Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய நிதி அமைச்சருக்கு... சாதாரண மனிதனின் கடிதம்!


மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு வணக்கம்,

நாடே இன்று உங்களை போற்றிக் கொண்டிருக்கிறது. பத்திரிக்கைகளும் உங்களைப் புகழ்ந்து எழுதிக்கொண்டு இருக்கின்றன. விவசாயத்துக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் இந்த பட்ஜெட் மூலம் நீங்கள் நிறையவே செய்திருப்பதாக எல்லா செய்தித்தாள்களும் வரிகட்டிக் கொண்டு எழுதி இருக்கின்றன. 
பத்திரிகைகள் உங்களைப் புகழ்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. விவசாயிகள் நல்வாழ்வு பெறவும் விவசாயம் வளர்ந்து செழிக்கவும் ரூ.35,984 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். ‘பிரதம மந்திரி கிஷான் சிஞ்சி யோஜனா’ திட்டத்தின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசன வசதி செய்து தரப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். நீண்ட கால அடிப்படையில் பாசன வசதிகளை செய்துதர 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். நிலத்தடி நீர் மேம்பாட்டுக்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க வருகிற ஆண்டில் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். இது மாதிரி இன்னும் எத்தனையோ திட்டங்களை அறிவித்திருக்கிறீர்கள்.
இதேபோலத்தான் கிராமப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 87,765 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறீர்கள். ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்துக்கு 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள்.

இதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘இந்தியாவின் இதயம் கிராமத்தில் இருக்கிறது’ என்று மகாத்மா சொன்ன வார்த்தைக்கு நீங்கள் இப்போதாவது மரியாதை தந்திருக்கிறீர்களே!
ஆனால், விவசாயத்துக்கும் ஊரக வளர்ச்சிக்கும் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கிய நீங்கள் தொழில் வளர்ச்சிக்காக இந்த பட்ஜெட்டில் பெரிதாக எதுவும் செய்யாமல் போய்விட்டீர்களே என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான தேவைகள் என்ன என்பதை உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. உண்ண உணவு தரும் விவசாயம் முக்காலமும் தழைத்தோங்க வேண்டும். அது மட்டுமே போதுமா? தொழில் துறையில் நம் நாடு தழைத்தோங்க வேண்டாமா? நம் நாட்டில் தொழில் துறை இன்னும் அதிவேகத்தில் வளர்வதற்கான உற்சாகமான அறிவிப்புகள் உங்களது இந்த பட்ஜெட்டில் இல்லையே!

தொழில் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய தேவை சாலைகள். அதற்கு நீங்கள் உரிய முக்கியத்துவத்தை தரவே செய்திருக்கிறீர்கள். சாலைகளை அமைக்க ரூ.55,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். வெறும் சாலை வசதிகளை மட்டுமே என்ன செய்ய முடியும்? மின்சார வசதி வேண்டாமா? நமது மின்சாரத் தேவையை பூர்த்தி செய்துகொள்ள 15 - 20 ஆண்டுகளில் நிறைவு பெறுகிற மாதிரி நீண்ட காலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சொல்லிவிட்டீர்களே! நமது தொழிற்சாலைக்குத் தேவையான மின்சாரத்தை எப்படி உருவாக்குவது என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லி இருக்க வேண்டாமா? அதற்கான திட்டங்களை தீட்டியிருக்க வேண்டாமா? அப்படி தீட்டியிருந்தால், கோயம்புத்தூரிலும், திருப்பூரிலும், சிவகாசியிலும் உங்களைப் புகழ்ந்து தள்ளியிருப்பார்களே!

தொழில் செய்வதற்கு உரிய வசதிகள்தான் இல்லை, தொழிலை தொடங்குவதற்கான வசதிகளையாவது இந்த பட்ஜெட் மூலம் நீங்கள் செய்து தருவீர்கள் என்று பார்த்தால், அதிலும் பெரிய அறிவிப்பு எதுவும் இல்லையே! நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு தொழில் செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதில் உலக அளவில் முதல் 100 இடத்துக்குள் இருப்போம் என்றீர்கள். ஆனால், உங்கள் நடவடிக்கை எதுவும் நீங்கள் சொன்ன அந்த 100 இடத்துக்குள் கொண்டு போகிற மாதிரி தெரியவில்லையே!
இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைத் தேடி வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை வழங்க வேண்டிய கடமை உங்களுக்கு இருப்பதை மறந்துவிட்டீர்களே. "மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா" என பல திட்டங்களை அறிவித்துவிட்டு அதை எல்லாம் நடைமுறையில் கொண்டு வருவதற்கான பெரிய அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லையே.

நம் நாட்டுக்கு விவசாயம் ஒரு கண் என்றால், இன்னொரு கண் தொழில் துறை. ஒரு கண்ணில் வெண்ணெய்யை வைத்துவிட்டு, இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்துவிட்டீர்களே! இது நியாயமா? அடுத்த ஆண்டிலாவது விவசாயத்துக்கான முக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைக்காமல், தொழில் துறை வளர்ச்சி அடைவதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி.

இப்படிக்கு,

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பும் சாதாரண மனிதன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close