Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கைகொடுக்கும் எஸ்எம்இ ஐபிஓ!

மு.சா.கெளதமன்

மாத சம்பளம் வாங்குபவர்களுக்குள் ஒரு பிசினஸ்மேன் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறான். பெரும் முயற்சியில் பிசினஸ்மேன் ஆக மாறி தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறீர்களா..? தொழில் விரிவாக்கத்துக்கு தேவையான பணமில்லாமல் தவிக்கும் எஸ்எம்இ பிசினஸ் மேனா நீங்கள்? உங்கள் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம்  பணத்தைத் திரட்டி, உங்கள் தொழிலை இன்னும் பெரிய அளவில் செய்யலாம்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் 23 எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. பங்குச் சந்தைகளில் பட்டியலிட முன்வந்துள்ளன.

ஐ.பி.ஓ. வருவதால் கிடைக்கும் நன்மைகள்!


பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் வட்டி இல்லாத முதலீட்டினால் உங்கள் வர்த்தக சாம்ராஜ்யம் பல மடங்காக விரியும். பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்கு விலை உயர்வதால் மொத்த நிறுவனத்தின் மதிப்பீடும் உயரும். இது மாதிரி பல நன்மைகள் கிடைக்கும்.

ஒரு எஸ்.எம்.இ. நிறுவனம் தனது பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட என்னென்ன தகுதிகளை வைத்திருக்க வேண்டும்?

அடிப்படைத் தகுதிகள்!

பிரைவேட் லிமிடெட் கம்பெனி, பார்ட்னர்ஷிப் ஃபேர்ம்களாக இருப்பவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட முடியாது. பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக இருக்கும் நிறுவனங்களே பங்குச் சந்தையில் பட்டியலிட முடியும்.   நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  நிறுவனத்தின் நிகர மதிப்பு குறைந்தபட்சம் ரூ.3 கோடியாக இருக்க வேண்டும். கண்ணால் பார்த்து, தொட்டு உணரக்கூடிய சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். 

கடந்த 3 வருடங்களில் முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட லாபம் குறைந்த பட்சமாக ரூ.3 கோடியாக இருக்க வேண்டும் அல்லது அந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.5 கோடியாக இருக்க வேண்டும். நிறுவனத்துக்கு பிரத்யேக வெப்சைட் இருக்க வேண்டும். நிறுவனப் பங்குகள் டீமேட் வடிவில் இருக்க டெபா சிட்டரியிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


நிறுவனங்களை பட்டியலிட  விண்ணப்பிக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஐபிஓ-க்கு பிறகு அளிக்கப்பட்ட மொத்த பங்கு மூலதனம் குறைந்தபட்சமாக 3 கோடி ரூபாயாக இருக்க வேண்டும்.

பட்டியலிடப்பட்ட பிறகு, ஒரு வருடத்துக்கு நிறுவனர்களின் பங்கு மூலதனத்தில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. நிறுவனத்தின் நிதி நிலை சீரமைப்புக்காக பரிந்துரைக்கப் படவில்லை என சுய சான்றிதழை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். நிறுவனத்தை கலைக்கும் விதமாக வழக்கு இல்லை என்பதற்கு சுய சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த இரண்டு சான்றுகளிலும் கம்பெனி செகரட்டரியின் கையொப்பம் இருக்க வேண்டும்.

பட்டியலிடப்படுவது எப்படி?

முதலில் போர்டு மீட்டிங் வாயிலாக நிறுவனம் பட்டியலிடப்படுவதற்கான ஒப்புதலை அனைத்து இயக்குநர் களிடமும் பெற வேண்டும். ஒரு பொதுக் குழு கூட்டம்  மூலமாக ஏற்கெனவே முதலீடு செய்திருப் பவர்களிடம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வாங்க வேண்டும்.

அதன்பிறகு மெர்ச்சென்ட் பேங்கர் அல்லது லீட் மேனேஜர்கள், சட்ட ஆலோச கர்கள், அண்டர் ரைட்டார்கள், மார்க்கெட் மேக்கர்கள், ரெஜிஸ்ட்ரார் டூ தி இ்ஷ்யூ (Registrar to the issue) மற்றும் வங்கியாளர்கள் நியமிக்கப் படும்போது நிறுவனத்துக்கும் மேற்குறிப்பிட்ட இன்டர் மீடியரீஸ்களுக்கும் இடையே, பட்டியலிடப்படுவது தொடர்பாக தங்கள் வேலைகளை செய்ய ஒப்பந்தம் (MoU - Memorandum of Understanding)செய்துகொள்ள வேண்டும்.

மெர்ச்சென்ட் பேங்கர் சரி பார்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும். நிறுவனத்தின் நிதி நிலைமைகளை விளக்கும் பேலன்ஸ்ஷீட்கள், பிராஃபிட் அண்ட் லாஸ் அக்கவுன்ட் கணக்கு வழக்குகள், கொடுக்கப் பட்டிருக்கும் கான்ட்ராக்ட்டுகள், அரசு வழங்கி இருக்கும் உரிமங்கள், புரமோட்டார்களின் விவரங்கள், வழக்குகள் உள்ளிட்டவைகளை முழுமை யாக சரிபார்க்கும்.

அதன்பிறகு எவ்வளவு தொகை  ஐபிஓ மூலம் திரட்டப் படும், எத்தனை பங்குகள் வெளியிடப்பட இருக்கின்றன, ஒரு பங்கின் விலை என்ன என்று பங்கு சார்ந்த விஷயங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பிறகு பங்குச் சந்தையிடம்  அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையைத் தான் ‘ஆஃபர் டாக்குமென்ட்’ அல்லது ‘டிராஃப்ட் பிராஸ்பெக்டஸ்’  என்பார்கள்.

ஆஃபர் டாக்குமென்ட் / டிராஃப்ட் பிராஸ்பெக்டஸ்


இந்த ஆஃபர் டாக்குமென்ட் தான் ஒரு நிறுவனத்தின் ஐபிஓவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். பட்டியலிடப்பட இருக்கும் நிறுவனத்தின் சாதகங்கள், பாதகங்கள், இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள், தீமைகள் என்று அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

எனவே, அந்த நிறுவனம் செய்யும் பிசினஸில் நல்ல அனுபவமுள்ள, சரியான நிபுணர் களை கொண்டு இந்த ஆஃபர் டாக்குமென்ட்களை தயாரிக்க வேண்டும். இந்த ஆஃபர் டாக்குமென்ட்டில் சொல்லப் படும் அனைத்தும் உண்மையான தகவலாக இருக்க வேண்டும். நேர்காணலின்போது இந்த ஆஃபர் டாக்குமென்டில் குறிப்பிடப்பட்டிருப்பதை நிரூபிக்கக்கூடச் சொல்லலாம்.

சரிபார்க்கும் பங்குச் சந்தை!

மெர்ச்சென்ட் பேங்கர் சமர்ப்பித்த விஷயங்களை பங்குச் சந்தை சரிபார்க்கும். அதோடு ஐபிஓ வந்து பட்டியலிடப்பட விண்ணப்பித்த நிறுவனத்தின் புரமோட்டார்களோடு அதன் ஆலோசனைக் குழுவையும் ஒரு நேர்காணலுக்கு அழைக்கும். இந்த நேர்காணலுக்குப்பிறகே  ஐபிஓ வருவதற்கு பங்குச் சந்தை ஒப்புதல் வழங்கும்.

டிராஃப்ட் டாக்குமென்ட் டு பிராஸ்பெக்டஸ்!

நேர்காணலுக்குப் பிறகு திருத்தப்பட்ட ஆஃபர் டாக்கு மென்டை(பிராஸ்பெக்ட்ஸ்)  நிறுவனங்களின் பதிவாளர் களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பிராஸ்பெக்டஸில் என்றைக்கு ஐபிஓ தொடங்கப் படும், எப்போது ஐபிஓ முடியும், ஐபிஓவின் விலைப்பட்டை போன்ற விவரங்கள் இருக்கும். இந்த பிராஸ்பெக்டஸ்ஸை ஆர்ஓசி-யிடம் சமர்ப்பித்தபிறகு, அவர்கள் ஒப்புதல் வழங்கியபின் பங்குச் சந்தைக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும்.

பப்ளிப் ஆஃபரிங்!

மேலே சொல்லப்பட்ட நடைமுறைகளுக்குப்பிறகு ஐபிஓ வெளியிடப்படும். ஐபிஓ நடந்து முடிந்தபிறகு பங்குச் சந்தைக்கு தேவையான டாக்குமென்ட்களை நிறுவனம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் ஐபிஓ-வுக்கான ஃபைனல் அலாட்மென்ட் அதாவது, யாருக்கு எவ்வளவு பங்குகள் என்பது முடிவு செய்யப்படும்.

இந்த ஐபிஓ-ல் லாட் கணக்கில் தான் பங்கேற்க முடியும். சிறு முதலீட்டாளர்களை பாதுகாக்க செபி பிரத்யேகமாக இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. எனவே, ஒரு லாட் என்பது ரூ.1 லட்சம் மதிப்புள்ள பங்குகள். பங்குகளின் எண்ணிக்கை கணக்கில்லாமல் பணத்தின் மதிப்பீடு ரூ.1 லட்சத்துக்கு குறையக்கூடாது.  அதையும் மீறி ஒரு நல்ல எஸ்எம்இ நிறுவனம் ஐபிஓ வருகிறது. அதில் குறைந்த தொகையை முதலீடு செய்ய, சிறு முதலீட்டாளர் ஒருவர் விரும்பினால் மார்க்கெட் மேக்கர்களின் மூலம் முதலீடு செய்யலாம்.

எங்கு பட்டியலிடப்படும்?

ஐபிஓ வெளியானபிறகு, நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி முதலீட்டைப் பொறுத்து, நிறுவனம் பட்டியலிடப்படும் பிரிவு முடிவு செய்யப்படும். ‘போஸ்ட் இஷ்யூ பெய்ட் அப்’  கேப்பிட்டல் ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருந்தால், அந்த நிறுவனங்கள் கட்டாயமாக பி.எஸ்.இ எஸ்.எம்.இ-யில்தான் பட்டியலிடப்பட வேண்டும். இதுவே ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடி வரை ‘போஸ்ட் இஷ்யூ பெய்ட் அப்’ கேப்பிட்டல் இருந்தால், பி.எஸ்.இ மெயின் போர்டு அல்லது பி.எஸ்.இ எஸ்.எம்.இ-யில் பட்டியலிடப் படலாம்.

ஐபிஓவில் குறைந்தபட்சமாக 50 பேருக்காவது பங்குகள் ஒதுக்கப்பட வேண்டும். ஐபிஓ-வுக்குப் பிறகு மொத்த நிறுவனத்தின் பெயிட் அப் கேப்பிட்டலில் மொத்தப் பங்கு களில் 25 சதவிகித பங்குகள் புரமோட்டர்கள் அல்லாத பொது முதலீட்டாளர்களிடம் இருக்க வேண்டும்.

அன்டர்ரைட்டிங்!

பங்குகள் பட்டியலிடப்பட விண்ணபித்திருக்கும் நிறுவனத்தின் ஐபிஓ முழுமையாக (100%) சப்ஸ்கிரைப் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், மெர்ச்சென்ட் பேங்கர்கள் அல்லது லீட் மேனேஜர்கள், வெளியிடப்படும் மொத்த பங்கு களில் 15 சதவிகிதத்தை சப்ஸ்கிரைப் செய்யலாம்.

கட்டணங்கள்!

பொதுவாக, எஸ்.எம்.இ நிறுவனம் ஒன்று ஐபிஓ வருவதற்கு ரூ.30 லட்சம் செலவாகலாம். இதற்கான கட்டணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. நிபுணர்களுக்கான கட்ட ணங்கள்: தேர்ந்தெடுக்கப்படும்  நிபுணர்கள் தங்கள் பணிக்கு வசூலிக்கும் தொகையானது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் நிபுணருக்கும் மாறுபடும். 2. கட்டாய கட்டணங்கள்: பிஎஸ்இ எஸ்.எம்.இ அல்லது  என்எஸ்இ எமெர்ஜிங் பிளாட் பாரத்தில் பட்டியலிடப் படுவதற்கும், அதில் வர்த்தக மாவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். 3. மார்க்கெட் மேக்கர்ஸ்: பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட எஸ்.எம்.இ பங்குகளை, முதலீட்டாளர்கள் வாங்கு வதற்கோ, விற்பதற்கோ முடிய வில்லை எனில்,  பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உறுதுணையாக இருப்பவர்கள் தான் இந்த மார்க்கெட் மேக்கர்ஸ். 

கை கொடுக்கும் செபி!

எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஐபிஓ வர பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி பல உதவிகளை செய்து வருகிறது.  ஒரு நிறுவனத்துக்கு பங்குச் சந்தை மூலம் பணம் கிடைக்கச்  செய்ய என்ன மாதிரியான நடவடிக்கை களை எடுக்க முடியுமோ, அதை எல்லாம் செபி எடுத்து வருகிறது. அதே சமயம், பங்குச் சந்தையில் முதலீட்டாளர் களின் பாது காப்பும் உறுதி செய்யப்படுகிறது.

தற்போது எஸ்.எம்.இ நிறுவனங்கள்  முதலீட்டைத் திரட்ட பங்குச் சந்தையை எப்படி  பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மாநில, மாவட்ட சேம்பர் ஆஃப் காமர்ஸ், சிட்பி மற்றும் பங்குச் சந்தைகளுடன் இணைந்து விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது செபி. எஸ்.எம்.இ-க்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதால் தங்கள் நிறுவனத்தை முன்னேற்றுவது டன், நாட்டின் பொருளாதாரத் தையும் உயர்த்த முடியும்!


ஐபிஓ இல்லாமல் பட்டியலிடப்படலாம்!

தற்போது சில புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வெஞ்சர் கேப்பிட்டல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களிலிருந்து முதலீடு கிடைத்துவிடுகிறது. ஆனால், அப்படி முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், தங்களின் முதலீடுகளை விற்று பணமாக மாற்ற ஒரு நல்ல இடம் இல்லை.

இந்த குறையைத் தீர்க்க  சமீபத்தில் இன்ஸ்டிட்யூஷனல் டிரேடிங் பிளாட்பார்ம் (ITP) மூலம், ஐபிஓ வராமலேயே பங்குகளை பட்டியலிட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகமாக ஒரு புதிய வழிமுறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் முழு விவரங்களுக்கு http://www.sebi.gov.in/cms/sebi_data/attachdocs/1381311146097.pdf என்ற லிங்கை பார்க்கவும்.


முதலீடு அதிகரித்ததால் தைரியமும் வந்தது!

அலோக் ஜெயின், நிர்வாக இயக்குநர், குஷன் ஃபின்டிரேட் ஓஷன் லிமிடெட் (Ghushine Fintrrade Ocean Ltd).

“நான் கடந்த 18 ஆண்டுகளாக டெக்ஸ்டைல் பிசினஸில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த ஏப்ரல் மாதத்தில்   பி.எஸ்.இ எஸ்.எம்.இ-யின் மூலம் ரூ.2.60 கோடி முதலீட்டைத் திரட்டினேன். இந்த முதலீடுகளால் இன்று என் பிசினஸ் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இன்று நான் வெளிநாடுகளில் பிசினஸ் செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்றால், பட்டியலிடப்பட்டதால் கிடைத்த முதலீடும் தைரியமும்தான் காரணம்.”


தகுதிகளும்  விதிமுறைகளும்!

பி.எஸ்.இ பங்குச் சந்தை பி.எஸ்.இ எஸ்.எம்.இ என்கிற பெயரில் எஸ்.எம்.இ-க்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு டிரேடிங் பிளாட்ஃபார்மை நடத்துகிறது. அதேபோல், என்.எஸ்.இ பங்குச் சந்தை, என்.எஸ்.இ எமெர்ஜ் என்கிற  பிரத்யேக எஸ்.எம்.இ டிரேடிங் பிளாட்பாரத்தை நடத்துகிறது.

பி.எஸ்.இ எஸ்.எம்.இ, என்.எஸ்.இ எமெர்ஜ் பிளாட் பாரத்தில் பட்டியலிடப்படும்   தகுதிகளும் விதிமுறைகளும் சற்று வேறுபடுகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ