Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு குழந்தையைபோல வழிகாட்ட தயார்; செபி இயக்குநர்

நாணயம் விகடன் கான்க்ளேவ்-ல் செபி இயக்குநர்

நாணயம் விகடன், பிப்ரவரி 1, 2 தேதிகளில் சென்னையில்  ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் என்னும் மாபெரும் கருத்தரங்கத்தை முதல் முறையாக நடத்தியது. இந்த கருத்தரங்கத்தில் இந்திய அளவிலும் உலக அளவிலும் முக்கியமான நிபுணர்கள் கலந்துகொண்டு பேசினர். செபி அமைப்பின்  தென்  மண்டல இயக்குநர் டி.ரவிக்குமார் நாணயம் விகடன்  கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 

அவர் பேசியதாவது, ''ஆங்கிலத்தில் 'ஃபர்ஸ்ட் அப்பியரன்ஸ் இஸ் தி பெஸ்ட் அப்பியரன்ஸ் என்று சொல்வார்கள்' அந்த வாசகத்திற்கு தகுந்தாற் போல நாணயம் விகடனின் முதல் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


சரியான பெயர் :

ஒரு நாடு, மாநிலம் ஏன் ஒரு மாவட்டத்திற்கு கூட பிசினஸ் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு நாட்டில்  பிசினஸ் நன்றாக செழித்து வளர்கிறது என்றால், அந்த நாட்டை வளர்ந்த நாடு என்று சொல்கிறோம்.  அப்படி பிசினஸ் வளர வேண்டும் என்றால் அதற்கு ஃபைனான்ஸ் என்று சொல்லப்படும் நிதி மிகவும் அவசியம். மனித உடலுக்கு  ரத்தம் எவ்வளவு அவசியமோ, அதேபோல் தொழிலுக்கு ஃபைனான்ஸ் மிக அவசியம்.

எனவே, நாணயம் விகடனின் முதல் கான்க்ளேவின் தலைப்பும் "ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்"என்று பொருத்தமாக இருக்கிறது.

செபி எனும் பாதுகாவலன் :

ஒரு பிசினஸிற்கு தேவையான பணத்தை பல வழிகளில் திரட்டலாம். அப்படித் தேவையான பணத்தை பங்குச் சந்தை மூலம் திரட்டுவது அதில் மிகவும் முக்கியமானது. அப்படி திரட்டப்படும் பணம் எப்படி, எங்கு முதலீடு செய்யப்படுகிறது, யாரால் நிர்வகிக்கப்படுகிறது என்று தொடர்ந்து கருத்தாக கண்காணித்து வருகிறது செபி.

2014 ஆம் ஆண்டிற்கு பிறகு உலக அளவில் மிக சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக இந்தியாவின் செபி அமைப்பு தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட முன்னேற்றத்தால் உலக முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் நன்றாக நெறிமுறைப்படுத்தப்பட்ட சந்தைகளாக காணப்படுகின்றன. பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக இது வரைக்கும் 30,000க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். இந்தக் கூட்டங்களில் நெறிப்படுத்தப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியத்தை விளக்கி சொல்லி வருகிறோம். முதலீட்டில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகளை எப்படி அணுக வேண்டும் என்பதையும் விளக்குகிறோம்.  முன்பை விட இப்போது பங்குச் சந்தை வர்த்தகத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையும்  உயர்ந்துள்ளது.

இன்றைய எம்.எஸ்.எம்.இ, நாளைய பிசினஸ் சாம்ராஜ்ஜியம்:

எம்.எஸ்.எம்.இ துறையானது இந்தியாவின் மொத்த ஜிடிபியில் சுமார் 15% வரை பங்களிக்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தி துறையில் 45%, ஏற்றுமதியில் 40% பங்களிக்கிறது. இந்த துறை மூலம் மட்டும் இந்தியாவில் ஏறத்தாழ 7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் தாராளமயமாக்கல் வந்த 1990 - 91 கால கட்டங்களில் ஒரு நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக (IPO -ஐபிஓ) சந்தைக்கு வரும் போது  கொடுத்த விவரங்களை  விட இப்போது அதிக விவரங்களை தெரிவிக்க வேண்டும். இப்போது குறைந்தபட்ச தேவைகளை நிறைவு செய்தால்தான் ஐபிஓ வர முடியும்.  தற்போது ஐபிஓ வருவதற்கான விதிமுறைகள் கவனத்தோடு வகுக்கப்பட்டிருக்கின்றன. செபி அமைப்பு நிர்வகிக்கும் அல்லது நெறிமுறைப்படுத்தும் ப்ரைமரி மார்க்கெட், செகன்டரி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் அனைத்தும் இப்படித் தான் நெறிமுறைபடுத்தப்படுகின்றன. சில வளர்ந்த நாடுகளை விட நம் இந்திய பங்குச் சந்தை மிகவும் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

உங்களை உயர்த்தி, நாட்டை உயர்த்த செபி தயார் :

இந்த நிகழ்சியில் கலந்து கொண்டவர்களுக்கோ அல்லது சந்தையில் தங்கள் நிறுவனத்தை பட்டியலிட விரும்பும் நிறுவனங்களோ தங்களுக்கு தேவையான விஷயங்களை, எங்கள் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எங்களைத் தேடி வரும் நிறுவனங்களை ஒரு குழந்தையை அன்பாக வழி நடத்துவது போல வழிகாட்டி உங்களையும் (நிறுவனங்களை) உயர்த்தி, நாட்டையும் உயர்த்தத் தயாராக இருக்கிறோம்" என்று உற்சாகமாக முடித்தார்.

(செபி  தென்  மண்டல இயக்குநர் டி.ரவிக்குமாரின் தனிப்பட்ட கருத்து இவை.)

மு.சா.கொளதமன்

படங்கள்: கே.கார்த்திகேயன், ஆ.முத்துக்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ