Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றுமதி செய்வோம்! ஏற்றம் பெறுவோம்!

லக அளவில் சீனாவின் பொருளாதாரம் குறைந்து வருவதால் உலக நாடுகளின் கண்கள் இந்தியாவை குறிவைக்கின்றன. ஆனால் இந்தியர்கள் நாம் இன்னும் அதை உணரவில்லை. உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் அவற்றை எப்படி ஏற்றுமதி செய்வது என்ற தெளிவில்லாமல் இந்திய ஏற்றுமதி குறைவாகவே இருந்து வருகிறது. இந்திய ஏற்றுமதி அதிகரித்தால் கணிசமாக இந்தியப் பொருளாதாரம் உயரும்.

அதனால் நாணயம் விகடனும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIEO-Federation Of Indian Export organization) இணைந்து ஏற்றுமதி தொழிலை எப்படி வெற்றிகரமாக செய்வது என்று தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறது. சென்னை, கோவையை அடுத்து கடந்த ஜனவரி 9-10 தேதிகளில் மதுரையில் “ஏற்றம் தரும் ஏற்றுமதி” என்ற இரண்டு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் பலர் உற்சாகமாக கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

 

முதலில் பேசிய இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென்மண்டல இணை துணை பொது இயக்குநர் உன்னிகிருஷ்ணன், "உலகளவில் ஏற்றுமதி தொழிலில் முதலிடத்தில் உள்ள சீனாவின் பொருளாதாரம் தற்போது மந்தமாக இருப்பதால் இந்தியா எளிதில் முதலிடத்தைப் பிடிக்க முடியும். அதற்கு ஏற்றுமதி தொழில் முனைவோர்கள் அதிகரிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கான வாய்ப்புகளும், ஊக்குவிப்பு திட்டங்களும் ஏராளமாக உள்ளன. அதனால் ஏற்றுமதி தொழிலை செய்ய எல்லோரும் முன்வரவேண்டும்" என்று கூறி பயிற்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு வழங்கும் சேவைகளைப் பற்றி அதன் துணை இயக்குநர் திருமதி.செல்வநாயகி பேசினார்.

பின்னர் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை விஷயத்திலிருந்து தொடங்கி சட்ட ரீதியான நடைமுறைகளையும் மேலும் பல நுணுக்கமான விஷயங்களையும் வழக்கறிஞர் எஸ்.சிவராமன் பேசினார். ஏற்றுமதியின் தொழில் முறை குறித்தும், ஒரு நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படையையும், அதில் இருக்கும் சட்டத்திட்டங்களை விளக்கினார்.
அவரைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வரும் புளுபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன், ஏற்றுமதி தொழிலின் தன் சொந்த அனுபவங்களை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். மேலும் ஏற்றுமதி தொழிலில் உள்ள வாய்ப்புகளையும் நெளிவுசுழிவுகளையும் பிரச்னைகளையும் விளக்கமாக எடுத்து கூறி பங்கேற்பாளர்களுக்கு ஏற்றுமதி தொழிலை செய்யலாம் என்ற நம்பிக்கையை அளித்தார்.

அடுத்ததாக வணிக வரித்துறைச் சார்ந்த நடைமுறைகளை வணிக வரித்துறை ஓய்வதிகாரி ஆர்.கதிரேசன், தமிழ்நாடு மதிப்பிற்கூட்டு வரி (TNVAT),மத்திய மதிப்பிற்கூட்டு வரி (CST)வாங்கும் முறை குறித்தும், அதை சமர்ப்பிக்கும் முறை குறித்தும் விளக்கினார். அவரைத் தொடர்ந்து, இறக்குமதியாளரின் நம்பகத்தன்மை மற்றும் நாம் அனுப்பும் பொருளுக்கான காப்பீடு எப்படி செய்துகொள்வது போன்றவை குறித்து ECGCயின் ஓய்வு பெற்ற துணை பொது மேலாளர் ஆர்.சத்திய நாராயணன் பேசினார். மேலும் ஏற்றுமதி கடன் மற்றும் வங்கி நடைமுறைகள் குறித்து கனரா வங்கி மூத்த மேலாளர்கள், கே.செளந்தரராஜன் மற்றும் எஸ்.ராஜ்குமார் அவர்கள் விளக்கினர். 
மொத்தத்தில், இந்த ஏற்றுமதி பயிற்சி வகுப்பு, முற்றிலும் ஒன்றும் தெரியாதவர்களுக்குக் கூட புரியும் வகையில், எளிமையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக வந்திருந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் மனதாரப் பாராட்டிச் சென்றனர்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ