Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்த பி.எஃப் பணத்திற்கும் பங்கமா?

வரி விலக்கு தருவதில் என்னதான் பிரச்னை?

நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் எவ்வளவோ விஷயங்கள் பேசுவதற்கு இருந்தாலும், அதிகளவில் மக்களை பாதித்த விஷயம் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரி உண்டு என்ற அறிவிப்பாகத்தான் இருக்கும்.

காலம் காலமாக உழைத்த பணத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாக சேமிக்க வேண்டியதால் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேமித்த பணத்துக்கு வரி என்றால் மக்கள் சும்மா இருப்பார்களா? உண்மையில் பட்ஜெட்டில் சொல்லப்பட்டது என்ன? பி.எஃப் பணத்தில் என்னதான் பிரச்னை? வரி விலக்கு அளித்தால் என்ன குறைந்து விடும்? என்பதைப் பார்ப்போம்.

பட்ஜெட் அன்று இ.பி.ஃஎப் என்று சொல்லப்படும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வரி உண்டு என்ற தகவல் வெளியானது. பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர் ஒருவர் இந்த நிதியில் இருந்து பணத்தை எடுக்கும்போது 40 சதவிகித தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும், மீதமுள்ள 60 சதவிகித தொகைக்கு வரி விதிப்பு உண்டு, இது வருகிற ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தெளிவாக சொல்லப்படாததால் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு, ''தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை (இ.பி.ஃஎப்.) ஓய்வுக்கு பின்பு திரும்பப்பெறும்போது முழுவதற்கும் வரி வசூலிக்கப்படமாட்டாது. இந்த வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் 60 சதவிகித பங்களிப்புக்கான வட்டித்தொகை மீது மட்டுமே வரி விதிக்கப்படும். அதே நேரம், பொது வைப்பு நிதியான பிபிஃஎப்-ல் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போதைய நிலையே நீடிக்கும். அதன் 100 சதவிகித தொகைக்கும் வரி விலக்கு உண்டு" என்று தெளிவுப்படுத்தப்பட்டது.

ஆனால், ஆண்டு முழுக்க சேர்க்கும் பணத்தை அவசரத்திற்கு கூட எடுக்காமல் அவசிய தேவை மற்றும் சூழ்நிலைகளையும் தாண்டி சேமிக்கும் பணத்துக்கு வரி விதிப்பதை பணியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்ஷூரன்ஸ், பிஎஃப் போன்றவை தனிநபர் விருப்பத்திற்குட்பட்டவை என்பது போய் இப்போது அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பிலிருந்து தப்பிக்கப் பெரும்பாலான பணம் படைத்தவர்கள் இது போன்ற திட்டங்களைப் பல வகையில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் முக்கிய செலவுகளையும் தேவைகளையுமே குறைத்துக்கொண்டு வாழும் பெரும்பாலானவர்கள் இந்த சேமிப்பையே தங்களுடைய வாழ்நாள் முதலீடாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது பிஎஃப் முதிர்வு தொகையை வைத்தே தங்களுடைய ஓய்வுக்குப் பிந்தைய திட்டங்களைப் பெரும்பாலும் வகுத்து வருகிறார்கள்.

ஏனெனில் ஊதியம் பெறும் பெரும்பாலானோருக்கு அவர்களுடைய பிஎஃப் தொகையை விட்டால் வேறு எந்த சேமிப்பும் இல்லை என்பதுதான் நிதர்சனம். இதுவும் கூட கட்டாயம் என்பதால் மட்டுமே சேமிக்கிறார்கள். காய்கறி முதல் கல்வி வரை விற்கிற விலைவாசி அப்படி.
அப்படி இருக்கையில் அந்தத் தொகைக்கு வரி விதிப்பது என்பது சாதாரண பணியாளர்களின் அடிவயிற்றில் கைவைப்பது போல்தான். பிள்ளைகள் திருமணம், சொந்த வீடு, கார் போன்ற அவர்களின் பல கனவுகளை வெறும் 40 சதவிகித பணத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா?

சொல்லப்போனால் ஓய்வு பெறும் வரை பிஎஃப் பணத்தை எடுக்காமல் இருப்பது பணியாளர்களுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியவே செய்கிறது. ஆனால் அதன் பிறகும் அந்தப் பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

இந்த பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி பங்குச் சந்தை உட்பட பல வகையில் அரசால் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் கடைசி வரை பணியாளர்கள் உழைத்து சேர்த்த பணத்தை எடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பணியாளர்களுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்பதுதான் உண்மை.

எனவே, பணியாளர்களின் ஓய்வு காலத்தைக் கருதி, வருங்கால வைப்பு நிதியில் எடுக்கப்படும் 60 சதவிகித பணத்திற்கான வட்டிக்கு விதிக்கப்பட்ட வரியை வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் அனைத்து பணியாளர்களின் விருப்பமாக உள்ளது.

ஜெ.சரவணன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ