Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்

மெட்டல் & ஆயில்
 
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. வரும் வாரத்தில் தங்கத்தின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தினேஷ் பாலாஜியிடம் கேட்டோம்.

"தங்கத்தின் விலை கடந்த எட்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த வியாழன் அன்று அதிகபட்சமாக 1,253 டாலர் வரை விலை உயர்ந்துள்ளது. இது 5 சதவிகித விலை உயர்வு ஆகும். மொத்தமாக 18 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.  அதாவது கடந்த மார்ச் 2014க்கு பிறகு தங்கத்தின் விலை தற்போதுதான் உயர ஆரம்பித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதாவது உலக சந்தைகள் அனைத்து வீழ்ச்சியில் உள்ளன. மேலும் டாலர் மதிப்பு சரிந்து வருவது, கச்சா எண்ணெய்யின் விலை சரிவு போன்றவையும் காரணமாகும். கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருக்கிறது. இதனால் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை 2011ம் ஆண்டில் இருந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. 
 
 
உலக சந்தைகளின் சூழ்நிலை இப்படியே இருந்தால் தங்கத்தின் விலை உயருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27,560 மேல் சென்று விட்டது. இது விலை உயர்வுக்கான அறிகுறிதான். எனவே விலை ஏற்றம் இப்படியே தொடர்ந்தால் ரூ.31200 வரை விலை உயருவதற்கான வாய்ப்புள்ளது. 
 
வெள்ளி!
 
தங்கத்தின் விலை அதிகரித்த அளவுக்கு வெள்ளியின் விலை உயரவில்லை.சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 14 டாலரில் இருந்து 16 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. பொருளாதார வளர்ச்சி இல்லாத காரணத்தினால் வெள்ளியின் விலையில் அதிக ஏற்றம் இல்லாமல் உள்ளது. வெள்ளியின் விலைப்போக்கு இப்படி இருந்தால் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலைக்கும்  இடையே உள்ள ரேஷியோ அதிகரித்துச் சிக்கலை உருவாக்கும். மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் போது தங்கத்தை வாங்க முடியாதவர்கள் வெள்ளியை வாங்க நினைப்பார்கள். இதனால் வெள்ளியின் தேவை அதிகரித்து, விலை உயருவதற்கான வாய்ப்பு உருவாகும். 
 
கச்சா எண்ணெய்!
 
 
கச்சா எண்ணெய்யின் விலையானது தொடர்ந்து சரிவு நிலையிலே இருந்து வருகிறது. அதாவது கடந்த வியாழன் அன்று 12 வருடங்களில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது. மேலும் ஒபெக் அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லையென்ற முடிவினை எடுத்துள்ளது. கச்சா எண்ணெய்யை அதிகமாக ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியா உற்பத்தி குறைவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை சரியவே செய்யும். 

காப்பர்!
 
 
காப்பரின் பெரும் பகுதியை நுகர்வு செய்யும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால் அங்கு இப்போது நிலவும் பொருளாதார சிக்கல்களின் காரணமாக தேவைக் குறைவாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களில் பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ளது. இப்போது உலக பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருப்பதால் சீனாவின் ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போதுதான் காப்பரின் தேவை அதிகரிக்கும். எனவே வரும் வாரத்தில் காப்பரின் விலை உயருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. 
இரா.ரூபாவதி. 

 

 

அக்ரி கமாடிட்டி!


சென்னா (Chana)

 
கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் சென்னா விலை உயர்ந்து வர்த்தகமாகத் தொடங்கியது. சென்னாவுக்கான வரவேற்பு சந்தையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதால், விலை சற்று உயர்ந்துள்ளது. ஆனால், வரும் பருவத்தில் புதிய அறுவடை சென்னா சந்தைக்கு வரவிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், விலை உயர்வு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
 
கடந்த வருடத்தில் பருவநிலை சாதகமாக இல்லாததால், விளைச்சல் குறைந்து பருப்பு விலை கணிசமாக உயர்ந்தது. அதற்காக இந்திய அரசு பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக பருப்பு வகைகளை இருப்பில் வைத்தது. இப்போது பருப்பு விலை மீண்டும் உயர்ந்தால, அந்த இருப்பு சந்தைக்குக் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இருப்பு வெளிவரும்பட்சத்தில் சந்தையில் சென்னாவின் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்றும் விலை பெருமளவு உயராது என்றும் தெரிகிறது.
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ் 1.54% உயர்ந்து குவிண்டால் சென்னா ரூ.4329-க்கு வர்த்தகமாகிறது. வரும் வாரங்களில் புதிய அறுவடை சென்னா சந்தைக்குள் வந்தாலும் சந்தையில் சென்னாவுக்கான தேவை கணிசமாக இருப்பதால், விலை குறைவு பெருமளவில் இருக்காது. சென்னாவின் விலை வரும் வாரத்தில் ரூ.4,300 - 4,370 என்ற வரம்பில் வர்த்தகமாகும்.

மென்தா ஆயில் (Menta Oil)

கடந்த வாரத்தில் மென்தா ஆயில் ஏற்ற இறக்கம் இல்லாமல் பக்கவாட்டிலேயே வர்த்தகமாகியது. சந்தைக்கு வரும் மென்தா ஆயில் வரத்து கட்டுப்படுத்தப்பட்டதாலும், மென்தா ஆயில் பயன்பாடு அதிகரித்து உள்ளதாலும் மென்தா ஆயிலில் முதலீடு செய்ய வர்த்தகர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மென்தா ஆயில் உற்பத்தி 36% குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சந்தையில் மென்தா ஆயிலுக்கான தேவை கணிசமாக இருக்கும்பட்சத்தில் உற்பத்தி குறையும் என்பதால் வரத்தும் குறையும். 
 
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சந்தோசி போன்ற முக்கியச் சந்தைகளில் மென்தா ஆயில் வரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் உள்ள தேவைக்கேற்ப மென்தா ஆயில் விலை உயர்ந்து வர்த்தகமாகும் சூழல் சாத்தியமாகி உள்ளது. ஆனால், குட்கா, பான் போன்றவற்றின் மீது சில மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக மென்தா ஆயிலின் விலை உயர்வு பெருமளவு இருக்காது. இதனால் வரும் வாரத்தில் மென்தா ஆயில் வர்த்தகம் பக்கவாட்டு நிலையிலேயே தொடரும். 

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமானது. ஏலக்காய்க்கான ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆனாலும் உள்நாட்டில் தேவை அதிகரிக்காததால் இந்த விலை உயர்வு தற்காலிகமானதாகவே கருதப்படுகிறது.
 
வழக்கமாக ஏலக்காய்க்கான தேவை அதிகம் இருக்கும் வட மாநிலங்களில், தற்போது அவ்வளவு தேவை இல்லை. இதனால் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய்க்கான ஏலம் ரூ.600 வரை குறைந்துள்ளது. ஆனால், இந்த வருடம் சாதகமான வானிலை இல்லாததால், ஏலக்காய் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதால் விலை மேகும் குறைவது கட்டுக்குள் இருக்கும். மார்ச் மாத ஃப்யூச்சர்ஸ் 0.84% உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.
 
ஏற்றுமதி சந்தையில் தற்போது ஏலக்காய்க்கான தேவை இருந்தாலும், அது நிரந்தரமானது இல்லை என்பதாலும், உள்நாட்டில் தேவை அதிகரிக்காததாலும் வரும் வாரங்களில் விலை குறைந்து வர்த்தகமாவதற்குதான் வாய்ப்புகள் அதிகம்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ