Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி!


ஏலக்காய் (Cardamom)
கடந்த வாரத்தில் சந்தையில் ஏலக்காய்க்கான தேவை அதிகரிக்காமல் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும் சந்தைகளில் உள்ள ஏலக்காய் தேக்கத்தின் காரணமாக தரம் குறைந்ததால் வர்த்தகர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை இதுவும் விலைக் குறைவிற்கு காரணமானது. 
ஏலக்காய்க்கான தேவை அதிகரித்தாதற்கு பருவநிலை சாதகமாக இல்லை என்பதே காரணம். குறிப்பாக தேவை அதிகம் இருக்கும் வட மாநிலங்களில் தற்போது தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஏலக்காய் சந்தைகளில் தேக்கமடைந்து தரம் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரிக்கவே விலையைக் குறைக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது. 
சந்தையில் பிரீமியம் தர ஏலக்காய் விலை கிலோவுக்கு ரூ. 90 மட்டுமே அதிகமாக வர்த்தகமானது. மார்ச் மாத ஃப்யூச்சர்ஸ் 0.71% குறைந்து கிலோ ஏலக்காய் ரூ. 669.50-க்கு வர்த்தகமாகிறது. மேலும் ஏற்றுமதிக்கும் தரமான ஏலக்காய் இல்லாததால் ஏற்றுமதி ஆர்டர்களும் குறைந்துள்ளன. 
இந்த நிலையில் முக்கிய சந்தைகளில் வரத்து அதிகரிப்பதாலும், தேக்கத்தில் தரம் குறைந்ததாலும் வரும் வாரங்களில் விலை குறைந்து வர்த்தகமாவதற்குதான் வாய்ப்புகள் அதிகம். 


சென்னா (Chana)
கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் சென்னாவும் ஏற்ற இறக்கத்திலே வர்த்தகமானது. வரும் பருவத்தில் சென்னா உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் விலை இறங்கவும், அவ்வப்போது சென்னாவுக்கான தேவை அதிகரிப்பதால் விலை உயரவும் செய்கின்றன. மேலும் பருப்பு வகைகளின் இறக்குமதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டுமே ரூ. 3277 கோடி மதிப்புள்ள பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 
இந்திய வேளாண் துறையின் அறிக்கைப்படி இந்த வருடம் சென்னா உற்பத்தி கடந்த வருடத்தைக் காட்டிலும் 7.6 லட்சம் டன் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு சென்னா வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னாவுக்கான தேவை தற்போது குறைவாக இருப்பதால் விலையும் குறைகிறது. கடந்த வியாழன் அன்று சென்னாவின் ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ் முந்தைய நாளைக் காட்டிலும் 1.83% குறைந்தது. 
பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வரத்து அதிகரிக்கும் என்பதால் சென்னா விலை குறைந்தே வர்த்தகமாகும். உள்நாட்டு, வெளிநாட்டு தேவை வழக்கத்தை விட அதிகமானால் விலை உயர வாய்ப்புள்ளது.


மஞ்சள் (Turmeric)
மஞ்சள் கடந்த வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. சந்தைகளில் புதிய மஞ்சள் வருகை தந்துள்ளதால் அதற்கு வரவேற்பு இருக்கிறது. ஆனால் அதிகபடியான வரத்து தேவைக்கு மீறி  இருப்பதால் விலை குறைந்தது. 
மேலும் ஏற்றுமதி ஆர்டர்களும் பெருமளவில் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் மஞ்சளுக்கான தேவை இல்லாததால் விலை குறைவை தடுக்க இயலவில்லை. மஞ்சளின் ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ் 1.2% குறைந்து வர்த்தகமாகிறது. குவிண்டால் மஞ்சள் ரூ. 8600 முதல் ரூ. 8990 வரை என்ற வரம்பில் வர்த்தகமாகிறது. வட இந்திய வர்த்தகர்கள் பெரும்பாலும் மஞ்சள் விலை மேலும் குறையும், குறைந்த பிறகு வாங்கலாம் என்று காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் முக்கியச் சந்தைகளில் மஞ்சளின் வரத்து வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் புதிய மஞ்சளை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் காட்டினாலும் தேவை அதிகரிக்காவிட்டால் விலை உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்பு குறைவுதான்.
ஜீரகம் (Jeera)
முக்கியச் சந்தைகளில் ஜீரகம் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. ஜீரகத்திற்கான தேவை சந்தையில் கணிசமாக இருந்தாலும் ஜீரக வரத்து அதிகரிக்கும் என்பதால் விலை பெரும்பாலும் ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. 
வரும் வாரங்களில் மேலும் வரத்து அதிகரிக்கும் என்பதால் இப்போது உள்ள ஜீரக இருப்பு தரம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஜீரகம் வாங்கும் ஆர்வம் வர்த்தகர்களிடையே குறைந்துள்ளது. இந்த நிலையில் சந்தையில் ஜீரகத்திற்கான தேவை அதிகரிக்காவிடில் விலை குறைவதற்குதான் வாய்ப்பு அதிகம்.
- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ