Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி பொருட்கள் தொடர்ந்து விலை குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் அதன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பால வர்த்தகர்கள் கமாடிட்டிகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இந்த வாரம் ஜீரகம் விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

ஜீரகம் (Jeera)


முக்கியச் சந்தைகளில் கடந்த வாரத்தில் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமானது. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்ததே காரணம். மேலும் வரும் பருவத்தில் ஜீரக விளைச்சல் அதிரகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜீரகத்தின் மார்ச் மாத ஃப்யூச்சர்ஸ் குவிண்டால் ஜீரகம் ரூ. 14325 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

அரசு வேளாண் துறை தரப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி 2014-2015 (ஜூலை-ஜூன்)க்கான ஜீரக விளைச்சல் 599000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 514000 டன்னாக மட்டுமே இருந்தது. மேலும் ஜீரகம் அதிகம் விளையும் குஜராத் மாநிலத்தில் விளைச்சல் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முக்கியச் சந்தைகளில் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஜீரகத்திற்கான தேவைகள் அதிகரிக்காவிட்டால் சந்தைகளில் ஜீரகத்தின் இருப்பு தேக்க நிலையை அடையும் என்பதோடு, அவற்றின் தரமும் குறையும். இதனால் வரும் வாரங்களில் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமாவதற்குதான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


 

அட்டவணை தகவல்கள் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டவை

மஞ்சள் (Turmeric)
 
 

எப்போதும் வலிமையான கமாடிட்டியாக இருந்து வரும் மஞ்சளும் தற்போது சில மாதங்களாக விலை ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மஞ்சளுக்கான தேவை அதிகரிக்காததே காரணம். வழக்கமாக மஞ்சளுக்கு இருக்கும் வரவேற்பும் குறைந்துள்ள நிலையில், பண்டிகைகளை ஒட்டியும் மஞ்சளுக்கான தேவை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகரிக்கவில்லை.

இந்த நிலையில் வரும் ஜனவரி கடைசி வாரத்தில் புதிய அறுவடை மஞ்சள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரிக்கும் என்ற நிலை இருப்பதால், தற்போது இருப்பில் உள்ள மஞ்சளை விற்க வேண்டிய அழுத்தம் வியாபாரிகளுக்கு உருவாகியுள்ளது. ஆனால் அதே சமயம் வரும் வாரத்தில் பொங்கல் பண்டிகை உள்ளதால் விலை சரிவு அதிகளவில் இல்லாமல் பக்கவாட்டில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய்க்கான தேவை அதிகளவில் இல்லாததாலும், வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது.

வேளாண் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2014-15) ஏலக்காய் விளைச்சல் 22,000 டன்னாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 21,000 டன்னாக இருந்தது. இந்த கணிப்பினாலும் விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்த இருப்பதாலும் ஏலக்காய் வரத்து அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஏலக்காய்க்கான உள்நாட்டு வெளிநாட்டு ஆர்டர்களும் குறைந்து காணப்படுகிறது. மேலும் கிடங்குகளில் உள்ள ஏலக்காய் இருப்பும் தரம் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் வாரங்களில், ஏலக்காயின் உற்பத்தி அதிகரிக்கும் என்ற கணிப்பினாலும், சந்தையில் ஏலக்காய்க்கான தேவை குறைந்து காணப்படுவதாலும், விலை மேலும் குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ