Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஞ்சள் கயிறு உற்பத்தியில் கலக்கும் கிராமம்!

மாங்கல்யம் தந்துனானேன, மமஜீவன ஹேதுநா!, கண்டே பத்நாமி ஸுபகே, த்வம ஜீவ சரதஸ்சதம்! - இது தான் மணமகளுக்கு தாலிகட்டும் நேரத்தில் சொல்லப்படும் மந்திரம். இப்படி கல்யாண வைபோகம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது மஞ்சள் கயிறுதான். இந்த மஞ்சல் கயிறு தயாரிக்கும் பணியில் நாற்பது ஆண்டுகளாக உடுமலை, திருப்பூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வரதராஜபுரம் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் இங்கு இருந்துதான் மஞ்சள் கயிறு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் கயிறு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வரதராஜபுரம் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் கயிறு தமிழகத்தில் 70 சதவிகிதமும், பிற மாநிலங்களில் 30 சதவிகிதமும் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் கயிறு குறித்து கணேசன் என்பவரைச் சந்தித்து கேட்டோம். அவர் விவரமாக எடுத்து சொன்னார்.

"நாங்கள் இந்த தொழிலை கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வருகிறோம். இந்த தொழிலுக்கு நாங்கள் மூன்றாவது தலைமுறை. இந்த மஞ்சள் கயிறு தயாரிக்கும் தொழிலில் என் மனைவி இருபது ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இந்த தொழிலுக்காக கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக தயாரிக்கும் பணியிலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பேக்கிங் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் சாயத்தை ராயவேலூரிலும், இதற்கான மூலப் பொருளான நூலினை கோவையிலும் வாங்கி உற்பத்தி செய்கிறோம்.

மூலப்பொருளான நூலினை பின்னல் இல்லாமல் பிரித்தெடுத்து சிறிய தடிமன் நூலாக திரிக்கப்படுகிறது. பின் தேவைக்கேற்றவாறு மூன்று அல்லது நான்கு நூலினை சேர்த்து கயிறாக திரிக்கப்படுகிறது. திரிக்கப்பட்ட கயிறுகள் அளவுகளில் வெட்டப்பட்டு பின் மஞ்சள் சாயம் பூசப்படுகிறது. சாயம் பூசப்பட்ட கயிறுகளை மூன்று மணி நேரம் உலரவைக்கப்படுகிறது.

உலர்ந்த கயிறுகளை ஒரு கட்டிற்கு 12 கயிறுகள் வீதம் கட்டப்படுகிறது. பின் பாலிதீன் பைகளில் 12 கட்டுகள் அடுக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது. அதாவது ஒரு பாக்கெட் பேக்கில் 12 x 12 = 144 வீதம் பேக் செய்யப்படுகிறது. பின் ஒரு கோணியில் நூறு பக்கெட்டுகள் அல்லது தேவைக்கேற்ப பேக்கிங் செய்து அனுப்பப்படுகிறது.

பொதுவாக திருமண விசேஷங்கள் நடக்கும் மாதங்கள் மட்டும் விற்பனை அதிகமாக இருக்கும். ஆடி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் விற்பனை சற்று குறைவாகவே இருக்கும். வாடிக்கையாளர் தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது" என்றார்.

செய்தி மற்றும் படங்கள்  - க.சத்தியமூர்த்தி

மாணவப் பத்திரிக்கையாளர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ