Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்

அக்ரி கமாடிட்டி!

ஏலக்காய் (Cardamom)

 

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து வர்த்தகமானது. மேலும், சந்தைகளில் தேவையானது வழக்கத்தைவிட குறைந்ததும், ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்ததும் விலை குறைவுக்கு காரணமாக உள்ளன.
பருவநிலை சாதகமாக இல்லாத காரணத்தில், ஏலக்காய்க்கான தேவை அதிகம் இருக்கும்
 
வட மாநிலங்களில் தற்போது தேவை குறைந்துள்ளது. இதனால் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் இருப்பு தேக்கத்தில் உள்ளது. இதனால் விலையைக் குறைக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது. ஏலத்திலும் வர்த்தகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. புதன் அன்று முக்கியச் சந்தைகளுக்கு வந்த மொத்த 95,144 கிலோ ஏலக்காய் முழுவதும் வர்த்தகம் ஆகாமல் தேக்கமடைந்தது. இதனால் மேலும் விலையைக் குறைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால், இந்த வருடம் சாதகமான வானிலை இல்லாததால், ஏலக்காய் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதால் விலை குறைவும் கட்டுக்குள் இருக்கும். 
 
ஏற்றுமதி சந்தையில் தரமான ஏலக்காய் இல்லாததால், ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்துள்ளன. மேலும், உள்நாட்டிலும் ஏலக்காய்க்கான தேவை அதிகம் இல்லை. இந்த நிலையில் முக்கிய சந்தைகளில் வரத்து அதிகரிப்பதாலும், தேக்கத்தில் இருப்பு இருப்பதாலும் வரும் வாரங்களில் விலை குறைந்து வர்த்தகமாவதற்குதான் வாய்ப்புகள் அதிகம்.

மஞ்சள் (Turmeric)

 

மஞ்சள் முக்கியச் சந்தைகளில் கடந்த வாரத்தில் அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் விலை உயர்ந்து வர்த்தகமானது. இதற்கு சந்தைகளில் புதிதாக வந்துள்ள மஞ்சளுக்கு நல்ல மவுசு இருப்பதே காரணம். ஸ்பாட் மற்றும் ஃப்யூச்சர்ஸ் ஆகிய இரண்டு சந்தைகளிலுமே மஞ்சள் வர்த்தகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் புதன் அன்று மஞ்சளின் அனைத்து கான்ட்ராக்ட்களுமே 2 சதவிகிதக்கும் மேல் உயர்ந்து வர்த்தகமாகின. 
 
நிசாமாபாத், சங்லி மற்றும் ஈரோடு ஆகிய முக்கியச் சந்தைகளில் வர்த்தகர்கள் புதிய மஞ்சளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு ரூ.100 வரை அதிகமாக கொடுத்து வர்த்தகம் செய்தனர். ஈரோடு சந்தையில் குவிண்டால் மஞ்சள் ரூ.9000-ஐ தாண்டி வர்த்தகமானது.
 
புதிய மஞ்சள் வருகையால், சந்தையில் மஞ்சளுக்கான வர்த்தகம் பாசிட்டிவாக உள்ளது. வட இந்தியப் பகுதிகளிலும் தேவை அதிகரித்து காணப்படுகிறது. மேலும், வர்த்தகர்களும் அனைவரும் வாங்கும் சென்டிமென்டில் உள்ளனர். இதனால் வரும் சில வாரங்களுக்கு மஞ்சளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்பு இல்லை.

சென்னா (Chana)

 

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் சென்னா விலை உயர்ந்து வர்த்தகமானது. சென்னாவுக்கான தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆனால், வரும் பருவத்தில் புதிய அறுவடை சென்னா சந்தைக்கு வரவிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், விலை உயர்வு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
 
மேலும், பருப்பு வகைகளின் இறக்குமதி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டுமே ரூ.3,277 கோடி மதிப்புள்ள பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது வழக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருப்பு வகைகளின் விலை உயர்ந்ததை அடுத்து, இந்திய அரசு பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அவற்றில் இறக்குமதியை அதிகரிப்பதும், இருப்பில் கணிசமான பருப்பு வகைகளைச் சேகரித்து வைப்பதும் முக்கியமானவை. இதனால் விலை சந்தையில் கட்டுக்குள் இருக்கிறது. 
 
இந்த நிலையில், சென்னாவுக்கான தேவை கணிசமாக இருந்தாலும், பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதால், சென்னா வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் பக்கவாட்டில் வர்த்தகமாகும்.

மென்தா ஆயில் (Menta Oil)

கடந்த வாரத்தில் மென்தா ஆயில் ஏற்றத்தில் வர்த்தகமானது. சந்தைக்கு வரும் மென்தா ஆயில் வரத்து கட்டுப்படுத்தப்பட்டதாலும், மென்தா ஆயில் பயன்பாடு அதிகரித்து உள்ளதாலும் இதில் முதலீடு செய்ய வர்த்தகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், யூக வணிகர்களால் மென்தா ஆயிலுக்கான தேவை செயற்கையாக உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
 
அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மென்தா ஆயில் உற்பத்தி 36% குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையை சமாளிக்க விலை உயர்த்த வேண்டிய நிலை உருவாக வாய்ப்புள்ளது. 
 
வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் குட்கா, பான் போன்றவற்றின் மீது சில மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக மென்தா ஆயிலின் விலை உயர்வு பெருமளவு இருக்காது. இதனால் வரும் வாரத்தில் மென்தா ஆயில் வர்த்தகம் பக்கவாட்டு நிலையிலேயே தொடரும்.

 

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ