Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் நிதி எதிர்காலம் எப்படி? அதிரடி சர்வே முடிவுகள்

ஒரு வீட்டில் இரண்டு, மூன்று வருமானம் இருந்தால் கூட இப்போது இருக்கும் வாழ்க்கை முறைக்கு, சமாளிப்பது கடினமாக இருக்கிறது. கல்யாணம், காது குத்து மட்டுமில்லாமல் நம்முடைய அன்றாட செலவுகளே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசியும் பணவீக்கமும் கண்ணுக்குத் தெரியாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. இதை எப்படி மக்கள் சமாளிக்கிறார்கள்? முதலீடு, செலவு, இன்ஷூரன்ஸ் ஆகியவற்றைப் பற்றி எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்? எதிர்காலத்தை எப்படி திட்டமிடுகிறார்கள்? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆன்லைனில் ஒரு மெகா சர்வே செய்தோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த சர்வேவில் கலந்துகொண்டனர்.
 
சர்வே முடிவுகள் இதோ..!
 
1. உங்கள் ஊதியம்/வருமானம் எவ்வளவு?

ரூ. 10000 - 15000 - 18.5%
ரூ. 15000-20000 - 9.5%
ரூ. 20000-30000 - 17.3%
ரூ. 30000க்கும் மேல் - 54.7%


2. உங்கள் ஊதியத்தில் செலவுக்கு மீறி மிச்சம் இருப்பது?

 
40% - 24.6%
20% -  24.4%
5-10% - 18.1%
0% -
19.7%


3. நீங்கள் சேமிக்க தொடங்கிய வயது
 
 
5-10 வயது -1.5%
10-20 வயது - 6.9%
20-30 வயது - 47.8%
30-40 வயது - 23.9%
சேமிப்பதில்லை -
19.9%

4. உங்கள் வருமானத்தில் உங்களுடைய சேமிப்பு

5% -  40.2%
10%க்கும் மேல் - 22.5%
20%க்கும் மேல்  - 22.3%
40%க்கும் மேல் -
15%

 
5. உங்களிடம் உள்ள கடன்?

 
தனிநபர் கடன் - 54.7%
வீட்டுக் கடன் -  38.7%
மோட்டார் கடன் - 19.8%
பிசினஸ் கடன் -  11.3%

6. கிரெடிட் கார்டில் உங்கள் மாதாந்திர கடன்
10000க்கும் கீழ் - 64.1%
10000க்கும் மேல் -  22.4%
30000க்கும் மேல் -  6.7%
50000க்கும் மேல் - 
6.7%


7. உங்கள் எதிர்காலத்துக்காக ரிஸ்க் எடுத்திருக்கிறீர்களா?

ஆம் - 54.2%
இல்லை -
45.8%


8. நீங்கள் எடுத்த ரிஸ்க் சரியா, தவறா? என்ன நினைக்கிறீர்கள்

சரி - 53.2%
தவறு - 6.3%
தெரியவில்லை -
40.5%


9. உங்களுக்கு தெரியாத ஒன்றை பிறர் சொன்னதற்காக நீங்கள் செய்தது
 
- இடம் வாங்கியது - 22.4%
- பிசினஸ் தொடங்கியது - 14.7%
- பங்குச் சந்தை முதலீடு - 19.2%
- பாலிசி எடுத்தது - 53%


 
 
இந்த சர்வே முடிவுகளை ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குனர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கொடுத்து ஆராய்ந்து வாசகர்களுக்கு நிம்மதியான நிதி எதிர்காலத்துக்கான வழிகாட்டுதல்களைச் சொல்லுங்கள் என்று கேட்டோம். அவரும் விளக்கமாக சொன்னார்.
 
“சர்வேவில் கலந்துகொண்டவர்களில் 70% பேர் மாதம் ரூ. 20,000-30,000 வரை சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் அதில் அவர்களின் செலவு போக 30-40% மிச்சம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது பெரும்பாலானோரின் பொருளாதாரம் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது. மேலும்,  இந்த வருமானம் போதாது என்றும் தங்களை மேலும் உயர்த்திக்கொள்ள விரும்புவதாக பெரும்பலானோர் கூறியிருப்பது நல்ல விஷயம். அதுமட்டுமல்லாமல் 20-30 வயதினர் பெரும்பாலும் சேமிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பது நல்ல செய்தி.
 
அதே நேரத்தில் இவர்களிடம் கடனும் அதிகமாக உள்ளது என்பது வருத்தமான விஷயம். குறிப்பாக, தனிநபர் கடன் மட்டுமே 55% பேரிடம் இருக்கிறது. 57% பேரிடம் கிரெடிட் கார்டு உள்ளது. அவர்களில் பெரும்பாலும் மாதம் ரூ.15,000-க்கும் மேல் கிரெடிட் கார்டில் செலவு செய்கிறார்கள். இது மக்களின் கன்ஸ்யூமரிசம் அவசிய தேவைகளைத் தாண்டி ஆடம்பர செலவுகள் அதிகரிப்பதைக் காட்டுகிறது. 43%  பேரிடம் கிரெடிட் கார்டு இல்லை என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் தங்களிடம் உள்ள பணத்திலேயே தங்களது செலவுகளைச் செய்துகொள்கிறார்கள் என்பது பாசிட்டிவான செய்தி.
 
இந்த சர்வேவில் கலந்துகொண்டவர்களில் 46% பேர் தங்கள் எதிர்காலத்துக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க துணியவில்லை என்பது சரியான போக்கல்ல. ரிஸ்க் எடுத்தவர்களில் 40 சதவிகிதத்தினர் தாம் எடுத்த ரிஸ்க் சரியா, தவறா என்பதுகூட தெரியாமல் இருக்கின்றனர். அதைவிட கவலைக்குரிய விஷயம், பிறர் சொன்னார்கள் என்பதற்காக தெரியாத முதலீடுகளில் பணத்தைப் போட்டிருக்கிறார்கள்” என்று சர்வே முடிவுகளை அலசினார்.  
 
என்ன செய்ய வேண்டும்?

பணக்காரர் ஆவதற்கு முதல் தகுதி, நம் கையில் செலவைத் தாண்டி உபரிப் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான். எனவே வேலையோ தொழிலோ நம்முடைய வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

காரணமே இல்லாமல் கடன் வாங்குவது தற்கொலைக்கு சமம். சர்வே முடிவில் பெரும்பாலானோர் செலவுகள் போக மீதியை சேமிப்பதாகக் கூறியுள்ள போதிலும் அவர்களிடம் கடன் அதிகம் உள்ளது. கடன் என்பது காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவது அல்ல. இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குத்தான். ஆனால் பெரும்பாலானோர் கடனுக்கு கடன் என்று ரொட்டேஷனில் வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள். அது தவறு. பிசினஸ் செய்பவர்கள் தங்கள் பிசினஸை விரிவுபடுத்தவும், புதிதாக பிசினஸ் செய்ய விரும்புபவர்களும் தங்கள் தேவைக்கேற்ப மட்டுமே தங்களது கடனை திட்டமிட வேன்டும்.

வேலையை விட்டு சொந்தமாக பிசினஸ் பண்ணலாமா? வேறு வேலைக்குப் போகலாமா? பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? இப்படியே கடைசி வரை கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்காமல், திட்டமிட்டு இறங்கி ரிஸ்க் எடுத்து ஒரு கை பார்த்துவிட வேண்டும்.

முதலீடு, சேமிப்பு ஆகிய வார்த்தைகளைச் சொன்னாலே பலரிடம், இப்போ என்ன அவசரம் என்ற பதில்தான் வருகிறது. அதனாலேயே முதல் மாதம் சம்பளம் வாங்கியதும், போன் வாங்கலாமா, பைக் வாங்கலாமா என்று யோசிக்கும் நாம், எவ்வளவு சேமிக்கலாம்னு யோசிக்கறதே இல்லை. அப்புறம் குடும்பம், குழந்தைகள் என்று வந்தப் பிறகு செலவுக்கே வருமானம் பத்தாமல் திண்டாட வேண்டியிருக்கும். அதனால சம்பளம் வாங்குகிற முதல் மாதத்திலிருந்தே சேமிக்க தொடங்குங்கள்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ