தும் முடிந்த ஒரு  நிம்மதியான நிலை.


சந்தேகமில்லை. உங்கள் பத்திரங்கள் இப்போது பத்திரம். சொத்துகள் பத்திரமா ?


                                                  …பார்ப்போம்... பத்திரப்படுத்துவோம்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP