Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி "ஆப்" மூலம் ஆப்பு வைக்கலாம்!

பாஸ் உங்கள யாரோ ஏமாத்திட்டாங்களா? கவலைய விடுங்க;
இனி "ஆப்" மூலம் ஆப்பு வைக்கலாம்!

சார்... அவன் என்னை ஏமாத்திட்டான் சார். அவனை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார் என்பதுதான் ஒவ்வொரு முறையும் மோசடியால் மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் போது நினைப்பது. ஆனால், அவ்வாறு நடக்கிறதா? ஏமாற்றியவர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது  நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையா? என்பதே தெரியவில்லை. நடவடிக்கை எடுத்தார்கள் என்றால் எந்தமாதிரியான நடவடிக்கை எடுத்தார்கள் என்பதும் தெரியாமலே இருந்து வருகிறது.

 

ஆப் மூலம் புகார்

இந்த நிலையில் இதைப் போக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக மொபைல் ஆப் மூலம் நுகர்வோரின் குறைதீர்க்க மாநிலத்தின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் "சட்ட அளவியல் துறை"  (legal metrology department) ஒரு மொபைல் அப்ளிகேஷனை துவங்கவுள்ளது. இந்த ஆப் பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.

வியாபார மோசடி செய்யும் விற்பனையாளர்கள் மீது, நுகர்வோர் தங்கள் மொபைலில் ஆப் மூலம் புகார் அளித்து, அந்த புகாரின் நிலையை கண்காணிக்கும் வகையில் இந்த ஆப் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப் மற்றும் ஒரு ஆன்லைன் அமைப்பை கொண்ட இந்த திட்டத்திற்க்கு "சட்ட அளவியல் புகார் கண்காணிப்பு அமைப்பு" ('Legal Metrology Complaint Tracking System) என பெயரிடப்பட்டுள்ளது. வர்த்தக முறைகேடுகளை கண்காணித்து அதன் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவே இந்த திட்டம் செயலாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் நுகர்வோர் அதிகவிலை, குறைவான அளவில் பொருட்கள், பண பரிமாற்றத்தில் முறைகேடு உட்பட பல வர்த்தக முறைகேடுகளை பற்றி புகார் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுகை மையத்தின் உழைப்பில் உருவாகும் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 26.30 லட்சம்.

48 மணி நேரத்தில் நடவடிக்கை

"இந்தியாவிலேயே முதன்முறையாக மொபைல் ஆப் மூலம் நுகர்வோரின் குறைதீர்க்கும் ஒரு கருவியாக இந்தத்திட்டம் விளங்கும். இதற்கென பிரத்தியேக வலைதளமும், பேஸ்புக் பக்கமும், கட்டணம் இல்லா அழைப்பு சேவையும் விரைவில் துவங்க இருக்கிறோம்" என இந்த துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் படி, விற்ப்பனையாளரின் முறைகேட்டை குறித்து ஒரு புகைப்படமோ, வீடியோவோ அல்லது ஆடியோ செய்தியோ அல்லது வெறும் குறுந்தகவலோ அந்த ஆப் மூலம் அனுப்பி, முறைகேட்டில் ஈடுபட்டவரது முகவரி மற்றும் தெரிந்த விவரங்களுடன் புகாரை பதிவு செய்யலாம். பதிவு செய்த உடன் அவருக்கு புகார் பதிவு செய்யப்பட்டதற்கான பிரத்தியேக எண் அளிக்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி தங்களது புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த புகார் அனுப்பப்படும், பின் புகார் அளித்தவருக்கு 48 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான விவரங்கள் குறுந்தகவல் மூலம் வந்து சேறும். மேலும் நடவடிக்கையை மேற்பார்வையிடுவதற்க்காக இந்த புகார் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பபடும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆன்லைனுக்கும் ஆப்பு

பொருள் வாங்கியவர்கள் அதற்கான ரசிதையும் இணைத்து அனுப்பலாமென்றும், ஒரு வேளை வெளி மாநிலங்களிலிருந்து பொருட்கள் வாங்கப்பட்டிருந்தால், (குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம் மூலம் வாங்கியிருந்தால்) அந்த மாநில அதிகாரிகளுக்கும் இந்த தகவல் பகிரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். பரவலாக அனைத்து இடங்களிலுமே எம்.ஆர்.பி விலையை விட அதிகமாக பொருட்கள் விற்கப்படுகின்றன என கூறப்படும் நேரத்தில், இந்த "ஆப்" நமக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

பா.அபிரக்ஷன் (மாணவப் பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ