Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட்... தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?


த்திய ரயில்வே பட்ஜெட்  25-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அண்மையில் அவர் தெரிவித்தார்.

எனினும், கடந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு புதிய ரயில்கூட அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே நிலுவையில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இந்த முறையாவது தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற கேள்வியுடன் தமிழக பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ரயில்வே பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவுடன் பேசினோம். அவர் “ரயில்வே திட்டங்களைப் பொறுத்த வரை தமிழகத்தில் நிலுவையில் நிறைய திட்டங்கள் உள்ளன. ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் அறிவித்த திட்டங்களுக்கு இன்னும்கூட நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

கடந்த காலங்களில் தமிழகத்துக்கு அறிவிக்கப் பட்ட பல்வேறு புதிய வழித்தடங்களுக்கான ரயில் பாதை அமைப்பு, மீட்டர்கேஜ் பாதைகளை அகல பாதைகளாக மாற்றுதல், இரட்டை ரயில் பாதை திட்டங்கள் என அனைத்து திட்டங்களும் நிலுவையில்தான் உள்ளன.

உதாரணத்துக்கு, சென்னையிலிருந்து மகாபலிபுரம், கடலூர் வழியாக பாண்டிச்சேரிக்கு அறிவிக்கப்பட்ட திட்டமும் கிடப்பில்தான் இருக்கிறது. பழனி முதல் ஈரோடு வழியான ரயில் திட்டமும்  நிலுவையில்தான் உள்ளது.

இது மட்டுமல்ல, தஞ்சாவூர் முதல் அரியலூர், மொரப்பூர் முதல் தர்மபுரி, திருவண்ணாமலை முதல் ஜோலார்பேட்டை, திண்டுக்கல் முதல் குமுளி, நீடாமங்கலம் முதல் பட்டுக்கோட்டை உட்பட பல அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. தமிழக அரசின் அலட்சியத்தாலும், பிடிவாதத்தாலும் தமிழக ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையிலே உள்ளது” என்றார்.

சென்னை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் சேவைக்கு ரயில்வே துறையுடன் கைகோர்த்து செயல்பட தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான கட்டமைப்பை உருவாக்க, சென்னை - கன்னியாகுமரி இடையே ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க, ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே, ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஒவ்வொரு  பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன.

கடந்த காலத்தில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய வழித்தடங்களுக்கான ரயில் பாதை அமைப்பு, இரட்டை ரயில் பாதை திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் பற்றாக்குறையைக் காரணம் காட்டி நிதி ஒதுக்கப்பட வில்லை.

எனினும், இந்த முறை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தமிழக ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அண்மையில் கூறி இருப்பது நம் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும் என்பதே தமிழக ரயில் பயணிகளின் விருப்பம்.

இந்த முறையாவது மத்திய அரசு, தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்வரும் ரயில்வே பட்ஜெட்டுக்காக காத்திருப்போம்.

சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ