Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்

கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்து வருவதும், தங்கத்தின் விலையும் ஒரு விதமான ஏற்ற இறக்கத்தில் இருந்து வருவதும் குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்!


 
‘புத்தாண்டுக்குப்பின் தங்கத்தின் 3% ஏற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1,108 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. சர்வதேச அளவில் இடிஎப் மூலம் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. சென்ற வாரத்தின் பங்குச் சந்தை சரிவு, தங்கத்தின் சர்வதேச விலை ஏற்றத்துக்கு முதல் காரணமாகவும், அதே சமயம் இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்ததும் மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.
 
கச்சா எண்ணை விலைச் சரிவினால், சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்காமல் இருப்பது, சீனா பொருளாதாரம் தேக்கத்தில் காணப்படுவது ஆகிய காரணங்களினால்  தங்கத்தின் தேவை குறைத்துள்ளது. கச்சா எண்ணையின் விலைச் சரிவினால், இந்தத் துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் அதற்கு நிதி உதவி செய்துள்ள வங்கிகளின் செயல்பாடுகள் வரும் காலத்தில், வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை சந்தை கவனித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க பெடரல் 2016-ல் வட்டி விகிதங்களை ஏற்றுவதற்கு முன்பாக, ஏற்கனவே .0.25% அதிகரித்ததன் காரணமாக பொருளாதாரத் தாக்கங்களை கருத்தில்கொண்டு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கப் பொருளாதாரத் புள்ளிவிவரத்தில் ஒருவேளை எதிர்மறையான விளைவுகள் ஏற்படுமேயானால், தங்கத்தின் சர்வதேச விலையானது மேல்நோக்கி செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.      
 
ஐரோப்பிய மத்திய வங்கி, வரும் மாதங்களில் மேலும் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மார்ச் மாத வாக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்ததால், யுரோவின் மதிப்பு டாலருக்கு நிகராக சரிந்து, அமெரிக்க டாலர் வலுப்பெறுவது தங்கத்தின் விலையைக் கட்டுப்படுத்துவதால், சென்ற வெள்ளியன்று 1,100 டாலருக்கு குறைவாக வர்த்தகமானது.    

கச்சா எண்ணெய்யின் சமீபத்திய விலைச் சரிவுக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதலாவது, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டது. இரண்டாவது,  சீனப் பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய அறிவிப்பு. ஈரான் தனது ஒரு நாள் உற்பத்தியை 3 முதல் 4 லட்சம் பேரல்கள் வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கும் வேளையில், சவுதி அரேபியாவும் போட்டி போட்டுக்கொண்டு விலையைக் குறைத்தாவது சந்தையில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறது.
சீனாவின் ஜி.டி.பி கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு 2015-ல் 6.9 சதவிகிதமாக குறைந்தது, அந்த நாட்டின் கச்சா எண்ணெய்யின் தேவை வரும் மாதங்களில் குறையக்கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலைமை எப்போது மாறும் என்பது முக்கியமான கேள்வி. 2016-ல் நிச்சயமாக பெரிய மாற்றங்கள் எதையும் காண முடியாது என்று கருதப்படுகிறது. பொதுவாக, வளர்ந்த நாடுகளில், கச்சா எண்ணெய் விலை சரிந்தால், பொருளாதாரம் மேம்படும் என்றும், விலை அதிகரித்தால் பாதிப்படையும் என்று கருதப்படுகிற வேளையில், இந்த முறை அப்படி நடக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், பொருளாதாரப் புள்ளிவிவரங்களில் (பாசிட்டிவாக) நன்மை பயக்கும் விதமாக பார்க்க முடியவில்லை.
 
உதாரணத்துக்கு, சென்ற வருடம் 2015 துவக்கத்தில், கச்சா எண்ணை விலைச்சரிவின் காரணமாக அமெரிக்க பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.7% அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 0.3% ஜி.டி.பி. குறையத்தான் செய்தது. இதற்கு காரணம், எரிசக்தி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை மற்றும் வேலைவாய்ப்புகளைக் குறைத்தது. ஆனால், நுகர்வோருக்கு இது பயனளித்தாலும், அவர்கள் செலவு செய்யாமல், சேமிப்பாக மாற்றியதால், இதன் தாக்கம் ஜி.டி.பி.யில் எதிரொலிக்கவில்லை. 
 
இப்போதைய சிக்கல் என்பது, கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதால், கையிருப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலை மாறுவதற்கு மேலும் சில வருடங்கள் ஆகலாம். எந்த நிலையிலும் 1 பீப்பாய் 50 டாலருக்கு மேல் செல்ல வாய்ப்பில்லை.   
 
சவுதி அரேபியாவின் கவார் எண்ணெய் கிணறு உலகின் பெரியதாக கருதப்படுகிறவேளையில், வரும் காலத்தில் வட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் பெர்மியன் பேசின் கிணறின் ஒரு நாள் உற்பத்தி மட்டுமே 5 முதல் 6 மில்லியன் பேரல்களாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
       
உலக அளவில் கச்சா என்ணெய்யின் ஒட்டுமொத்த பயன்பாட்டில் சீனா 2014-ம் ஆண்டில் 43% அளவுக்குக் காணப்பட்டது, பொருளாதாரத் தேக்கம் காரணமாக தற்போது 25% குறைந்துவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை எற்ற இறக்கம் என்பது சீனாவின் பங்களிப்பு முக்கியமான காரணமாக இருக்கிறது.

 

வெள்ளி!
 
வெள்ளியின் விலையில் கடந்த வாரம் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதாவது, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 13.88 டாலரில் இருந்து, அதிகபட்சமாக 14.13 டாலர் வரை உயர்ந்துள்ளது. தற்போது நிதி சார்ந்த சந்தை அனைத்தும் இறக்கத்தில் இருப்பது தங்கம் மற்றும் வெள்ளிக்கு சாதகமான விஷயம் ஆகும். மேலும், உலக பொருளாதார வளர்ச்சி குறையும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் உலக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இவற்றின் விலைப்போக்கு இருக்கும். சீனாவில் லுனர் விடுமுறையின் காரணமாக பிசிக்கல் வெள்ளி, தங்கம் ஆகியவற்றின் டிமாண்ட் குறைவாக உள்ளது. இதனால் வரும் வாரத்தில் வெள்ளியின் விலை குறைவதற்கான வாய்ப்புள்ளது.

காப்பர்!
 
காப்பரின் விலை கடந்த வாரம் 1 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. ஒரு டன் காப்பரின் விலை 4,408 டாலருக்கு வர்த்தகமானது. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர்  பொருளாதார சிக்கல்கள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மார்ச் மாத இறுதிக்குள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கொள்கை முடிவுகளில் மேம்படுத்துவது  பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதிச் சந்தையில் நிலவும் சிக்கல்கள் ரிஸ்கை குறைப்பதற்கு இது சரியான நேரமாக இருக்கும். 

ஐசிஎஸ்ஜி (International Copper Study Group) தரும் தகவலின்படி, 2015-ம் ஆண்டின் முதல் 10 பத்து மாதங்களில் காப்பரின் கையிருப்பானது 60,000 டன்னாக இருந்தது. அதுவே 2014-ம் ஆண்டில் முதல் பத்து மாதத்தில் காப்பரின் பற்றாகுறையான 4,85,000 டன்னாக இருந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு பீப்புல்ஸ் பேங்க் ஆஃப் சீனா எடுக்கும் நடவடிக்கை காப்பரின் விலைக்கு சாதாகமாக உள்ளது. மேலும், முதலீட்டாளார்கள் ஐரோப்பிய யூனியன் மற்றும் லண்டன் உற்பத்தி விவரம் குறித்த தகவல்களுக்காக காத்திருக்கிறார்கள். இதனால் வரும் வாரத்தில் இறக்கத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இரா. ரூபாவதி.

 

இந்த வாரம் ஏலக்காய் விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.


ஏலக்காய் (Cardamom):

 

 

‘‘கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் உள்நாட்டு தேவை குறைந்து காணப்பட்டதாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிக்காததாலும் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும், தற்போது நிலவும் வானிலை ஏலக்காய் விளைச்சலுக்கு சாதகமான நிலையில் இருப்பதால், அறுவடைக் காலத்தில் அதிகபடியான ஏலக்காய் வரத்து சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. 

புதிய ஏலக்காய் சந்தைக்கு வருவதால், தற்போது உள்ள ஏலக்காய் இருப்பை விற்க வேண்டிய நிர்பந்தம் வியாபாரிகளுக்கு நேர்ந்துள்ளது. இதன் காரணமாக வரும் வாரங்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், புதிய ஏலக்காய் வரத்து வர இருப்பதால், அப்போது விலை சற்று உயர வாய்ப்புள்ளது. 

ஆனாலும் அதற்குப் பிந்தைய விலை உயர்வு அப்போது சந்தையில் உள்ள தேவையைப் பொருத்தே இருக்கும். அப்போதும் தேவை அதிகரிக்கவில்லை எனில், விலை மேலும் உயர வாய்ப்பு  குறைவு.’’

 


மஞ்சள் (Turmeric)

 
 
கடந்த வாரத்தில் முக்கிய சந்தைகளில் மஞ்சளுக்கான தேவை குறைந்ததால், விலை குறைந்து வர்த்தகமானது. இந்த நிலையில், ஜனவரி மாத இறுதியில் புதிய அறுவடை மஞ்சள் சந்தைக்கு வருவதால், முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. பெரும்பாலான வர்த்தகர்கள் புதிய மஞ்சள் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். 
 
மேலும், மஞ்சள் விலை தொடர்ந்து குறைந்து வருவதாலும், மஹாராஷ்ட்ரா மற்றும் ஆந்திராவில் நிலவும் வறட்சி காரணமாகவும் விவசாயிகள் தங்கள் விளைச்சலைக் குறைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். கடந்த செவ்வாயன்று 6% வரை குறைந்து, குவிண்டால் மஞ்சள் ரூ.8,707-க்கு வர்த்தகமானது.
 
இந்த நிலையில், தற்போது புதிதாக அறுவடை செய்யப்பட்டுவரும் புதிய மஞ்சள் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என்பதால், இப்போது இருப்பில் உள்ள மஞ்சளை விற்க வேண்டிய கட்டாயம் வியாபாரிகளுக்கு உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும், தேவை பெருமளவில் அதிகரிக்காத காரணத்தினாலும் வரும் வாரத்திலும் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்பு அதிகம்.

ஜீரகம் (Jeera)

 
முக்கியச் சந்தைகளில் கடந்த வாரத்தில் ஜீரகம் விலை ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. ஜீரகத்துக்கான தேவை குறைந்து காணப்படுவதே இதற்கு காரணம். மேலும், ஏற்றுமதி ஆர்டர்களும் சொல்லிக்கொள்ளும் அளவில் அதிகரிக்கவில்லை. வரத்து அதிகரிக்கும் என்ற கணிப்பினால் மொத்த வியாபாரிகளும் வர்த்தகம் செய்யாமல் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்த்து ஒதுங்கியுள்ளனர்.
 
அரசு வேளாண் துறை தரப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2014 - 2015 (ஜூலை - ஜூன்)க்கான ஜீரக விளைச்சல் 5,99,000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 5,14,000 டன்னாக மட்டுமே இருந்தது. மேலும், ஜீரகம் அதிகம் விளையும் குஜராத் மாநிலத்தில் விளைச்சல் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஜீரகத்துக்கான தேவை சந்தைகளில் அதிகரிக்காவிட்டால், ஜீரகத்தின் இருப்பு தேக்கமடைந்து தரம் குறையும். இதனால் சந்தைகளில் ஜீரக இருப்பை விரைவில் விற்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும். இதனால் விலையைக் குறைக்க வேண்டிவரும். இதனால் ஜீரகம் வரும் வாரங்களிலும் விலை குறைந்து வர்த்தகமாகும் நிலையே உள்ளது.

- ஜெ.சரவணன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ