Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் 2016-17: ஒரு தொலைநோக்கு பட்ஜெட்

2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறையை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி செல்வது இந்த பட்ஜெட்டின் சாதனையே. இந்த பட்ஜெட் ஒரு தொலைநோக்கு பட்ஜெட். முதலீட்டாளர்கள் இதை வரும் காலத்தில் உணரக்கூடும் என்று பங்குச்சந்தை நிபுணர் ஷியாம் சேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உலக அளவில் வளர்ச்சி குன்றி வரும் நேரத்தில், இந்தியாவின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட்டிவிகிதத்தை குறைத்தும், பணப்புழக்கத்தை அதிகரித்தும் வளர்ச்சியை தேடும் பொருளாதார கொள்கைகள் உலக அளவில் தோல்வியை தழுவி கைவிடப்படும் இந்தச் சூழலில் வந்தது 2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட். பணப்புழக்கத்தை குறைத்து, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்த இந்த பொருளாதார சூழலில் எடுக்கப்படும் பொருளாதார கொள்கைகள் மீண்டும் பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. இந்த பட்ஜெட் பொருளாதார ரீதியாக ஒரு நல்லதொடர்ச்சியையே தந்திருக்கிறது.

வளர்ச்சிக்கு முதலீடுகள் அத்தியாவசியம். அந்த முதலீடுகளை செய்யும் நிலையில் தனியார் நிறுவனங்கள் இல்லை. ஆக  அரசே முதலீடுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அரசு அந்த முதலீடுகளை உள்கட்டமைப்பு துறையிலும், அதுவும் கிராம சாலைகளிலும் செய்ய முற்பட்டிருக்கிறது. அரசே முதலீடுகளை செய்ய முற்பட்டாலும் தேவையான நிதிகளை சீராக செய்கிறது. அதுவும் பற்றாக்குறை கூடுதல் இன்றி இதை சாதிக்க முற்படுகிறது. பற்றாக்குறையை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி செல்வது இந்த பட்ஜெட்டின் சாதனையே.

விவசாய வளர்ச்சியை நோக்கி செய்யும் பெருமுதலீடுகள் அடுத்த சில ஆண்டுகளில் பலன்கள் தந்தாலும் அவற்றை குறுகிய கால நோக்குடன் அணுகாமல் தைரியமாக இந்த அரசு முடிவு எடுத்திருக்கிறது. ஒரு விதத்தில், வாஜ்பாய்  அரசு தங்க நாற்கர சாலையை அணுகிய துணிச்சல் இந்த அரசின் அணுகுமுறையில் தெரிகிறது.

பணக்கார முதலீட்டாளர்கள் மேல் தொடுக்கப்பட்ட வரிகள் அரசின் முதலீடுகளுக்கு பெரிதும் உதவும். ஆனாலும், இந்த வரிகள் பலரின் கோபத்தை கிளப்பி இருக்கிறது. நாட்டின் இந்த இக்கட்டான பொருளாதார சூழலில் இது போன்ற தீர்கமான முடிவுகள் நெடுநாள் பலன்களை தரும் என்பது உறுதி. குறுகிய  காலத்தில் பங்கு சந்தைகள் புதிய பங்கு சார்ந்த வரிகள் மேல் கொண்ட தங்கள் கோபத்தை காட்டக் கூடும். ஆனால், இந்த பட்ஜெட் ஒரு தொலைநோக்கு பட்ஜெட். முதலீட்டாளர்கள் இதை வரும் காலத்தில் உணரக்கூடும்." என்றார்.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ