Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா குறித்து வாஷிங்டனில் ரகுராம் ராஜன் சொன்னது என்ன?

ன்று அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஏதோ ஒரு வகையில் பிற நாடுகளை, அதாவது ஓட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கிறது? உலக அரங்கில் இந்தியாவின் நிலை என்ன? ஆகியவை குறித்து ரகுராம் ராஜன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

பார்வையற்றவர்கள் மத்தியில் ஒற்றைக் கண் உள்ளவரே ராஜா!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன் ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி மாநாட்டில் கலந்துகொள்ள வாஷிங்டன் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் குறித்து அவர் பேசுகையில் இவ்வாறு சொன்னார். "பார்வையற்றவர்கள் மத்தியில் ஒற்றைக் கண் உள்ளவரே ராஜா!"
இதற்கு என்ன அர்த்தம்? என்று எல்லோரும் குழம்பினர். இதை நேரடியாக பார்த்தால் இந்தியப் பொருளாதாரத்தை நக்கல் செய்வது போன்ற அர்த்தமே பலருக்குத் தோன்றும். ஆனால் உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தை அவர் உயர்த்தியே பேசியிருக்கிறார்.

அதாவது தற்போதைய நிலையில் இந்தியாவைக் காட்டிலும் மற்ற நாடுகளின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது என்றும், இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா செல்ல வேண்டிய தூரம்?

“இந்தியாவுக்கு இது போதாது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே நாம் இன்னும் திருப்திப்பட்டுக்கொள்ளக் கூடிய இடத்துக்கு செல்ல வேண்டுமென்று கருதுகிறேன். அதனால்தான் ‘பார்வையற்றோர் மத்தியில் ஒற்றைக் கண் உள்ளவர் ராஜா’ என்ற மூதுரையைக் கூறினேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்தியா தனது நடுத்தர வளர்ச்சி கட்டத்தைத் தாண்டி மேலே செல்வதற்கு சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளது. முதலீடுகள் வலுவாக அதிகரித்து வருகின்றன. இதனால் பொருளாதா உறுதித்தன்மை இந்தியப் பொருளாதாரத்தில் நல்ல அளவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதேநேரத்தில் உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது.

இரு வங்கிக் கணக்குகளுக்கிடையே மொபைல் டு மொபைல் பரிமாற்றங்கள் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுவான ஒரு மேடை. இதில் அனைவரும் பங்கேற்கலாம். இதில், உதாரணமாகக் கூற வேண்டுமென்றால் ஆப்பிள் பே, ஆண்ட்ராய்ட் பே என்று ஒற்றை நிறுவன உரிமைதாரர்கள் இல்லை. இது உலகிலேயே முதல் முறையென்று கருதுகிறேன். எனவே தொழில்நுட்ப மேம்பாடுகள் நிறைய பிரிவு மக்களுக்கு நன்மை விளைவித்துள்ளது.

சீனாவை விட பத்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம்!

சீனாவை ஒப்பிடும் போது இந்தியா 10 ஆண்டுகள் பின் தங்கி உள்ளது. இந்தியா சரியான பொருளாதார சீர்த்திருத்தங்களைச் செய்வதன்  மூலம் சீனாவை விரைவில் எட்டிப் பிடிக்க முடியும். அதற்கான அமைப்புசார் சீர்த்திருத்தங்கள் நடைபெற வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்றவை நிறைவேற வேண்டும்.

சீனா தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போதும், உலக நாடுகளின் எதிர்ப்பைச் சந்தித்து வரும் போதும், தொடர்ந்து பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கக் காரணம் அது மேற்கொண்ட நல்ல கொள்கைகள் தான். ஆகவே அவர்களை எட்டிப்பிடிக்க நாமும் நல்ல கொள்கைகளை வகுக்கவும், அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவும் வேண்டியது மிகவும் அவசியம்.

ரகுராம் ராஜன் கூறுவது போல, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, பணவீக்க விகிதம் குறைந்தது ஆகியவற்றின் காரணமாக சமீபத்தில் வட்டி விகிதத்தை ரிசர்வ வங்கியினால் குறைக்க முடிந்தது. ஆனால் இது போன்ற சில நல்ல அம்சங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் நடைபெற்றிருந்தாலும், உலகப் பொருளாதாரம் நமக்கு வைக்கப் போகும் புதிய 'செக்'குகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

ஜெ.சரவணன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ