Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இழுத்து மூடப்படும் ‘பி’ ஸ்கூல்கள்... என்னதான் காரணம்?

 

 

ம் நாட்டில் மேலாண்மை படிப்புகளை கற்றுத்தரும் ‘பி’ ஸ்கூல்களில் படித்து முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்களில் வெறும் 7 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 220 ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் 120 ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூட வாய்ப்புள்ளதாகவும் அசோசெம் (ASSOCHAM) அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

ரூபாய் 10 ஆயிரத்துக்கு சம்பளம்!

நம் நாட்டில் ஐஐஎம் போன்ற முன்னணி 20 கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து, மற்ற ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்களில் படித்து வெளியேறும் மாணவர் களில் வெறும் 7 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதாகவும், அப்படியே வேலை கிடைத்தாலும் வெறும் ரூபாய் 10 ஆயிரத்துக்கு கீழ்தான் சம்பளம் கிடைப்பதாகவும் அண்மையில் அசோசெம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

5,500 ‘பி’ ஸ்கூல்!

தெருக்கு தெரு டீக்கடை போல, பெரிய நகரங்களில் வீதிக்கு வீதி ‘பி’ ஸ்கூல் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்தியாவில் கிட்டதட்ட 5,500 ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒப்புதல் இல்லாத நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால், அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் டில்லி, மும்பை, பெங்களூர் உட்பட பல முன்னணி நகரங்களில் கிட்டதட்ட 220 ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 120 ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ‘பி’ ஸ்கூலில் படிக்கும் மாணவர்கள் குறைந்தது 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை படிக்க செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், படிப்பு முடித்து வெளியே வருபவர்களில் வெறும் 7 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. அப்படியே இவர்களுக்கு வேலை கிடைத்தாலும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரைதான் சம்பளம் கிடைப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

படித்தால் மட்டும் போதாது!

இந்த நிலையில் எம்பிஏ படிக்கும் மாணவர்களின் நிலைமை மோசமடைந்ததற்கு காரணம் என்ன? மேலாண்மை படிப்புகளின் தற்போதைய நிலைமை? வரும் காலங்களில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை ஐஐடி-யின் மேலாண்மைத் துறை பேராசிரியர் தில்லைராஜனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘பி’ ஸ்கூலில் சேர்ந்து படித்துவிட்டு வெளியே வரும்போது வேலையில்லை, நல்ல சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறுவது சரியானதல்ல. நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் என்றால் மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. தான் கற்றதை எப்படி இந்த உலகுக்கு வெளிப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம். 

நம் நாட்டில் முன்பைவிட அதிகளவிலான ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன. அதிக மாணவர்கள் எம்பிஏ படிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 5 வருடங்களுக்குமுன் எம்பிஏ படித்தாலே நல்ல சம்பளம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாணவர்கள் ‘பி’ ஸ்கூலில் சேர்ந்தனர். இது இங்கு மட்டுமில்லை எல்லா இடங்களிலும் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

சினிமா பார்க்க ரிவ்யூ!


இதற்குமுன் படிப்பு என்பது லைசென்ஸ் போல இருந்தது. லைசென்ஸ் இருந்தால் வேலை கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது. இப்போது அதுபோன்ற நிலைமை இல்லை. ஒரு திரைப்படம் எப்படி இருக்கிறது, அந்த திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாமா என்பதற்குகூட இன்றைய இளைஞர்கள் அதிகளவில் ஆன்லைனில் விமர்சனங்களைத் தேடுகின்றனர். ஆனால், இரண்டு ஆண்டு ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், எந்த ஒரு தேடலும் இல்லாமல் கிடைக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர். அதன்பின் வேலை கிடைக்கவில்லை, நல்ல சம்பளம் கிடைக்கவில்லை என்று அந்தக் கல்லூரியை குறை சொல்கின்றனர். 

ஆன்லைன் கோர்ஸ்!

தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் சிஸ்டம் முறையில், ஐஐடி மெட்ராஸ், ஐஐஎம் பெங்களூர் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கத் தேவையில்லை. மாறாக இதுபோன்ற பல முன்னணி கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பாடங்களை ஆன்லைனிலேயே வழங்குகின்றன. ஆன்லைன் ஓபன் கோர்ஸ் மூலம் இதுபோன்ற பெரிய கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களை ஆன்லைனிலேயே படிக்கலாம்.

தொழில்முனைவோர் ஆகலாம்!


தற்போதைய நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாங்களாகவே முயன்று வேலை பெற முயற்சிகளை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனமோ, அரசாங்கமோ வேலை எல்லாம் வாங்கித் தராது. மாறாக, கல்வி நிறுவனமும், அரசாங்கமும் வேலை கிடைக்க வாய்ப்புகள் மட்டுமே வழங்கும். நாம்தான் நம்முடைய திறமையை வளர்த்துக்கொண்டு தேடிப் பிடித்து நல்ல வேலையை வாங்க வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்பதைவிட திறமையை வளர்த்துக்கொண்டு புதியதாக தொழில் தொடங்கலாம். தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க எளிதாகக் கடன் கிடைக்கின்றன. நிறுவனங்களில் சேர்ந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. யார் வேண்டுமானாலும் சுயமாக தொழில் தொடங்கி தொழில்முனைவோராகவும் ஆகலாம்” என்றார்.

குறையும் கேம்பஸ் ரெக்ரூட்மென்ட்!

2014-லிருந்து 2016 வரையிலான காலத்தில் பொருளாதார மந்தநிலை மற்றும் குறைந்து வரும் கல்வித் தரத்தால் கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் 45 சதவிகிதம் வரை குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ‘பி’ ஸ்கூல் கல்வி நிறுவனங்களில் போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, தரமான கட்டுப்பாடு இல்லாதது, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் குறைந்த சம்பளத்துக்கே வேலை, தகுதியற்ற ஆசிரியர் உட்பட பல்வேறு காரணங்களால் ‘பி ‘ஸ்கூல் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

உங்கள் வாழ்க்கை..!


ஒவ்வொரு நிறுவனமும், ஒருவரை புதியதாக வேலைக்கு தேர்வு செய்கிறார்கள் என்றால் அவரால் நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம் இருக்கும் என்பதையே முதலில் கவனிக்கின்றனர். இவரால் நிறுவனத்துக்கு எவ்வளவு சம்பாதித்து கொடுக்க முடியும் என்ற நிலையே பெரும்பாலான நிறுவனங்களிடையே நிலவுகிறது. ஆகையால், கடும் போட்டி நிறைந்த இன்றைய உலகில் எங்கு படித்தாலும், என்ன படித்தாலும் ஆர்வத்துடன் தங்களுடைய தனிப்பட்ட திறமையை வெளிக்கொண்டு வராதபட்சத்தில் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைப்பது சிரமமே.

சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ