Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்கட்டமைப்பை மேம்படுத்தல்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்ல தற்போது ஆறு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இதுவே மூன்று மணி நேரத்துக்குள் செல்ல முடியும் என்றால் பல பேருடைய நேரம் மிச்சமாகும் அல்லவா?    இதற்கு வழிவகுக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அதிவேகமாக செயல்படுத்த மத்திய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இதை எப்படி செயல்படுத்துவது, இதில் என்னென்ன சவால்கள் உள்ளன, உள்கட்டமைப்பு திட்டங்களில் பொது - தனியார் கூட்டு (Public Private Partnership) அமைப்பில் சீர்திருத்தங்கள் பற்றி பரிந்துரை செய்ய டாக்டர் விஜய் கேல்கரின் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது சிபாரிசுகளை அண்மையில் மத்திய அரசிடம்  சமர்ப்பித்தது.  

டாக்டர் விஜய் கேல்கர் 2011-ல் ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றவர். இவர் 13-ஆவது நிதிக் குழுத் தலைவராக இருந்தவர். நிதி அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்தவர். பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகித்த இவர், தற்போது தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான நிறுவனத்தின்  (National Institute of Public Finance and Policy) தலைவராக பதவி வகித்து வருகிறார். கேல்கர் கமிட்டியின் அறிக்கை குறித்து எல் அண்ட் டி ஐடிபிஎல் தலைமை நிதி அதிகாரி டிவி.கார்த்திகேயனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

எதற்காக கேல்கர் கமிட்டி?

“இந்தியாவின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. இதற்கு தேவையான நிதி, அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினால் தனியார் துறைகளின் முதலீடுகளை ஈர்க்க வேண்டியுள்ளது. அரசைப் பொறுத்தவரை, பல உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கினாலும் போதிய பராமரிப்பின்றி அந்தத் திட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருக்கிறது. எனவே, உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தவும், பராமரிக்கவும் தனியார் துறையின் பங்களிப்பினை நாட வேண்டிய நிலை உண்டாகிறது. ஆகையால், தனியார் துறை பங்களிப்புடன் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசாங்கம் ஒரு கமிட்டி அமைத்தது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு எப்படி புத்துயிர் ஊட்டுவது என்பதை கண்டறிந்து சொல்வதே இந்த கமிட்டி.

கமிட்டியின் சிபாரிசுகள்!

மத்திய அரசாங்கமானது தனியார் நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக மட்டுமே நினைக்கக் கூடாது. மாறாக, ஒரு கூட்டாளியாக கருத வேண்டும் என இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது முக்கியமான விஷயம். 

வர்த்தக வருவாய் (Commercial Return) இல்லாமல் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது கடினம். வர்த்தக வருவாய் இல்லையென்றால், அவர்களால் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய முடியாது. ஆகையால், தனியார் நிறுவனங்கள் செலவிடும் தொகை வர்த்தக ரீதியில் மீண்டும் அவர்களுக்கு திரும்பத் கிடைக்குமாறு இருக்க வேண்டும் என  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எல்லா துறைகளுக்கும் ஒரே மாதிரியான ஒப்பந்தங்கள் மேற்கொள்வது தவறுதலாக அமைந்துள்ளது. இடர் ஒதுக்கீடு (risk allocation) சரியாகச் செய்யவில்லை. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு திட்டங்களுக்கும் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடத்திலோ முடிவதில்லை. இந்தத்  திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் 20, 30 ஆண்டுகள் வரை இருப்பவை. ஆகையால், துறைகளுக்கு தகுந்தாற்போல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இடர் (Risk) மாறுவதைப் பொறுத்து ஒப்பந்தங்கள் அவ்வப்போது கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். எல்லாத் துறைகளுக்கும், எல்லாத் திட்டங்களுக்கும் ஒரே மாதிரியான ஒப்பந்தங்கள் என்பது கடினமான ஒன்று. எனவே, ரிஸ்க்கைப் பொறுத்து அவ்வப்போது ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ஊழலால் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகையால், இந்திய ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஊழலுக்கும், தவறான தீர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். இதுகுறித்து இந்திய ஊழல் தடுப்புச் சட்டத்தில்(prevention of corruption act) திருத்தம் செய்யப்பட வேண்டும்.  

பொது - தனியார் கூட்டு (Public  Private   Partnership) அமைப்புக்காக புதிதாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். ஒரே ஒரு சட்டம் மட்டும் இருந்தால், எந்தப் பிரச்னையும் வராது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் நன்கு புரியும். எளிதாக வணிகம் செய்யும் சூழல் உருவாகும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பிரச்னைகள் ஏற்படுமாயின் அந்தப் பிரச்னையை தீர்க்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரை நியமித்து ஒரு தீர்ப்பாயம் ஒன்றை அமைத்திட வேண்டும்.

மேலும், பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சிக்காக நிறுவனம் (Institue) ஒன்றை உருவாக்க வேண்டும். பொது மற்றும் தனியார் கூட்டு அமைப்பில் எப்படி ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பயிற்சி வழங்க வேண்டும் என்பது உட்பட பல சிபாரிசுகளை கேல்கர் கமிட்டி சமர்ப்பித்துள்ளது. 

பட்ஜெட்டில் அறிவிப்பு!


இதில் என்ன பிரச்னைகள் என்றால், எவ்வளவு தூரம் அரசாங்கத்தால் இந்த பரிந்துரைகளை செயல்படுத்த முடியும் என்பதுதான். பொது மற்றும் தனியார் கூட்டு அமைப்பில் பிரைவேட் ஈக்விட்டி வரவேண்டும் என்றால் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல தரப்பட்ட பரிந்துரைகளை மத்திய அரசால் தனியாக செயல்படுத்த முடியாது. மாநில அரசின் பங்களிப்பும் இதற்கு அவசியம் தேவை. ஏனெனில் ஒரு பாலம் கட்டுவதற்கு பணம் மத்திய அரசிடம் இருந்து வந்தால்கூட, அந்தத் திட்டம் செயல்படுவது என்பது மாநிலத்தில்தான். இதற்கு மாநில அரசின் பங்களிப்பு  மிக முக்கியம். கேல்கர் கமிட்டியின் சிபாரிசுகளை மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. விரைவில் மத்திய அரசின் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்புகள் வெளியிடலாம்” என்றார்.

வளமான வல்லரசு!

நம் நாட்டில் விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை, மேம்பாலம் என உள்கட்டமைப்புத்  திட்டங்களை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.7 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுவதாக கேல்கர் கமிட்டி தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்டு என்பது பத்து ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. எதிர்பார்க்கப்படும் மொத்த முதலீட்டில் முழுப் பணம் கிடைக்கா விட்டால்கூட, குறைந்தது 40 - 50% முதலீடு கிடைத்தால்கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ஆனாலும் இந்தியா விஸ்வரூப வளர்ச்சி அடைந்து வளமான வல்லரசாக உருவாகிட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். 

(இந்தக் கட்டுரையில் திரு.டி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களே).

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ