Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய பட்ஜெட் 2016... தலைவர்கள் கருத்து

2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடி:-

பட்ஜெட் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ள மோடி விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டி காட்டியுள்ள மோடி 2018-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெறுவதை உறுதி செய்வதன் மூலம் சாமானிய மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.

சாதாரண அடுப்பில் இருந்து ஒ‌ரு நாளைக்கு வெளியேறும் புகை 400 சிகரெட்டில் இருந்து வெளியாகும் புகைக்கு சமம் என்பதை குறிப்பிட்டுள்ள மோடி இதனை கருத்தில் கொண்டே 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சுட்டிக்காட்டிய மோடி , வரி செலுத்தும் நடைமுறை சுலபமாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

முந்தைய அரசுகள், முதல்நிலை கல்வியில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தரமான கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

ஜெயலலிதா:-

பொது பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியது

*மாநில அரசு வரவேற்கும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை.

*தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

*தமிழக அரசின் முன்னோடி திட்டமான மண்வள பாதுகாப்பு குறித்த திட்டத்தை கருத்தில் கொண்டதற்கு பாராட்டு

* தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்கள் போன்ற, நாடு முழுவதும் 3000 குறைந்த விலை மருத்தகங்கள் குறித்த அறிவிப்பிற்கு வரவேற்பு

*திட்டம் மற்றும் திட்டம் சாரா பிரிவுகள் நான் கூறியது போல் அகற்றப்பட்டுள்ளன.

*5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு திட்டம் வரவேற்பதாக உள்ளது.

அத்வானி:-

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, இதற்கு முன் எத்தனையோ பட்ஜெட்கள் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று அருண் ஜெட்லி தாக்கல் செய்தது சிறந்த பட்ஜெட்களில் ஒன்று என்றார்.

மல்லிகார்ஜு ன கார்கே:-

மத்திய பொது பட்ஜெட் குறித்து காங். கட்சியின் மல்லிகார்ஜு ன கார்கே கூறியது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பணக்காரர்களுக்கான.காங். அரசின் திட்டங்களை தங்களுடடைய திட்டங்களாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என்றார்.

விஜயகாந்த்:-

மத்திய அரசின் பட்ஜெட்டை பொறுத்தவரையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருங்கே உள்ளடக்கிய பட்ஜெட்டாகவே பார்க்கமுடிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ