Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்!

அக்ரி கமாடிட்டி

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமானது. கேராளாவில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்ற கணிப்பு நிலவுகிறது. இதனால் வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமானது. புதன் கிழமை அன்று மே மாத ஃப்யூச்சர்ஸ் முந்தைய நாளைக் காட்டிலும் 2.12% உயர்ந்து வர்த்தகமானது.

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வறட்சி வானிலை காரணமாக ஏலக்காய் விளைச்சல் குறைந்து வரத்தும் குறையும். மேலும் ஏலக்காய்க்கான தேவை அதிகரிக்கும் காலகட்டம் இது என்பதால் வரும் வாரத்தில் விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்பு அதிகம்.

மஞ்சள் (Turmeric)

மஞ்சள் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. முக்கியச் சந்தைகளில் மஞ்சளின் வரத்து அதிகரித்திருந்ததால் இறக்கத்தில் வர்த்தகமானது. ஆனால் வரத்து வந்த மஞ்சள் தரமாக இருந்ததால் வர்த்தகர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் மஞ்சள் விலை உயர்ந்தும் வர்த்தகமானது. ஈரோடு சந்தையில் ஃபிங்கர் வெரைட்டி குவிண்டாலுக்கு ரூ. 300ம், ரூட் வெரைட்டி குவிண்டாலுக்கு ரூ. 200ம் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

சந்தைக்குப் புதிய மஞ்சள் வருகை தந்திருந்தாலும், தேவை இல்லாததால் சந்தையில் மஞ்சளுக்கான வர்த்தகம் நெகட்டிவான சென்டிமென்டில்தான் இருக்கிறது. ஏற்றுமதி ஆர்டர்களும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. ஆனாலும், வரும் பருவத்தில் மழைக் குறைவு காரணமாக மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்பதால் வரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகும் என்றாலும், விலைக் குறைவு கட்டுக்குள் இருக்கும்.

ஜீரகம் (Jeera)

ஜீரகம் முக்கியச் சந்தைகளில் சற்று ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. இதற்குச் சந்தைகளில் ஜீரக வரத்தும் அதற்கான தேவையும் மாறி மாறி இருப்பதுதான் காரணம்.

ஆனால் சந்தையில் தரமான ஜீரகம் இருப்பதால் வரும் வாரங்களில் ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உள்நாட்டிலும் ஜீரகத்துக்கான தேவை இருக்கும்பட்சத்தில் விலை உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது. ஆனால் ஜீரகம் வரத்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இருப்பதால் விலை உயர்வும் கட்டுக்குள் இருக்கும்.

 மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமானது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதே இதற்கு காரணம்.

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டில் கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் பேரலுக்கு முந்தைய நாள் வர்த்தக முடிவு விலையை விட 38 சென்ட் உயர்ந்து 37.64 டாலருக்கு வர்த்தகமானது. சர்வதேச பிரென்ட் ஆயில் ஃப்யூச்சர்ஸும் 24 சென்ட் உயர்ந்து பேரல் 39.67 டாலருக்கு வர்த்தகமானது.

அமெரிக்கா தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை தற்போது எடுக்காததால் அதனுடைய பொருளாதாரம் பாசிட்டிவான நிலையில் இருக்கிறது. மேலும் ஐரோப்பிய கண்டத்தின் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியிலும் பொருளாதாரம் எதிர்பார்த்த 1.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார உயர்வினால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே வாரத் தொடக்கத்தில் 35 டாலருக்கும் கீழ் இருந்த பேரல் கச்சா எண்ணெய், படிப்படியாக உயர்ந்து வார இறுதியில் 39 டாலருக்கும் மேல் உயர்ந்து வர்த்தமானது.
ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகரித்தபடி இருப்பதால், வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரத்து அதிகரித்தால் நிச்சயம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரியலாம். எனவே வர்த்தகர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தங்கம் மற்றும் வெள்ளி

தங்கமும் கடந்த வாரத்தில் ஏற்றத்தைச் சந்தித்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவாக இருப்பதால் தங்கம் விலை உயர்ந்து வர்த்தகமானது. வாரத் தொடக்கத்தில் 1220 டாலர் இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் வார இறுதியில் 1240 டாலரைத் தாண்டியது. அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்ததாலும், டாலரின் மதிப்பு குறைவாக இருப்பதாலும் தங்கத்தின் விலையில் ஒரு சதவிகிதத்திற்கும் மேல் ஏற்றம் இருந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்ததால் தங்கத்தைப் போலவே வெள்ளியும் உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.

அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தாததால் தற்போது அதன் பொருளாதாரம் சமநிலையில் உள்ளது. ஆனால் அதை பாதிக்கும் வகையில் உலகச் சந்தையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் அது சந்தையின் சென்டிமென்டை முற்றிலும் மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது.

காப்பர்!

காப்பர் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 3 சதவிகிதம் வரை விலை குறைந்து வர்த்தகமானது. இது இந்த மாதத்தில் அதிகபட்ச விலைக் குறைவாகக் கூறப்படுகிறது. சீனாவில் காப்பருக்கான தேவை குறைந்ததால் வர்த்தகர்கள் செல்லிங் சென்டிமென்டில் இருந்தார்கள். இதன் காரணமாக காப்பர் விலை குறைந்து வர்த்தகமானது.

காப்பருக்கான அதிகபட்ச சந்தையாக விளங்கும் சீனா திடீரென்று தனது காப்பர் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டு, தான் ஏற்கெனவே சேர்த்து வைத்திருந்த காப்பரை சந்தைக்குள் இறக்கியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் காப்பரின் வர்த்தகம் அடி வாங்கியது. ஆனால் விரைவில் சீனா காப்பர் இறக்குமதியை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஆகும் பட்சத்தில் தேவை அதிகரிப்பதன் காரணமாக காப்பரின் வர்த்தகம் ஏற்றமடையும் என்று நம்பலாம்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ