Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தின் மோசமான பொருளாதார வளர்ச்சி! திமுக, அதிமுக யார் காரணம்?

 

மிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக இருக்கிறது என அதிமுக மீது எதிர்கட்சிகள் விமர்சனம் வைத்தபடி உள்ளன. இதற்கு காரணம், நாங்கள் அல்ல; தி.மு.க.தான் என பதில் சொல்லப்படுகிறது. உள்ளபடி தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலைமை எப்படி உள்ளது..?

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது, கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த தி.மு.க. மற்றும் அ.திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் பார்ப்போம்.
   
தமிழகத்தின் வளர்ச்சி!

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் (ஜிஎஸ்டிபி) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தமிழகத்தின் ஜிஎஸ்டிபி அதாவது, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்த வரை ஒவ்வொரு நிதி ஆண்டும், முந்தைய நிதி ஆண்டைவிட வளர்ச்சி அடைந்துதான் வருகிறது.

2014-15-ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் ஜிஎஸ்டிபி (நிலையான விலையில்) ரூ.5,15,458 கோடி பெற்று, இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. இது 2006-07-ல் ரூ.2,87,530 கோடியாக இருந்தது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் வளர்ச்சி 2014-15-ல் ரூ.9,47,550 கோடியாக இருக்கிறது. (பார்க்க அட்டவணை - 1)

இதன்படி பார்த்தால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டும் வளர்ச்சி அடைந்து வருவதை மறுக்க முடியாது. ஆனால்,  அதை மட்டுமே வைத்து தமிழகத்தின் பொருளாதார நிலைமை வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூற முடியாது.


தனிநபர் வருமானம்!

தமிழகத்தின் தனிநபர் வருமானத்தைப் பொறுத்த வரை, ஒட்டுமொத்த இந்தியாவின் தனிநபர் வருமானத்தைவிட அதிகமாகவே உள்ளது. எனினும், தனிநபர் வருமானத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், ஹரியானா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதில் தமிழகம் 2014-15-ல் தனிநபர் வருமானமாக ரூ.66,635 பெற்று, மூன்றாவது இடத்தில் உள்ளது. (பார்க்க அட்டவணை - 2)

வளர்ச்சி விகிதம்!

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைவிட நன்றாகவே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைவிட, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 2011-12, 2013-14 மற்றும் 2014-15-ல் சிறப்பாகவே உள்ளது. (பார்க்க அட்டவணை - 3)



 

ஆனால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திமுக ஆட்சியின் காலத்தில், அதாவது, கடந்த 2006-07-ல் 15.21 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்தது.  அதன்பிறகு வளர்ச்சி விகிதம் 6.13%, 5.45%, 10.83%, 13.12% என வளர்ச்சி அடைந்து காணப்பட்டது. இதனை அடுத்து அதிமுக ஆட்சியில் அதாவது, 2011-12-ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.39% எட்டியது. அதன்பிறகு பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.39%, 7.29%, 7.25% எட்டப்பட்டது.

இதில் குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகள் ஆட்சியின்போதும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஒரு சில நிதி ஆண்டுகளை தவிர, மற்ற நிதி ஆண்டுகளில், இந்தியா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சி விகிதத்தைவிட நன்றாகவே உள்ளது.

 

உண்மை நிலவரம் என்ன?

கடந்த கால புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது, நாம் பிற மாநிலங்களைவிட நல்ல நிலைமையிலேயே இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிந்தாலும், தற்போதைய நிலையில் தமிழகத்தின் பொருளாதார நிலைமை என்ன, அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது என்கிற கேள்விகளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது, தமிழகத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும். அதே சமயத்தில், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்போது, தமிழகத்தின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சி அடையும்.  தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதமானது தொய்வடைந்த நிலையில்தான் உள்ளது. இதற்கு காரணம், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிக குறைவாக இருப்பதுதான். இந்தியாவின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, 2007-08-க்கு முந்தைய ஆண்டுகளில் மிக நன்றாக இருந்தது. அதன்பின் உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இந்தியாவின் பொருளாதார நிலைமை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இந்த வீழ்ச்சியின் தாக்கமானது இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தமிழகத்தின் வருமானம்!    

இந்தியப் பொருளாதாரமானது உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது.  இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஜிடிபி-ல் கிட்டதட்ட 50 சதவிகிதத்தை எட்டியுள்ளதால், உலகப் பொருளாதாரத்தை சார்ந்தே இந்தியப் பொருளாதாரமும் உள்ளது. தற்போது உலகப் பொருளாதாரம் மிகவும் மந்தநிலையில் உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, குறிப்பாக சேவைத் துறையின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு சேவைத் துறையின் மூலமே கிடைக்கிறது. இதற்கான தேவை வெளிநாட்டில் நிறைய இருப்பதால், இதன் மூலம் நமக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஐடி, ஐடி சார்ந்த தொழில்கள் என தமிழகத்திலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகையால், உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் போது தமிழகத்திலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

முதலமைச்சரை அணுக முடியவில்லை!

தமிழகத்தின் பொருளாதாரம் தொய்வடைந்து இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், தொழில்  துறையில்  அதிகம் முதலீடுகள் வரவில்லை.  உள்கட்டமைப்பு, மின்சாரப் பிரச்னை, அடிப்படை கட்டுமானப் பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகளை தொழில் துறையினர் கூறுகின்றனர். ஆரம்பக்காலத்தில், தமிழகத்தில் மின்சாரப் பிரச்னையால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதுமட்டும் இல்லாமல், தமிழகத்தில் முதலீடுகளை தீர்மானிக்கக்கூடிய அரசியல் சூழல் இல்லை. தொழில் துறையைச் சார்ந்தவர்கள் முதலமைச்சரை எளிதில் சந்திக்க முடிவதில்லை என்பது பெரிய குறையாகவே கருதுகின்றனர்.

அதிமுக, திமுக ஆட்சியில் வளர்ச்சி!

தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலைமை இந்தியாவைவிடவும், மகாராஷ்டிராவை விடவும் அதிகமாக இருந்தாலும், நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முந்தைய நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தொய்வடைந்து தான் காணப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திமுக ஆட்சிக் காலத்தில் 15%, 13% என்று இருந்தது. ஆனால், இப்போது அதிமுக ஆட்சிக் காலத்தில் 7% என்ற அளவிலேயே உள்ளது.  தமிழகம் நன்கு வளர்ச்சி அடைந்த மாநிலம். எனவே, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல் நமது மாநிலத்தின் வளர்ச்சி விகிதத்துடன்தான் ஒப்பிட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது காணப்படும் பொருளாதார நிலைமை தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்கள் நினைத்தால் இதை நிச்சயம் மாற்றி அமைக்கலாம். தவிர, தமிழகத்தின் பொருளாதாரம் தொய்வடைந்த நிலையில் இருப்பதற்கு இன்னொரு காரணம், விவசாயத்தின் வளர்ச்சி பின்னடைவாக இருக்கிறது. எனவே, ஆட்சியாளர்கள் விவசாய வளர்ச்சியை ஊக்குவித்து பொருளாதாரம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆட்சியாளர்களே..!


ஆக, தமிழகத்தின் பொருளாதார நிலைமை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் மோசமில்லை என்பதே உண்மை. என்றாலும் ஆட்சியாளர்கள் இனிவரும் காலத்திலாவது தமிழகத்தின் பொருளாதார நிலைமையை உயர்த்திட உருப்படியான திட்டங்களை செய்ய வேண்டும். விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

ஆதாரம் http://bit.ly/1VxsboS

சோ.கார்த்திகேயன்  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ