Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘ஒரே சட்டமாக கொண்டு வாங்க!’’ - இன்ஜினியரிங் எதிர்பார்ப்பு

பட்ஜெட் 2016-17... தொழில்துறை எதிர்பார்ப்புகள் - 5

 பிப்ரவரி மாதம் 29-ம் தேதி தாக்கல் ஆகவிருக்கிறது 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட். கடந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் இருந்தன. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் எந்தெந்தத் துறை சார்ந்தவர்கள் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். இந்த ஆண்டு தாக்கல் ஆகவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பல்வேறு தொழில் துறை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் கேட்டோம். தங்கள் எதிர்பார்ப்புகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.

‘‘ஒரே சட்டமாக கொண்டு வாங்க!’’

இளங்கோ, முன்னாள் தலைவர், கொடீசியா. 

‘‘கடந்த பட்ஜெட்டில் நிறுவன வரியைக் (Corporate tax) குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன்படி நிறுவன வரியை 25 சதவிகிதமாக குறைத்தார்கள். இது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமல்படுத்தப்படும் என்று சொல்லி விட்டார்கள். ஆனால், எந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என்று தெரியவில்லை. கடந்த பட்ஜெட்டில் ‘மேட் வரி’ சீர்திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தனர். ஆனால், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என நிறைய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், இன்னும் தொழில் செய்யும் சூழல் (Ease of Doing Business) உகந்ததாக மாறிவிடவில்லை. தொழில் செய்வதற்கு தேவையான வழிமுறைகளை சீக்கிரம் வகுக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.

தற்போது நடைமுறையில் தொழிலாளர் சட்டம், தொழிற்சாலை சட்டம், இ.எஸ்.ஐ, போனஸ் சட்டம் உட்பட ஏராளமான தொழிலாளர் சட்டங்கள் உள்ளன. இவை அனைத்தையும் இணைத்து ஒரே சட்டமாக கொண்டுவர வேண்டும் என்று வெகு நாட்களாக பேசிக்கொண்டே உள்ளனர். இதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். பாதுகாப்புத் துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் கொள்முதலை (Defence Procurement) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்தும் வாங்க வேண்டும். இதற்கான அறிவிப்பினை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்.

மத்திய அரசின் கொள்முதலில் குறைந்தது 20 சதவிகிதமாவது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால், இது இன்னும் சரியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. இதை சீக்கிரம் அமல்படுத்த வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவது காலதாமதம் ஆகிக்கொண்டே உள்ளது. இதை உடனே நடைமுறைக்கு கொண்டுவர போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டு வரும்போது ‘ரெவின்யூ நியூட்ரல் ரேட்’ எவ்வளவு என்பதை நிர்ணயிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வரிகள் சேர்ந்து ஜிஎஸ்டி வரி 16 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது.  ஜிஎஸ்டி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் ஏற்றுமதியானது தொடர்ந்து பாதிப்படைந்து வருவதால், ஏற்றுமதியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், குறுகிய காலத்துக்கு  மட்டும் ஊக்கத்தொகை வழங்காமல், நீண்ட கால அடிப்படையிலும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். குறிப்பிட்ட சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு பிரச்னைகள் நீடித்து வருகின்றன. எனவே, மூலப்பொருட்களை எளிதாக இறக்குமதி செய்ய சுங்க விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ