Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்!

அக்ரி கமாடிட்டி!

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. ஏலக்காய்க்கான தேவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லாத காரணத்தால் ஏலக்காய் இருப்பு தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை குறைந்து வர்த்தகமானது.

ஏலக்காய் தரம் குறைந்து காணப்படுவதால் ஏற்றுமதி ஆர்டர்களும் குறைந்துள்ளன. மேலும் வட மாநிலங்களிலும் தற்போது ஏலக்காய்க்கான தேவை குறைவாக உள்ளது. மேலும் கவுதமாலா ஏலக்காய் இந்திய ஏலக்காயை விட பாதி விலையில் கிடைப்பதால் இந்திய ஏலக்காய்களுக்கு கிராக்கி இல்லை.

ஏலக்காய் வர்த்தகத்தின் நிலை இறக்கத்திலேயே இருந்தாலும், இந்த வருடம் சாதகமான வானிலை இல்லாததால், ஏலக்காய் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை குறைவு ஒரு கட்டுக்குள் இருக்கும்.

சென்னா (Chana)

கடந்த வாரத்தில் சென்னா விலை சற்று உயர்ந்து வர்த்தகமானது. சென்னா விளைச்சல் பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால், சந்தைக்கு வரும் புதிய அறுவடை சென்னா தாமதமாகி உள்ளது. இதனால் சென்னாவின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னா ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ் 0.02% உயர்ந்து குவிண்டால் சென்னா ரூ. 4,372-க்கு வர்த்தகமானது.

ஆனால் இந்த வருடம் சென்னாவின் விளைச்சல் கடந்த ஆண்டைக் காட்டிலும் உயர்ந்து ஒரு லட்சம் டன்னாக இருக்கும் என்று வேளாண்துறையால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு தரப்பும் சென்னா உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க போதுமான இருப்பைச் சேகரித்து வைத்துள்ளன. இதனால் சென்னாவின் விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்பு குறைவுதான்.

மஞ்சள் (Turmeric)

மஞ்சள் முக்கியச் சந்தைகளில் விலை குறைந்து வர்த்தகமானது. இதற்குச் சந்தைகளில் மஞ்சளுக்கான தேவை குறைந்துள்ள நிலையில் அதிகமாக வரத்து வந்ததே காரணம். ஸ்பாட் மற்றும் ஃப்யூச்சர்ஸ் ஆகிய இரண்டு சந்தைகளிலுமே கடந்த வாரத்தில் மஞ்சள் விலை இறக்கத்தில் வர்த்தகமானது. ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் 2.0% குறைந்து குவிண்டால் மஞ்சள் ரூ. 8846 என்ற நிலையில் வர்த்தகமானது. ஆனால் பல்ப் மற்றும் ஃபிங்கர் வகை மஞ்சள் சந்தைகளில் நல்ல விலையில் வர்த்தகமாகின.

புதிய மஞ்சள் வருகை தந்திருந்தாலும், தேவை இல்லாததால் சந்தையில் மஞ்சளுக்கான வர்த்தகம் கலவையான சென்டிமென்டில் இருந்தது. மேலும், வரும் பருவத்தில் மழைக் குறைவு காரணமாக மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்பதால் வரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முகூர்த்த நாட்கள் இருப்பதாலும், ஏற்றுமதி ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் மஞ்சள் விலை குறைவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

ஜீரகம் (Jeera)

ஜீரகம் முக்கியச் சந்தைகளில் விலை சற்று ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. இதற்குச் சந்தைகளில் ஜீரக வரத்தும் அதற்கான தேவையும் மாறி மாறி இருப்பதுதான் காரணம். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் கடந்த வெள்ளிக் கிழமை அன்று முந்தைய நாளைக் காட்டிலும் 1.5% உயர்ந்து வர்த்தகமானது.

மேலும் இந்த வருடம் ஜீரகம் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று வேளாண்துறையால் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜீரகத்தை வாங்கி இருப்பு வைக்கும் எண்ணம் வர்த்தகர்களிடம் இல்லாததால் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், விழாக் காலம் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் ஜீரகத்துக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் விலை குறைவு கட்டுக்குள் இருக்கும் நம்பலாம்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ