Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியல் எஸ்டேட் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்! முக்கிய அம்சங்கள்


ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது.

ரியல் எஸ்டேட் துறையில் வீடு வாங்குவோர் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) மசோதா 2015–ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதமே ராஜ்யசபாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டாலும், அப்போது இது விவாதத்துக்கு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இந்த மசோதா ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயத்துறைக்கு அடுத்ததாக நாட்டிலேயே அதிக பணியாளர்களை கொண்டது ரியல் எஸ்டேட் துறை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகிதத பங்களிப்பை அளிக்கிறது. இப்படிப்பட்ட முக்கியமான ஒரு துறையில் பல ஆண்டுகளாக திட்ட மேம்பாட்டாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையேயான நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை போன்றவற்றில் பற்றாக்குறை நிலவி வந்தது. இதனால் ஆண்டுதோறும் வீடு வாங்கும் லட்சக்கணக்கானவர்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்த மசோதா தற்போது மிகவும் அவசியமாகிறது.

இந்த மசோதா மூலம் ரியல் எஸ்டேட் துறையில் 70 சதவிகித பண பரிவர்த்தனை வங்கி கணக்கு மூலமே நடைபெறுவதால், கணக்கில் வராத பணப்புழக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்படும். மாநில அளவிலான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்களை உருவாக்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்யும். இதன் மூலம் வீடு மற்றும் வணிக திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், ஒவ்வொரு திட்டமும் நேரத்துக்கு முடித்து ஒப்படைப்பது கண்காணிக்கப்படும்.

இந்த துறையில் விதிமீறலில் ஈடுபடும் புரோமோட்டருக்கு 3 ஆண்டு வரையும், முகவர்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கு ஓராண்டு வரையும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும். 500 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் இந்த ஆணையத்தில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். குடியிருப்பின் திட்ட வரைபடம், அரசு அனுமதி, நிலத்தின் முழு விவரம், கட்டுமான பணி மேற்கொள்ளும் துணை நிறுவனங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் கட்டுமான நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளரிடம் கட்டுமான நிறுவனம் பெற்ற பணத்தில் 70 சதவிகித தொகையை வங்கியில் தனிக் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்ய வேண்டும். 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த நோக்கத்தை அடைய ரியல் எஸ்டேட் மசோதா மிகவும் உதவிகரமாக இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ