Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் - 2016 நிதித் துறையில் எதிர்பார்க்கப்படும் தனிநபர் வரிச் சலுகைகள்!

 
சி.சரவணன்

ரும் பிப்ரவரி 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் (2016-17) தாக்கலாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் தனிநபர்கள் நிதி மேலாண்மை மற்றும் வருமான வரி முதலீடு குறித்த எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் துறைகளை சேர்ந்தவர்களிடம் கேட்டோம். எதிர்பார்க்கும் வரிச் சலுகைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.

வருமான வரிச் சலுகை!

விலைவாசி உயர்வால் பலராலும் செலவை சமாளிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. எனவே, வரி கட்ட வேண்டிய அடிப்படை வரம்பு பொதுப் பிரிவினருக்கு (ஆண், பெண் 60 வயதுக்குள்) ரூ.2.5 லட்சம் என்று இருப்பதை ரூ.3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்பது தொடங்கி, ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். 

80சி பிரிவின் கீழ் தற்போது பிஎஃப், பிபிஎஃப், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், இஎல்எஸ்எஸ் ஃபண்ட் முதலீடு போன்றவை சேர்ந்துதான் ரூ.1.5 லட்சமாக இருக்கிறது. இந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாக உயர்த்தினால், இன்னும் அதிக வரிச் சலுகை பெற முடியும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த் தார்கள். ஆனால், கடந்த ஆண்டு ரூ.50,000-தான் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு வருமான வரி வரம்பு சற்றே உயரலாம் என்று எதிர்பார்க்கலாம்.

பங்குச் சந்தை!

கடந்த 2015-16ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கான காலத்தை ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரித் தது. தற்போது ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி ஃபண்டில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரி எதுவும் கிடையாது. இப்போது 2016 - 17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இந்த முதலீடுகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி (Capital gain tax) விதிக்கப்படலாம் அல்லது நீண்ட கால முதலீடு என்பது மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கப் படலாம் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்..

பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன், மத்திய பட்ஜெட்டில் முக்கியமாக கீழ்க்கண்ட ஐந்து விஷயங்களை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

1. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் பெறும் டிவிடெண்ட் தொகை மீது குறைந்தபட்ச வருமான வரியாக 10% , அதே சமயத்தில், டிவிடெண்ட் வருமானத்தை நம்பி இருக்கும் சிறு முதலீட்டாளர்கள், குடும்பத் தலைவிகள், ஓய்வு பெற்றவர்கள் என தனியாக – வழக்கமான வரி விலக்குக்கு மேல், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வருமான வரி விலக்கு கொடுக்க வேண்டும்.

2. புதிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத் தலைவி களை ஊக்குவிக்க சிறப்புச் சலுகைகள் அளிக்க வேண்டும்

3. ஓர் ஆண்டுக்கு  பிறகு விற்கும் பங்குகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகையைப் பெறுவதற் கான காலகட்டத்தை அதிகரிக்கும்பட்சத்தில், எஸ்டிடி (Service transaction tax) வரியை நீக்க வேண்டும். ஊக வணிகமான முன்பேர வர்த்தகத்தில் மட்டுமே எஸ்டிடி இருக்க வேண்டும்.

4. குறிப்பிட்ட அளவுக்கு மேல் விற்கப்படும் பெரிய விவசாய நிலங்கள் மீது நீண்ட கால ஆதாய வரி குறைந்தபட்சமாக 10 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும்.

5. தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முதலீடுகளையும், பங்குச் சந்தையைப் போலவே, கட்டாயமான ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தயார் செய்யவேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’’

மியூச்சுவல் ஃபண்ட்!

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி, சிறு முதலீட்டாளர் களுக்கு அதிக வரு மான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தை கேட்டிருக்கிறது. ஆம்ஃபி அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி சி.விஆர்.ராஜேந்திரனுடன் பேசினோம்.

‘‘80சி பிரிவில் பிஎஃப், பிபிஎஃப், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் அசல், கல்விக் கட்டணம் என பல சேர்ந்துதான் ரூ.1.5 லட்சத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த முதலீட்டு வரம்பு எளிதில் எட்டப்பட்டுவிடுவதால், இஎல்எஸ்எஸ் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் வரிச் சலுகை கோர முடியாத நிலை காணப்படுகிறது. மத்திய அரசு ஈக்விட்டி முதலீட்டை ஊக்கப்படுத்தி வருகிறது. எனவே, இஎல்எஸ்எஸ் முதலீட்டுக்கு தனியே ரூ.50,000 வரிச் சலுகை அளிக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்றார். 

என்பிஎஸ் முதலீட் டில் தற்போது முதலீட்டுக்கு மட்டும் வரிச் சலுகை அளிக் கப்படுகிறது. ஆனால், முதிர்வின்போது மற்றும் பென்ஷன் தொகைக்கு வரி கட்ட வேண்டியிருக்கிறது. இதனை முற்றிலும் வரி இல்லாத முதலீடாக மாற்றினால், அதில் அதிகம் பேர் முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

ரியல் எஸ்டேட்!

இந்திய ரியல் எஸ்டேட் துறை மத்திய பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கிறது என இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் (பிஏஐ) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத் தலைவர் என். ரகுநாதன் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு: 

1. ரியல் எஸ்டேட் துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர, கடன் வாங்கி 1,000 சதுர அடிக்கு குறைவாக வீடு கட்டுபவர்களுக்கு அல்லது வாங்குபவர்களுக்கு சிறப்பு வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டும்.

2. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் பசுமைக் கட்டடங்களைக் கட்டுபவர் களை ஊக்குவிக்கவும், இது போன்ற கட்டடங்களை கட்டு பவர்கள் மற்றும் வாங்குபவர் களுக்கு வருமான வரியில் வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டும்.

3. சிமென்ட் விலை உயர்வைத் தடுக்க, மத்திய அரசு சிமென்ட் இறக்குமதியை மேற்கொள்ள வேண்டும். மேலும், அந்த சிமென்ட் நாடு முழுக்க கட்டுமானத்துக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.

4. தற்போது கட்டுமானத் துறைக்கு என தனி அமைச்சகம் இல்லாமல் இருக்கிறது. அதனை உருவாக்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும்.’’

இன்ஷூரன்ஸ்!

டாடா ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மிரன்ஜித் முகர்ஜி இன்ஷுரன்ஸ் துறையில் தான் எதிர்பார்க்கும் விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

‘‘இந்தியாவில் காப்பீடு எடுக்கப்பட்டிருக்கும் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதுவும் பொதுக் காப்பீடு எடுப்பதால் என்ன லாபம் என்கிற விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில், தீ காப்பீடு, இயற்கை பேரிடர் இன்ஷூரன்ஸ் குறித்து பொது மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த விளம்பரம் வெளியிட மற்றும் விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்த மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் உதவியுடன் பொதுத் துறை காப்பீடு நிறுவனங்கள் அளித்துவரும், யுனிவர்சல் ஹெல்த் ஸ்கீமை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். மேலும், இதனை அனைத்து மாநிலங்களி லும் அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்” என்றார். 

ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி ராவ் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கான வரிச் சலுகை அதிகரிக்கப்பட்டது மூலம் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வரைக்கும் வரிச் சலுகையுடன் பாலிசி எடுக்க முடிந்திருக்கிறது. அண்மையில் கன மழை மற்றும் வெள்ளத் தால் பாதிப்புக்கு உள்ளான சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க கட்டும் பிரீமியத்துக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும்’’ என்றார்.

நிபுணர்களின் பரிந்துரையை நிதி அமைச்சர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.


‘‘சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் வரிச் சலுகை வேண்டும்!’’

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை.

‘‘வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது வீட்டுக் கடன்  மூலம் வாங்கிய  வீட்டில் வசித்தால் ரூ.2 லட்சம் வரையிலும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம்.

இனி, வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும்.

வீட்டைக் கடன் வாங்கி கட்டினால் அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

உதாரணமாக, ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படு வதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்தபின் அதில் குடிபுகுந்த பின்னரே அனுமதிக்கப் படுகிறது.

இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக்
கொடுக்கும். 

நீண்ட கால மூலதன ஆதாயத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும்.

வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம், வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே, சில வகை பரிவர்த்தனைகளுக்கான
டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ