Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லட்சியத்தை அடைய செய்ய வேண்டியது என்ன?

வாழ்க்கையில் நம் இலக்கை, லட்சியத்தை நோக்கி செல்லக்கூடிய பாதை கரடுமுரடானது. இந்தப் பாதையில்  பயணம் செய்யும்போது பல இழப்புகளை சந்திக்க நேரிடும், இந்த இழப்புகளை தாங்கிக்கொண்டு தன்னுடைய இலக்கில் சமரசம் செய்யாமல் யார் பயணிக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் சாதிக்கிறார்கள். இந்த மாதிரி தன்னுடைய இலக்கில் எந்தவிதமான சமரசமும் செய்யாமல்  லட்சியத்தை அடைந்த ஒரு இளைஞனின் கதைதான் விப்லாஷ் என்ற ஆங்கில படம்.

இந்த படத்தில் இருபது வயது மதிக்கத்தக்க ஆண்ட்ரூ என்ற இளைஞனுக்கு  எந்த நேரமும் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருப்பது மட்டும் தான் வாழ்க்கை. எப்படியாவது டிரம்ஸ் வாசிப்பதில் சாதிக்க வேண்டும் என்பது அவனின் கனவு. அந்தக் கனவுக்காக தன் காதலையும் கூட  தியாகம் செய்கிறான்.

டிரம்ஸ் பயிற்சி பெற ஒரு இசை  வகுப்பில் சேர்கிறான். அங்கே இசை கற்றுத் தரும் ஆசிரியருக்கும், அவனுக்கும் இடையே அடிக்கடி முரண்பாடு ஏற்படுகிறது. அவனுக்கு  சரியான  வாய்ப்பே தரப்படுவதில்லை. இதையெல்லாம் தாண்டி அவன் எப்படி தனது இலக்கை அடைகிறான் என்பது தான் இந்தப் படத்தின் கதை.

ஆண்ட்ரூவின் சிந்தனையும் செயலும் எப்போதுமே இசையைப் பற்றியே இருக்கிறது. தனது திறமைகளை வெளிப்படுத்த துடிக்கும் அவனுக்கு சரியான  வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல்  ஆசிரியரால்  அவமானப்படுத்தப் படுகிறான். இதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் தொடர்ந்து தனது லட்சியத்தை எட்ட போராடிக் கொண்டிருந்ததே அவனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இறுதியில் அவனின் ஆசிரியரிடமிருந்து கூட பாராட்டைப் பெறுகிறான்

இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை உருவாகும், அந்த இளைஞனின் விடா முயற்சியும் கடும் உழைப்பும் நமக்கு எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் நம் இலக்கில் இருந்து விலகாமல் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்க வேண்டும் என்ற தைரியத்தைக் கொடுக்கும். மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தை இயக்கியவர்  டேமியன் சாசெல் என்ற முப்பது வயதே ஆன இளைஞன்.

ஆண்ட்ரூவைப் போல ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய இலட்சியத்தை  நோக்கிப் பயணிக்கும் போது இடையில் எந்தவிதமான தோல்வி ஏற்பட்டாலும், அவமானங்கள் நிகழ்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல்,  தொடர்ந்து தன்னுடைய இலக்கில் சமரசம் செய்யாமல் பயணித்தால்  வெற்றி அடைவது நிச்சயம்.

த.சக்திவேல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ