Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டமாக மாறிய பட்ஜெட் அலசல் கூட்டம்..!


கோயம்புத்தூரில் நாணயம் விகடன் சார்பில் பட்ஜெட் 2016 - சாதகமும் பாதகமும் கூட்டம் மார்ச்  2 ம் தேதி நடந்தது.


முதலில் பங்குச் சந்தை நிபுணரும் நிதி ஆலோசனை நிறுவனமான ஐ-தாட் (I thought)-ன் நிறுவனர் ஷியாம் சேகர் பேசும் போது, '' இதற்கு முன் எல்லாம் மத்திய பட்ஜெட்டில் சொல்லப்பட்ட புள்ளி விவரங்களில் நேர்மை இல்லாமல் இருந்தது. மானியங்கள் போன்றவற்றை கணக்கில் காட்டாமல் பொருளாதார வளர்ச்சி இருப்பது போல் காட்டப்பட்டது. 2013-ல் நிதி பற்றாக்குறை 4.1% என்று சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் அது சுமார் 6% ஆக இருந்தது. இப்போது பட்ஜெட்டில் மானிய விவரங்கள் சேர்க்கப்பட்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்படுகிறது. சீனா அளிக்கும் புள்ளி விவரங்களை உலக நாடுகள் எதுவும் நம்ப தயாராக இல்லை.ஓரு காலத்தில் உலக நாடுகள் இந்தியாவையும் அந்தப் பட்டியலில்தான் வைத்திருந்தன. இப்போது இந்திய புள்ளி விவரங்கள் நம்பத் தகுந்ததாக மாறி இருக்கின்றன.  2016-17 ம் நிதி ஆண்டில் பருவ மழை வழக்கமான அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகம் தண்ணீர் தேவைப்படாத, அதேநேரத்தில் அதிக தேவை உள்ள, நல்ல விலைக்குப் போகும் பருப்பு வகைகளை விவசாயிகளை பயிரிட வைப்பது மூலம் விவசாயிகளின் வருமானத்தை ஐந்தாண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க நிதி அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.


பணியாளர்களுக்கு சம்பளக் கமிஷன்படி ஊதிய உயர்வு அளித்த நிலையிலும் நிதிபற்றாக்குறை குறைந்துள்ளது. அதற்குக் காரணம், அரசு எந்திரம் நன்றாக செயல்பட ஆரம்பித்திருப்பதுதான். மேலும் நாட்டில் வரி வசூல் அதிகரித்துள்ளது. இவை சர்வதேச மற்றும் பெரு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியா மீது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், அந்நிய முதலீடு இந்தியாவுக்கு தாராளமாக வரும். நம் முதலீட்டாளர்கள், சந்தையில் அதிகம் பணம் பண்ணாமல் இருக்க காரணம், அவர்கள் டிரேடர்களாக இருப்பதுதான். அந்நிய நிதி முதலீட்டாளர்கள், முதலீட்டாளர்களாக இருப்பதால்தான் அவர்கள் இந்தியப் பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போல் நம் முதலீட்டாளர்களும் மாற வேண்டும். " என்றார்.


அடுத்துப் பேசிய கோயம்புத்தூரின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான ஜி. கார்த்திகேயன் 


'' வருமான வரிச் சலுகை என்கிற போது இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களுக்கு சாதகம் இல்லை. மேலும், அடிப்படை வருமான வரியிலும் விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பட்ஜெட்டுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட , 2016 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில்  நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த்  சுப்பிரமணியம்,  இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை வெறும் 5.5% ஆக உள்ளது. இதனை 20% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 62%, நார்வேயில் 85% என அதிகமாக இருக்கிறது.  வருமான வரி கட்டுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளுக்குதான் வெளிநாடுகளில் முதலீடு அதிகம் வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வருமான வரி அடிப்படை வரம்பு அதிகரிக்கப்படாமல் இருக்கிறது.
அமெரிக்க பெரும் கோடீஸ்வரர் வாரன் பஃபெட் , பெரும்பணக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் விதமாக அதிக வரியை கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். நம் நாட்டில் யாரும் அப்படி செய்வதில்லை என்பதால் அரசே ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான சர் சார்ஜ்-ஐ 12% லிருந்து 15% ஆக அதிகரித்துள்ளது. பணக்காரர்களும் பென்சன் தொகைக்கு வரி கட்டாமல் இருக்கிறார்கள் என்பதற்காகதான்  என்பிஎஸ் மற்றும் இபிஎஃப் முதலீட்டில் 60% தொகைக்கு வருமான வரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. மாதம்  ரூ.15,000க்கு கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த வரி கிடையாது என்பதிலிருந்தே இது பணக்காரர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் செக் என்பதை புரிந்து கொள்ளலாம். முதல் முறை வாங்கும் வீட்டுக் கடன் வட்டியில் கூடுதலாக ரூ.50,000 வரிச் சலுகை அளிக்கப்பட்டிருப்பது மந்த நிலையிலிருக்கும் ரியல் எஸ்டேட்-ஐ தூக்கி விடுவதாக இருக்கிறது." என்றார்.


கொடீசியா முன்னாள் தலைவர்  கே. இளங்கோ,''  பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது ஒன்றும் பாதகமான விஷயமில்லை. சேவை வரி அதிகரிப்பால் செல்போன் கட்டணம், ஹோட்டல் செலவு எல்லாம் அதிகரிக்கப்போகிறது.மாதம் ரூ.15,000க்கு கீழ் சம்பளம் பெறும், பணியாளர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு 8.33% தொகையை மத்திய அரசு செலுத்துவது மூலம் திருப்பூர் போன்ற நகரங்களில் கான்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து, நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இன்ஃப்ரா,ரெயில்வே, விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், இந்தியாவின் வளர்ச்சி நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும்.  கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை  செய்துகொள்ளும் நிலையில், அவர்களின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால், இதனை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இப்போதைய சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகளிடம் தொழில்துறையினர் சலுகைகளை விட, தொழிலை எளிமையாக செய்யும் சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிற கோரிக்கைதான் பலமாக இருக்கிறது. அதற்கான ஃபோகஸ்-ல் மத்திய அரசு இப்போது இறங்கி இருப்பது வரவேற்கதக்கது.  அடுத்து முக்கியமாக, டாக்ஸ், அடிசனல் டாக்ஸ், சர்சார்ஜ், எஜூகேஷனல் செஸ், கிரிஷ் கல்யாண் செஸ் என பல வரிகளை போட்டு தொழில் துறையினரை மத்திய அரசு குழப்பி வருகிறது. இதற்கு பதில் இத்தனை சதவிகிதம் என  வரி விதிப்பு இருந்தால் நல்லது" என்றார்.
 கேள்வி-பதில் நேரத்தில் பட்ஜெட் குறித்த தங்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் விளக்கம் பெற்றதோடு, பங்குச் சந்தை , ஓய்வு காலம்  என முதலீடு குறித்த சந்தேகங்களுக்கும் கூட்டத்துக்கு வந்திருந்த வாசகர்கள் விளக்கம் பெற்றனர்.  அதாவது, பட்ஜெட் அலசல் கூட்டம், முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டமாக மாறிப் போனது .!


    - சி.சரவணன்


படங்கள்: விஜய்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ