Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமோசா விற்று, கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் சென்னைக்காரர்!

சமோசா... சக்சஸ்... கோடீஸ்வரர்!

 

15 ஆண்டுகளுக்குமுன்... ஒரு வானலி, அடுப்பு மட்டுமே வைத்துக்கொண்டு சமோசா விற்றவர், இன்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் ஆறாவது வரை மட்டுமே படித்தவர்.

“எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதில் ஒரு ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். தொழில் செய்பவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே உள்ள வித்தியாசமே இங்குதான் தொடங்குகிறது” என்றபடி சென்னை, புதுப்பேட்டையில் சமோசா வியாபாரம் செய்ய தொடங்கியக் கதையைச் சொன்னார் ஹாஜா புன்யாமின்.      

“இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, தங்கையுடன் பிறந்தேன். பெரிய குடும்பம், வறுமை எங்களைப் பிடித்து ஆட்டியது. மாநகராட்சி பள்ளியில் அரை நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் சமோசாவைத் தூக்கில் எடுத்துக் கொண்டு தெரு தெருவாக வியாபாரம் செய்தேன். பிறகு ஆறாவது வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, முழுநேரமாக சமோசா விற்க ஆரம்பித்தேன். பிற்பாடு பல கடைகளில், பல இடங்களிலும் வேலை செய்தேன். 

வாழ்க்கையில் உயர வேண்டும் என்கிற முனைப்பு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. எனவே, நானும் என் நண்பனும் சேர்ந்து சிக்கன் பக்கோடா கடை வைத்தோம். அந்த சமயத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு நானும் என் மனைவி ஃபரிஷாவும் சேர்ந்து தனியாக ஒரு சமோசா கடை வைத்தோம். அப்போது மாத சம்பளம் 400 ரூபாய்க்கு ஒரு பையனை வேலைக்கு வைக்க நிறைய யோசித்தேன். காரணம்,  மாதம் 400 ரூபாய் சம்பளம் தர முடியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது. 

அப்போது எனக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து மாதத்துக்கு ஒரு லட்சம் சமோசா பீஸ் ஆர்டர் கிடைத்தது. நான் செய்வதை எப்போதும் தரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் ரோட்டு கடையாக இருந்தாலும் நல்ல வியாபாரம் நடக்கவும், இப்போது எக்ஸ்போர்ட் ஆர்டர் வந்ததுக்கும் காரணம்.

ஆனால், அந்த ஆர்டரை எடுத்துச் செய்கிற அளவுக்கு என்னிடம் போதுமான இடமும் இல்லை. ஃப்ரீசரும், ஃபுல் ஏர் கண்டிஷனும் தேவைப்பட்டது. அந்த வசதிகளுடன் கிடைத்த இடத்துக்கு 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தர வேண்டியிருந்தது. அதை ஒரு லட்சமாகக் கேட்டு குறைத்தேன். ஆனாலும் அந்த ஒரு லட்சமும் கையில் இல்லை. எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை. எந்த வங்கியிலும் கடன் கிடைக்கவில்லை.

அந்த சமயத்தில்தான் பாரதிய யுவ சக்தி ட்ரஸ்ட் மூலமாக உதவி கிடைத்தது. ஆதித்தனார் சாலை இந்தியன் வங்கியில் ஜாமீனில் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். யாரும் எனக்கு செய்யாத உதவியை பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை எனக்கு செய்தது. அந்த உதவிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அந்த டிரஸ்ட் கடன் தந்ததோடு, ஒரு மென்டாரையும் (வழிகாட்டும் ஆலோசகர்) கொடுத்தார்கள். ஏனெனில் நம் அணுகுமுறையின்படி, நாம் செய்வதெல்லாமே நமக்கு  சரியாகத்தான் படும். அந்தத் துறையைப் பற்றி தெரிந்த ஒருவர் வெளியிருந்து பார்த்து சொல்லும் போதுதான் நம் தவறுகள் தெரியும். அதைப் பார்த்து, ‘இது தப்பு, இப்படி பண்ணாதீங்க, இத அப்படி மாத்தி பண்ணிங்கன்னா கண்டிப்பா ரிசல்ட் இருக்கும்’ என்பது போன்ற அறிவுரைகளை  உத்தரவாக இல்லாமல், ஆலோசனையாகச் சொல்வார்.

உதாரணமாக, மைதாவை சில்லரையாக  வாங்குவதற்கும், மொத்தமாக மில்லில் இருந்து வாங்குவதற்கும் இடையே உள்ள காஸ்டிங் வித்தியாசத்தை அவர் சொல்வார். அதன் மூலமே நான் மாதம் ரூ.6000 வரை சேமிக்கிறேன். என்னதான் நமக்கு லட்சியங்கள், கனவுகள் இருந்தாலும், நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல  யாராவது ஒருவர் வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு சமோசா ஆர்டர் தந்த அந்த எக்ஸ்போர்ட்  கம்பெனியே  எனக்கும் என் மனைவிக்கும் ஃபுட் ஃபுரோசன் பிராசஸிங் (Frozen processing) பற்றி பயிற்சி தந்தது. 

கடனாக வாங்கிய அந்த ஒரு லட்சத்தை வைத்து அந்த எக்ஸ்போர்ட் ஆர்டரை இரண்டு வருடம் நன்றாக செய்தேன். தீடீரென்று  2007-ல் அந்த எக்ஸ்போர்ட் ஆர்டர் அக்ரிமென்ட் முடிந்துவிட்ட தாகச் சொல்லிவிட்டார்கள். இந்த ஆர்டரை நம்பி ஏழு, எட்டு பேரை சம்பளத்துக்கு வேலைக்கு வைத்து, இடத்தை வாங்கி, அதற்காகவே எல்லாம் தயார் செய்து தொழிலைச் செய்து வந்்தேன். ஆர்டர் கேன்சல் ஆனதால், நான் திக்குமுக்காடிப் போனேன். ஆனாலும் விடாமல் முயற்சி செய்தேன்.

நான் கற்றுக்கொண்ட ஃபுட் பிராசஸிங் ட்ரெய்னிங், என் அன்றைய நிலைமை, வளர வேண்டும் என்கிற வேகம் எல்லாம் சேர்ந்துதான் என்னை துவண்டுபோகாமல் பார்த்துக் கொண்டது. எல்லோரையும் மாதிரி சமோசாவை சுட்டு விற்காமல், அந்த எக்ஸ்போர்ட் கம்பெனி தொடங்கி வைத்த, பதப்படுத்தி விற்பனை செய்கிற தொழிலையே பெரிய அளவில் செய்யலாம் என்று முடிவு செய்தேன். என்னிடம் வேலைக்கு இருந்த ஐந்து பேருடன், மீண்டும் தொழிலை ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ஹாஃபா ஃபுட்ஸ் அண்ட் ஃபுரோசன் புட்ஸ்.

ஆனால், எனக்கு என்ன பண்ணனும், எப்படி மார்க்கெட் பண்றது, யாரு இதை வாங்குவார்கள் என  எதுவுமே தெரியாது. ஏதோ ஒரு ஆர்வத்துல தொடங்கிவிட்டேன். ஆட்களை வேலைக்கும் வைத்துவிட்டேன், பொருளையும் செய்துவிட்டேன்.  ஆனா, யார்கிட்ட விக்கிறதுன்னு தெரியாம முழித்தேன். 

அந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு போன் வந்தது. அந்த ஒரு போன்கால் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. முன்பு எனக்கு ஆர்டர் கொடுத்த எக்ஸ்போர்ட் கம்பெனியிடம் இருந்து சமோசா வாங்கிய ஒருத்தர், ‘ஏன் சமோசா சப்ளை பண்ணலைன்னு’ தொந்தரவு செய்ய, அவருக்கு என் போன் நம்பரைத் தந்்திருக்கிறார்கள். அவர் எனக்கு போன் செய்தார். அவர் சமோசா கடை வைத்து நடத்துபவர். அவரை நேரில் போய் பார்த்தபோதுதான் என் கஸ்டமர் யார் என்று எனக்கு தெரிந்தது. அவர் கடை மாதிரியே சில கடைகளைப் புடிச்சேன். அப்பறம் காலேஜ் கேன்டீன்களில் பேசி ஆர்டர் பிடித்தேன். 

புதுப்புது ரெசிப்பிகளைச் செய்ய தொடங்கினேன். சமோசா மட்டுமே போட்ட நான், இப்போது கட்லட், பர்கர் பேட்டி, ஸ்பிரிங் ரோல், சீஸ் பால் என்று பல புராடக்ட்களைச் செய்தேன். எல்லாவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

என்னுடைய பொருளின் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்குரிய டெம்பரேச்சரில் வைத்திருந்தால், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். எந்த கெமிக்கலையும், பிரிசர் வேட்டிவ் -யும் நான் பயன்படுத்துவதில்லை.

அதே மாதிரி, ஒவ்வொரு புது புராடக்ட்டை செய்யும்போதும், அது சரியாக வரும் வரை முயற்சி செய்துகொண்டே இருப்பேன். என் பொருள் எந்த வகையிலும் வீணாகக் கூடாது என்று நினைப்பேன்.  அதனால்தான் என் தயாரிப்புகள் மக்கள் விரும்பக்கூடிய வகையில் இருக்கிறது.

மார்க்கெட்டிங்கை பொறுத்த வரை, ஆரம்பத்தில் இருந்தே தனி ஆளாக மார்க்கெட்டிங் செய்தேன். நான் ஒரு சாலையில் பயணித்தால், என் பொருட்களை வாங்கக்கூடிய பத்து கடைகளை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்களிடம் பேசி என் பொருட்களுக்கான ஆர்டரை எடுக்கிறேன். மேலும், பல பேர் இந்த மாதிரி கடைகளில் சாப்பிட்டு, அதனுடைய தரமும் டேஸ்ட்டையும் பார்த்து என்னிடம் வருகிறார்கள். என்  வெப்சைட்டைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் எவ்வளவோ பேர். எந்தவொரு போன் காலையும் விடாமல் எடுத்து பொறுமையாக பதில் சொல்வதன் மூலமும் ஆர்டர்கள் அதிகரிக்கிறது.

அதே போல், கணக்குவழக்கு களில்  கச்சிதமாக இருப்பது அவசியம். என் மனைவியின் உதவியோடு அனைத்தையும் சரியாகச் செய்கிறேன். பத்து ரூபாயாக இருந்தாலும், என் கவனத்தை மீறிச் செல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.  

உணவுத் தொழிலில் நிலைத்து நிற்பது என்பது  கடினம். நான் என்னுடைய பிராண்ட் பிரபலமாக வேண்டும் என்று நினைக்காமல், என் பொருள் எல்லா இடத்தையும், மக்களையும் போய் சேர்ந்தாலே போதும் என்று நினைத்ததால்தான் வளர முடிந்தது. இன்று ‘சாட் அயிட்டம்ஸ்’ கடைகளில் இருந்து, மால்கள், ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் விமானங்கள் வரை எனது பொருள் சேர்ந்திருக் கிறது. இன்று மாதத்துக்கு ஐந்து லட்சம் பீஸ்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். இரண்டு பேரோடு தொடங்கிய இந்தத் தொழிலில் இப்போது 45-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர். வருடத்துக்கு ரூ.1.5 கோடி டேர்ன் ஓவர் கிடைக்கிறது. 

இப்போது இருக்கும் சிறிய உற்பத்தி இடத்தை வைத்து இந்த வருமானத்தை ஈட்டி வருகிறேன். மேலும் மேலும் ஆர்டர்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த ஆர்டர்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமெனில், இந்த இடம் போதாது. அதனால் பெரிய இடம் ஒன்றுக்கு என்னுடைய பேக்டரியை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான நிதி கிடைக்கும்பட்சத்தில், என்னால் மேலும் இதனை விரிவுபடுத்தி வருடத்துக்கு ரூ.50 கோடி வரை வருமானம் ஈட்டும் தொழிலாக என்னால் வளர்க்க முடியும்.

எத்தனை இக்கட்டான சூழ்நிலைகளிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து நமக்கான வழியைத் தேடிக்கொண்டே இருந்ததால், நமக்கு சாதகமான சூழல் உருவாகும். நான் அந்த சாதகமான சூழலுக்கு நம்பிக்கை குறையாமல் தொடர்ந்து காத்திருந்ததால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்’’ என்று உற்சாகத்துடன் முடித்தார்.

சமோசாதானே என்று தன் தொழிலைக் குறைவாக நினைத்திருந்தால், அவரால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. எல்லா தொழிலிலும் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுபிடித்தால் நிச்சயம் வளர்ச்சிதான்! 

ஜெ.சரவணன்

படங்கள்: ப.சரவணக்குமார்.


கற்றுக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

1. உங்கள் மீதும், தொழிலின் மீதும் முதலில் நம்பிக்கை வையுங்கள்.

2. கல்வி இரண்டாம் பட்சம்தான். தேடலும் உழைப்புமே முதன்மையானது.

3. அவசரம் கூடவே கூடாது. பொறுமை வேண்டும். உடனடியாக வளர்ச்சி வந்துவிடாது.

4. முழு ஆர்வம் இருந்தால் மட்டும் தொழில் தொடங்குங்கள். சும்மா ட்ரை பண்ணுவோம் என்கிற அணுகுமுறை வேண்டாம்.

5. எத்தனை இக்கட்டான சூழ்நிலைகளிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து நமக்கான வழியைத் தேடிக்கொண்டே இருந்தால் நமக்கான சூழல் உருவாகும்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close