Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

24. சும்மா வருமா வேலை..?


   
செய்து பார்த்தால் தெரியும்!

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

'எனக்கு என்ன வேலை தெரியும்...?
நான், ........ படிச்சு இருக்கேன். இதுக்கு ஏத்த மாதிரி என்ன வேலை இருக்கும்...?'
'உன் படிப்பை வச்சு எப்படி சொல்றது..? எனக்கு இந்த வேலை தெரியும்னு சொல்லு.
உனக்கு இங்கே வாய்ப்பு இருக்கா, இல்லையான்னு சொல்றேன்..' 

'இவருக்கு இந்த வேலை தரலாம்' என்று வேலை தருகிறவர்கள், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர உதவுவது எது? தன்னிடம் வருகிறவர் வைத்து இருக்கும் பணி அனுபவம். எந்தப் பரிந்துரையும் இதற்கு இணையாக வரவே முடியாது.

நாம் முன்னரே சந்தித்த பிரச்னைதான்.
'யாராவது வேலை குடுத்தாத்தானே அனுபவமே கிடைக்கும்..? அப்புறம்...? முதல்ல சேர்த்துக்குங்க.
அப்படி... கத்துக்கிட்டே வேலை செய்யறேன்..' இப்படித் தோணும். ஆனா வெளியே சொல்ல முடியாது.
இதற்கு என்னதான் தீர்வு..?

'அப்ரென்டிஸ்' என்று ஓர் ஆங்கிலச் சொல் உண்டு. பணி தேடும் இளைஞர்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்றுதான்.
'பணியில் இருந்தபடி பயிற்சி பெறுவது' என்று கொள்ளலாம். இதைப் போன்ற மிகச் சிறந்த, கை மேல் பலன் தரும்
சிறந்த வழிமுறை இல்லவே இல்லை.

நம்முடைய கோரிக்கை இது என்று வைத்துக் கொள்வோம்:
'எனக்கு எதாவது வேலை போட்டுக் குடுங்க..
சம்பளம் கூட வேணாம். வேலை கத்துக்கறேன்.. அது போதும்.'

பொதுவாக இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும். என்ன காரணம்..?

நிறுவனத்துக்கு வேலை செய்ய, சம்பளம் இல்லாமல் வேலை செய்ய ஒரு இளைஞர் கிடைக்கிறார்.
இளைஞருக்கோ..? தான் அடுத்த நிலைக்கு முன்னேற, மிக முக்கியமாகத் தேவையான அனுபவம் கிடைக்கிறது.

மேலே சொன்ன 'அப்ரென்டிஸ்' முறை, 'வின்-வின் சிச்சுவேஷன்' எனப்படும், இருவருக்குமே பலன் தரக் கூடிய
நல்ல தீர்வு ஒன்றை முன் வைக்கிறது.

நமக்குத் தெரிந்தவர் யார் மூலமாவது, அவர்களுக்குத் தெரிந்தவர் யாரிடமாவது 'வாய் வார்த்தை' சொன்னால் போதும்;

வேறு ஒரு வகையும் உண்டு; '...... பணிக்கு ஆட்கள் தேவை..' என்று, அட்டையில் எழுதி, தொங்க விட்டு இருப்பார்கள்.
பல இளைஞர்கள், இத்தகைய 'அட்டைகளை', ஒருவித அசூயையுடன், அருவெறுருப்புடன் பார்த்துச் செல்வதைப் பரவலாகக் காண முடிகிறது.

இதே வேலைக்கு, இதே ஊதியத்துக்கு, ஏதேனும் ஒரு ஆங்கில நாளிதழில் விளம்பரம் வந்தால், நூற்றுக் கணக்கில்,
'நன்.., நீ..' என்று போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்பதையும் பார்க்கிறோம். எல்லாம், நாமாக நம் மேல்
திணித்துக் கொண்ட, வெற்று அபிப்பிராயங்கள்தாம்.

ஒரு துணிக்கடையில், நகைக் கடையில், 'ஷோ-ரூமில்' விற்பனையாளனாகப் பணியில் இருந்தாலும்,
நமக்கு ஒரு வகை அனுபவம் கிடைக்கிறது; அதனாலும் வாழ்க்கையில் பயன் உண்டு என்பதைப் பலரும்
சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

நமக்கு நன்கு தெரிந்த, சிறந்த இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

நாம் இருக்கும் ஊரில் அல்லது பகுதியில் சிறிய அளவில் ஏதேனும் நர்சரி பள்ளி இருக்கலாம். அங்கு பணி புரியும்
ஆசிரியர்கள் யார்...? அனேகமாக, 'மிஸ்' என்கிற சொல்லுக்கு முற்றிலும் பொருந்தும், இளம் பெண்கள்.

இளைஞர்கள், கவனித்துப் பின்பற்ற வேண்டிய மிக நல்ல அணுகுமுறை இவர்களிடம் இருக்கிறது.

இந்த 'மிஸ்கள்' யாருமே, 'இதுதான் நிரந்தரம்' என்கிற எண்ணத்துடன் இந்தப் பணியில் சேர்வது இல்லை.
பள்ளி நிர்வாகத்துக்கும் இது மிக நன்றாகத் தெரியும். தற்போதைக்கு, தன் தேவையைத் தானே 'சந்தித்துக் கொள்ளும்'

அளவுக்கு, 'சிறிது பணம் வந்தால் போதும்; கூடவே, ஆசிரியர் அனுபவமும் கிட்டுமே...' என்கிற சிந்தனையுடன்,
சொற்ப சம்பளத்துக்குப் பணியில் சேர்கின்றனர்.

ஓரிரு மாதங்களில், எதிர்பார்த்தபடியே,
1) பணி அனுபவம் கிடைத்து விடுகிறது;
2) சிறிது அளவேனும் பணம் கையில் எப்போதும் இருக்கிறது;
3) மேலும், காலை முதல் மாலை வரை ஒரு குறிப்பிட்ட பணி நேரத்துக்குத் தங்களைப் பழக்கப் படுத்திக் கொண்டு விடுகிறார்கள்;
4) நாள் முழுதும் சுறுசுறுப்புடன் இயங்குகிற உடல், மன நிலையும் இயல்பாகவே வந்து விடுகிறது.

இதை விட என்ன வேண்டும்...?

தான் விண்ணப்பிக்கும் பணிக்கும், நர்சரிப் பள்ளி ஆசிரியர் பணிக்கும் சற்றும் தொடர்பு இல்லைதான். ஆனாலும்,
எந்த அனுபவமும் இல்லாத ஓர் இளைஞனும், மேற்சொன்ன ஓர் இளம் பெண்ணும், சம கல்வித் தகுதியுடன்,
ஒரு பணிக்கு முயற்சித்தால், யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்...? வேலை தரும் நிறுவனம், இவ்விருவரில் யாரை, தேர்ந்து எடுக்க விரும்பும்..?

இன்னொரு உதாரணம் - 'டூ-வீலர் மெக்கானிக்குகள்'!
படிப்பு அதிகம் இல்லை; 'நல்ல பணிக்கு' தன்னைப் பரிந்துரை செய்ய யாரும் இல்லை; தேவையான அளவுக்கு முதல் போடுவதற்கு ஆத்தியமே இல்லை.
'மிகச் சாதாரண' குடும்ப சூழல். என்ன செய்யலாம்..?

அருகில் உள்ள 'டூ-வீலர்' மெக்கானிக்கிடம் நட்பாகப் பழகி,
ஆரம்பத்தில், வண்டிகளைத் துடைத்து, கழுவி, சுத்தம் செய்கிற 'வேலை'யில் சேர்வார்கள்.

சில வாரங்கள் கழித்து, 'ஸ்பானர்' வைத்து, சின்ன சின்ன வேலை செய்ய 'அனுமதிக்கப் படுவார்கள்'. இப்படியே, ஒவ்வொரு படியாக 'மேலே' வருவார்கள்.

சில மாதங்கள் கழித்து, 'ஓனர்' இல்லாத போது, இவரே சொந்தமாக வண்டிகளைப் பழுது பார்க்கத் தொடங்குகிறார்.
இன்னும் சில மாதங்கள் கழித்து, 'ஓனர்' வந்து இருந்து, சொந்தமாக ஒரு 'வொர்க்-ஷாப்' சந்தோஷமாய்த் தொடங்கி வைக்கிறார். இவை எல்லாமே, நான்கைந்து ஆண்டுகளில் நடந்து விடுகிறது. இப்போது, புதிய ஓனர்(!), தனது கடையில்,
யாரோ ஒருவரைப் பணிக்குச் சேர்த்து, வண்டி துடைக்கிற வேலை கொடுத்து இருக்கிறார்!

பணி அனுபவம்!

நம்முடைய ஆர்வம், நமக்குள் இருக்கும் உந்துதல், நாம் மேற்கொள்ளும் சிறு சிறு முயற்சிகள்... இதில்தான் அடங்கி இருக்கிறது.

இது எந்த விதத்தில் நமக்கு உதவப் போகிறது..? என்கிற அறியாமை அல்லது அலட்சியம் காரணமாகவே,
பல இளைஞர்கள், எந்த வேலையும் செய்யாமல், மிக 'நெருக்கடியான' ('க்ரூஷியல்') இளமைப் பருவத்து நாட்களை, மாதங்களை, ஆண்டுகளை வீணாக்கி விடுகின்றனர்.

விளைவு...?

பணி பற்றிய புரிதலோ, முன் அனுபவமோ இன்றி, கல்விச் சான்றிதழ்களை மட்டும் வைத்துக் கொண்டு, பணிச் சந்தையில் பின் தங்கி விடுகின்றனர்; 'காணாமல்' போய் விடுகின்றனர்.

ஏதோ ஒரு களத்தில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் அடிப்படைத் தேவை.
சரியா...?

இனி, நிறைவுப் பகுதி.

எனக்கு என்று ஒரு வேலை; நான் விரும்புவது போன்ற ஒரு வேலை...
 
எல்லாருக்கும் கிடைக்குமா...?

(அடுத்த பகுதியில் நிறைவுறும்)  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ