Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி... சொன்னது என்ன? செய்தது என்ன?

 

வ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பல திட்டங்களை அறிவித்து, அதற்காக நிதியையும் ஒதுக்கீடு செய்வார் மத்திய நிதி அமைச்சர். அப்படி அறிவிக்கும் திட்டங்கள் அடுத்த பட்ஜெட்டுக்குள்ளாவது  நிறைவேறத் தொடங்கி இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அறிவித்த திட்டங்கள் என்ன, அந்தத் திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை பார்க்கலாமா?


எய்ம்ஸ் மருத்துவமனை!

என்ன சொன்னார்?

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், அஸ்ஸாம், காஷ்மீர், இமாசலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர்.

செய்தாரா?


தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), பெருந்துறை ஆகிய ஐந்து இடங்களில் ஏதேனும் ஒன்றில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த இடங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. சில மாநிலங்களில் எய்ம்ஸ் அமைக்க  இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல்லும்  நாட்டப்பட்டு  விட்டது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்துதர வேண்டியது மாநில அரசின் வேலை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நமது மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

ஜிஎஸ்டி வரி!

என்ன சொன்னார்?


சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி வரி) 2016–ம் ஆண்டு ஏப்ரல் 1–ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே அறிவித்தார்.

செய்தாரா?

ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் இன்னும் கிடப்பில்தான் உள்ளது. மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதால், இந்த ஜிஎஸ்டி மசோதா இதுவரை தாக்கல் செய்யப்படாமலே இருக்கிறது. கடந்த கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க. அரசாங்கம் பலவாறு முயற்சித்தது. இந்த மசோதாவில் சில முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. இந்த மாற்றங்களில் சிலவற்றை பா.ஜ.க. ஏற்றுக் கொண்ட போதும், நாடாளு மன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. எனவேதான், இந்த மசோதா நிறைவேறவில்லை.  2016 - 17-ம் நிதி ஆண்டிலாவது இந்த மசோதா நிறைவேறுமா என்று பார்ப்போம்.

கறுப்புப் பணம்!

என்ன சொன்னார் ?

வெளிநாடுகளில் கறுப்புப் பணம் குவிப்பதை ஒழிக்க ஒரு சட்டமும், உள்நாட்டில் பினாமிகள் பெயரில் கறுப்புப் பணத்தை குவிப்பதை ஒடுக்க மற்றொரு சட்டமும் இயற்றப்பட விருப்பதாக கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார் நிதி அமைச்சர். அதன்படி, வெளிநாடுகளில் சொத்துக்கள், கறுப்புப் பணம் குவித்து அதை மறைத்து, வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் களுடன் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது. இதற்காக செட்டில்மென்ட் ஆணையத்தை அணுகவும் அனுமதி கிடையாது. வரி அளவில் 300% அபராதமாக விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.

செய்தாரா?

இந்த அறிவிப்பு இன்னும் அறிவிப்பு என்கிற அளவிலேயே உள்ளது. கறுப்புப் பணம் குவித்து வைத்துள்ளவர்களின் பெயர்கள் வெளிவருவதிலேயே பல சிக்கல் இருக்கிறது. இந்த பட்ஜெட்டி லாவது கறுப்புப் பணம் குறித்து தீர்க்கமான முடிவினை மேற்கொள்ள வேண்டும்.

தங்க திட்டங்கள்!

என்ன சொன்னார்?

இந்திய மக்கள் மற்றும் கோவில்களில் முடங்கியுள்ள 20,000 டன் தங்கத்தை, புழக்கத்துக்குக் கொண்டுவரவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் தங்க இறக்குமதியை குறைக்கவும் தங்க திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

செய்தாரா?

“தங்கப் பத்திரம், தங்க வைப்பு நிதி, அசோக சக்கர முத்திரை பதித்த தங்க நாணயம் திட்டம்” என்னும் மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டன. வீடுதோறும் போஸ்டர் ஒட்டாத குறையாக விளம்பரம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் திட்டம் தொடங்கப் பட்டு, இரண்டு வாரக் காலத்தில் வெறும் 400 கிராம் தங்கம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு கோயிலாக குறிப்பிட்டளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பெனிகள் மீதான வரி!

என்ன சொன்னார்?

கம்பெனிகள் மீதான வரி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இதுவரை விதிக்கப்பட்டு வந்த 30 சதவிகித கம்பெனி வரி இனி 25 சதவிகித மாக இருக்கும் என்று அறிவித்தார்.

செய்தாரா?

இந்த நடைமுறை எந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும், ஆண்டின் தொடக்கத்திலிருந்தா அல்லது நிதி ஆண்டிலிருந்து கணக்கிடப்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் இது குறித்து தொழில் துறையினரே குழம்பியுள்ளனர். அவர்களின் குழப்பம் இந்த பட்ஜெட்டிலாவது தீரவேண்டும்.

பென்ஷன், விபத்து, ஆயுள்!

என்ன சொன்னார்?

‘அடல் பென்ஷன் யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டம், ‘சுரக்‌ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக் காப்பீடு திட்டம், ‘பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.

செய்தாரா?

அறிவித்தபடியே அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தத்  திட்டம் குறித்து பாமரர்களுக்கு போதிய விழிப்பு உணர்வு இல்லை என்றுதான் கூறவேண்டும். கிராமப்புறம் தோறும் ஏழைகள் பயன்பெறும் வகையில் கூடுதல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் நல்லதே.

பினாமி சொத்து!

என்ன சொன்னார்?

பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்கு தொடர்ந்து கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும். குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார்.

செய்தாரா?

ஆனால், பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

‘நை மன்ஜில்’ திட்டம்!

என்ன சொன்னார்?

‘நை மன்ஜில்’ என்ற ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் முறையான பள்ளிக்கல்வியை முடிக்காத சிறுபான்மை இனத்தவர், அந்தக் கல்வியை பெற்று, சிறப்பான வேலை வாய்ப்பைப் பெற வழி ஏற்படும். இந்தத் திட்டம், 2015-லேயே தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினர் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டது.

செய்தாரா?

அண்மையில் இந்தத் திட்டத்தின், கீழ் 5 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் உதவியை மத்திய அரசுக்கு உலக வங்கி வழங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டு உள்ளன.

பான் எண் கட்டாயம்!

என்ன சொன்னார்?

ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் எந்தப் பொருளை ரொக்கத்துக்கு வாங்கினாலும், விற்றாலும் ‘பான்’ எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.

செய்தாரா?

பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு வந்தபின் நகைக் கடைக்காரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின், பான் எண் குறிப்பிடுவதற்கான வரம்பை ரூபாய் 2 லட்சமாக அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறையில் இருக்கிறது.

மானிய விலை சிலிண்டர்!

என்ன சொன்னார்?

எம்.பி.க்கள் மற்றும் மந்திரிகள் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதை தானாக முன்வந்து நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வலியுறுத்தினார்.

செய்தாரா?

மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுத் தரவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி வசதியானவர்கள், அமைச்சர்கள் பலரும் சமையல் எரிவாயு  மானியத்தை விட்டுத் தந்தனர். 

கடந்த டிசம்பரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த அரசு திட்டமிட்டது. இந்த மானிய ரத்து ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை  70,69,570 பேருக்கு  மேல் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

சுருக்கமாக...


கடந்த 2015 - 16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில  திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது பாசிட்டிவ்வான விஷயமே. ஆனால், சில திட்டங்கள், திட்டங்களாகவே உள்ளன. கூடிய விரைவில் எல்லோரும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறவேண்டும் என்பதே எல்லோரது விருப்பம்.

ஏற்கெனவே அறிவித்த திட்டங்களை இனி உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதுடன், மேலும் நல்ல திட்டங்களை எதிர்வரும்  பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்போம்.

சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ