Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வழிகாட்டும் கோவை... கழிப்பறை கட்டும் ஸ்டார்ட் அப்கள்! #WhereisMyToilet

ரு நாட்டின் சுகாதாரம் கழிப்பறையிலிருந்துதான் தொடங்குகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கொல்லைப் புறத்திற்கு அலைந்துகொண்டிருப்போம், எப்போதுதான் இந்தியா தூய்மை இந்தியாவாக மாறப் போகிறது என்ற கேள்வியுடன் கழிப்பறைகளுக்கான தனது முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளார் கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் கே.விஜய கார்த்திகேயன்.

 

பிரதமர் மோடியின் ஸ்வாச் பாரத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கழிவறை கட்டித் தர ஒரு வித்தியாசமான மற்றும் புதுமையான வழியை உருவாக்கி இருக்கிறார். சுமாராக ஒரு கழிப்பறை கட்ட ரூ.20,000 தேவைப்படும். இதில் ரூ.4,000 மத்திய அரசு மானியமாக கொடுக்கிறது. தலா 2000 ரூபாயினை மாநில அரசும் மாநகராட்சியும் மானியமாகக் கொடுக்கும். மீதமுள்ள 12,000 ரூபாய் பொது மக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 2500 கழிப்பறைகள் கட்ட உத்தேசித்துள்ளனர்.

 கழிப்பறை கட்டும் வேலையை ஏற்கெனவே உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்காமல் புதியதாக துவங்கப்பட்டுள்ள கட்டுமானம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை கொடுக்கவுள்ளதாக  கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவுத்துள்ளது. இது குறித்து கோவை ஆடிட்டர் ஜி. கார்த்திகேயனிடம் கேட்டோம்.

‘‘கோவை மாநகராட்சி மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் கழிப்பறைகள் கட்ட ஏற்கெனவே உள்ள ஒப்பந்ததாரருக்கு கொடுக்காமல் புதியதாக துவங்கப்பட்டுள்ள கட்டுமானம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வேலையில்லாப் பட்டதாரிகள் தொழில்முனைவோர்களாக மாறவும் பெரிய வாய்ப்பாக இருக்கும். பெரிய முதலீடுகள் தேவைப்படாத இது போன்ற ஒப்பந்தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

இந்தத் திட்டம் வெளிப்படையாக செயல்படும் என்றும் கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. பொது சுகாதாரத்தை உறுதி செய்யும் இந்தத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

புதிய நிறுவனங்களைத் துவங்குவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதுடன் புதிய தொழில் முனைவோர்களுக்குப் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது மத்திய அரசு. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்துக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் பங்குகளின் விற்பனையின்போது ஏற்படும் மூலதன லாபத்துக்கும் சமீபத்தில் வரி விலக்கை அறிவித்துள்ளது மத்திய அரசு.

எனவே, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இது மாதிரியான கோவையைச் சுற்றியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூகப் பங்காற்ற இந்தத் திட்டம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் எனப்படும் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டியில் கட்டாயம் ஈடுபட வேண்டும். கம்பெனி சட்டம் 2013, பிரிவு 135-ன்படி எந்த ஒரு நிறுவனம் ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை செய்கிறதோ அல்லது ரூ.500 கோடிக்கும் மேல் நிகர மதிப்பு உள்ளதோ அல்லது ஐந்து கோடிக்கும் மேல் லாபம் ஈட்டுகிறதோ அந்த நிறுவனங்கள் கட்டாயமாக சி.எஸ்.ஆரில் ஈடுபட வேண்டும். கடந்த மூன்று நிதி ஆண்டுகளின் சராசரி லாபத்தில் இரண்டு சதவிகிதம் சி.எஸ்.ஆருக்கு செலவிடப்பட வேண்டும். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கு அமைந்திருக்கின்றனவோ, அந்த பகுதியைச் சுற்றியே சி.எஸ்.ஆர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிறைய நிறுவனங்கள் எப்படிச் செலவிடுவது என்று தெரியாமல் இருக்கின்றன. சி.எஸ்.ஆருக்கு செலவிட வேண்டும் என்கிற நிறுவனங்கள் இது போன்ற திட்டங்களில் பங்களித்தால் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கும் பங்களித்ததாக இருக்கும். இன்று அடித்தட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் செல்போன் வசதியுள்ளது. ஆனால் இந்தியாவின் மொத்த செல்போன் எண்ணிக்கை அளவு கூட சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லை. இத்தகைய திட்டங்களில் மொது மக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பங்குபெற்று அரசாங்கம் இதை சரியான முறையில் உபயோகப்படுத்தினால் அடித்தட்டு ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டம் நேரடியாக குறைந்த வருமானம் ஈட்டும் அடித்தட்டு ஏழை மக்களைச் சென்றடைகிறது’’ என்று முடித்தார்.

ஸ்வாச் பாரத், ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் சி.எஸ்.ஆர் ஆகிய மூன்று திட்டங்களையும் உள்ளடக்கிய இந்தத் திட்டத்தை தமிழகத்தில் உள்ள எல்லா மாநகராட்சிகளும் பின்பற்றலாமே!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ