Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை; பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் கருத்து

உலகம் முழுவதிலும் அடுத்த நாள் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத நிலை இருப்பதாகவும், நடப்பு நிதி ஆண்டில் 7.6 சதவிகித வளர்ச்சியை எட்டுவதே குறிப்பிடத்தக்க வளர்ச்சிதான் என்று மத்திய பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


2016-17-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் வரும் 29-ம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், "சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு நிலை காணப்படு கிறது. இதுபோன்ற நிலை இதற்கு முன் ஏற்பட்டது கிடையாது. முன்பெல்லாம் அடுத்த வாரம் ஐரோப்பாவில் என்ன நடக்கும் என்று கணிக்க முடிந்தது. இதே போலத்தான் உலகின் பிற பாகங்களின் நிகழ்வுகளைக் கணித்தோம். ஆனால் இப்போது அது சாத்தியமாகவில்லை. எங்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இன்று உலகம் முழுவதிலும் அடுத்த நாள் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.

சர்வதேச அளவில் பொருளதார மந்த நிலை நிலவினாலும் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.  பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக தனியார் முதலீடுகள் குறைந்துள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட அரசு கூடுதலாக முதலீடுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2015-2016-ம் நிதி ஆண்டில் 7.6 சதவிகித அளவுக்கு இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிக உயர்ந்த அளவாகும். எனவே 7.6 சதவிகித வளர்ச்சியே மிகச் சிறப்பான வளர்ச்சிதான்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ