Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போருக்கு வெறுங்கையுடனா போக முடியும்? - அருந்ததி பட்டாசார்யா

இந்திய வங்கிகள் வாராக் கடனில் சிக்கி தவிப்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் அவற்றை மீட்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக இதுவரை தெரியவில்லை. மல்லையா நாட்டை விட்டு சென்று இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. இங்கிலாந்து அரசு அவரைத் திருப்பி அனுப்ப முடியாது என்கிறது. இந்திய அரசு கடன் வாங்கியவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று அறிக்கை விடுகிறது. ஆனால் வங்கிகளின் சுமையைக் குறைக்க எந்தவொரு வலுவான சட்டங்களோ, வழிமுறைகளோ இதுவரையிலும் திட்டமிடப்படவில்லை.

வளர்ச்சிக்கு தடையாகும் வாராக் கடன்:

மொத்தம் 1.44 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களுக்கு வங்கிகள் ஆளாகியுள்ளன. இவையனைத்தும் வங்கிகளின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்கூட உண்மையில் பாதிக்கப்படுவது இந்தியப் பொருளாதாரமும் மக்களின் வளர்ச்சியும் தான்.
ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகளுக்கு இப்போது வாராக் கடனும் ஒரு காரணியாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்வது? கடன் வாங்கிய பெரும் பணக்காரர்களா? டார்கெட்டை அடைய ஆசைப்பட்ட வங்கியாளர்களா? கடன்களை முறைப்படுத்தாத அரசையா?

போருக்கு வெறுங்கையுடன் போக முடியுமா?

வங்கிகள் இன்று மக்களின் அத்தியாவசியமாக மாறிவிட்டது. வங்கிகளுக்கு ஒரு பிரச்னை எனில் அது மக்களையும் நேரடியாக பாதிக்கும். மக்கள் தங்களிடம் உள்ள பணத்தையெல்லாம் வங்கி இருப்பில் வைக்கவே விரும்புகிறார்கள். வங்கிகள் கொடுக்கும் கடன் முழுவதும் மக்களின் பணமே. ஆனால் வங்கிகள், கடன் வழங்குவதற்கான வழிமுறைகளுக்கு நேர்மாறாக, நம்பிக்கையின் பேரிலும் அரசியல் அழுத்தத்தின் பேரிலும் தங்கள் இஷ்டத்துக்கு கடன்களைத் தந்து வந்திருக்கின்றன. அதன் விளைவு வங்கிகள் தரும் கடனை வாங்கி தங்களுடைய நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கும் பெரும்பணக்காரர்கள் கடனைத் திருப்பி செலுத்துவதில் ஆர்வம் காட்டுவதே இல்லை. இதன் விளைவுதான் கிட்டதட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக வளர்ந்து நிற்கிறது.

சமீபத்தில் அதிக வாராக் கடன் சுமையில் இருக்கும் வங்கிகளின் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இயக்குநர் அருந்ததி பட்டாசார்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "வாராக் கடன்களை வசூலிக்க இப்போதிருக்கும் சட்டதிட்டங்கள், நடைமுறைகள் பத்தாது. வலுவான நடவடிக்கைகளுக்கு ஏற்றபடி அவை மாற்றப்பட வேண்டும். போருக்கு வெறுங்கையை வீசிக்கொண்டு போனால் தோல்விதான் மிஞ்சும். வங்கிகளுக்கு அதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்"  என்று கூறியுள்ளார்.

அரசுக்கு என்னதான் தேவை?

கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. யாரெல்லாம் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார்கள், அவர்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற முழு விவரங்களும் அரசின் கையில் உள்ளது. ஆனாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அனைத்திற்கும் அதிகாரம் கொண்ட அரசுக்கு இன்னும் என்னதான் தேவை? ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. அமலாக்கத்துறை விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்று கூறியுள்ளது. ஆனால் அதுவும் நடக்குமா என்று தெரியவில்லை.

அரசும் வங்கிகளூம் என்னதான் செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ