Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட்.... யாரை ஏமாற்றும் வேலை?

காட்சி ஊடகங்கள் பரப்பரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றன... மணிக்கு ஒரு அப்டேட் கைப்பேசியில் வந்து விழுகிறது. வாட்ஸ் அப் குழுக்களில் விவாதங்கள் சூடாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அனைத்தும், இன்று வெளியான ரயில்வே பட்ஜெட் குறித்துதான்... ஆனால் இந்த விவாதங்களில், இந்த பரப்பரப்புகளில் நாம் ஒன்றை மறந்து விட்டோம். இன்றுதான் ரயில்வே பட்ஜெட் என்றால், ஏன் ரயில்வே தட்கல் கட்டணத்தை,  குளிர்சாதன பெட்டிகளுக்கான கட்டணத்தை டிசம்பர் மாதமே ஏற்ற வேண்டும்...?
 
கட்டணங்களை ஏற்ற இரண்டு மாதங்கள் கூட காத்திருக்க முடியாத நிலையிலா ரயில்வே துறை தள்ளாடுகிறது...?  இரண்டு மாதங்களுக்கு  முன்பு  கூட போக வேண்டாம், இன்று பட்ஜெட்டை வைத்துக் கொண்டு, நேற்று ஒரு அறிவிப்பை ரயில்வே துறை வெளியிடுகிறது. அதாவது, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் 199 கி.மீக்குள் பயணம் செய்பவர்களின் டிக்கெட்டுகள், மூன்று மணி நேரத்திற்கு மேல் செல்லத்தக்கதல்ல என்ற அறிவிப்பு.





 
 

ஏன் நாம் கேள்வி கேட்பதில்லை, இன்று பட்ஜெட்டை வைத்துக் கொண்டு, நேற்று ஏன் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்....?  இந்த கேள்விக்கான விடையில்தான், மொத்த விஷயமும் அடங்கி இருக்கிறது.
 
 “இது ரயில்வேதுறையை தனி ஆணையமாக மாற்றும் வேலை என்கிறார்”, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன்.
 
சரி, தனி ஆணையமாக மாற்றினால் என்ன என்கிறீர்களா...?  அதற்கான விடையையும் அவரே கூறுகிறார்.
 
“முன்பே நாம் லாபத்தில் இயங்கி கொண்டிருந்த தொலைப்பேசி துறையை தனி ஆணையமாக மாற்றி ஏறத்தாழ அதை கொன்றே விட்டோம்...இரண்டு லட்சம் பேர் வேலை பார்க்கும், ரயில்வே துறையிலும் அப்படி நடந்தால், நம் நாட்டின் சமூக - பொருளாதாரம் என்ன ஆகும்...?
 
ஆணையமாக மாற்றினால் என்ன ஆகும்?
 
தனி ஆணையமாக மாற்றினால், தனியார் பங்குதாரர்கள் உள்ளே வருவார்கள், அவர்களின் கை ஓங்கும். பயணிகளின் நலன்களை விட, தனியார் பங்குதாரர்களின்  நலனே பிரதானமாகும். ரயில்வே துறை சேவை என்பதிலிருந்து, முழு வணிகமாக மாறும். ஏற்கெனவே, ரயில்வேயின் அனைத்து துறைகளிலும் தனியார் உள்ளே வந்துவிட்டார்கள், தண்டவாளமும், பெட்டியும் மட்டும்தான் அரசிற்கு சொந்தமானதாக இருக்கிறது. இதில் தனி ஆணையமாக மாறினால். இந்த துறை முழு தனியார் மயமாகும்.
 
தனியார் உள்ளே வந்தால் தரம் மேம்படும் என்ற எண்ணம் சிலரிடையே காணப்படுகிறது. அப்படி தனியார் உள்ளே வந்தால் தரம் மட்டும் மேம்படாது, அதன் கட்டணம் சந்தை சார்ந்ததாக மாறி விடும். மேலும் திட்டமிட்ட பொருளாதாரம் என்பதாகவும்  இருக்காது. அதாவது, தினம் தினம் கட்டணம் ஏறும், குறையும்...   இப்போது எரிபொருள் கட்டணம் இருப்பது போல்.
 
 நாம் விவசாயத்திற்கும், பெண்கள் நலத்திற்கும் தனி பட்ஜெட் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இருக்கும் தனி பட்ஜெட்டையும் கொல்லும் வேலையை, மத்திய அரசு செய்து கொண்டுக்கிறது. இதில் பி.ஜே.பிக்கும், காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்கிறார் கி.வெங்கட்ராமன்.
 
இதே  கருத்தை வழிமொழிகிறார் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட். 
 
இது ரயில்வே துறையை முழுவதும் தனியார் மயமாக்கும் வேலை. பயணிகள் நலன் என்பதிலிருந்து, நிறுவனங்களின் நலன் என்பதற்கு தடம் மாறுகிறது ரயில்வே துறை.
 
- மு. நியாஸ் அகமது

(விகடன் டாட் காமில் வெளியான கட்டுரை)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ