Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகளின் வாராக் கடனில் 80 சதவிகிதம் பெரிய கார்பரேட்டுகளுடையதுதான்! ஆனால்...

வங்கிகளுக்கு வாராக் கடன் என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்த நிலையில் தொழில் செய்ய விரும்பும் பலருக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன என்று குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இது குறித்து கடந்த புதன் அன்று சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கருத்தரங்கு நடத்தியது.

அதற்கு தலைமை ஏற்று உரையாற்றிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் பவான் பஜாஜ், எஸ்எம்இகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள பிரச்னைகளையும் சவால்களையும் குறித்து பேசினார்.

அவர் பேசுகையில் "ஒரு வங்கிக்கு கடன் கொடுப்பதன் மூலம்தான் வருவாய் கிடைக்கிறது. அப்படியிருக்க வங்கிகள் கடன் வழங்க ஏன் தயங்க வேண்டும். வாராக் கடன் பிரச்னை ஒரு பக்கம் என்றாலும், எஸ்எம்இகள் தங்களுடைய அக்கவுன்டிங், டாக்குமென்டேஷன் போன்றவற்றில் காட்டும் அலட்சியம் தான் காரணம்.

வங்கிகளின் வாராக் கடனில் 80 சதவிகிதம் பெரிய கார்ப்பரேட்டுகளுடையதுதான். 20 சதவிகிதம்தான் சிறு, குறு நிறுவனங்கள். மேலும் பெரிய நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலிப்பதைக் காட்டிலும் சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலிப்பது என்பது அவ்வளவு பிரச்னையாக இல்லை.

ஆனால் சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் மறுக்கப்படுவதற்கு காரணம். அவர்கள் வங்கிகள் எதிர்பார்க்கும் ஆவணங்களைச் சரியாக சமர்ப்பிக்காததுதான். வங்கிகள் விதிமுறைகளின்படிதான் கடனை வழங்க முடியும். கண்ணை மூடிக்கொண்டு கடன் வழங்க முடியாதல்லவா? வாராக் கடன் அதிகரித்து வரும் நிலையில் கடன் வாங்குபவர் சரியான விதிமுறைகளின்படி கடனுக்கு விண்ணப்பிப்பதோடு, கடனைத் திருப்பி செலுத்துவதிலும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் வங்கிகளே சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குகின்றன. எனவே தொழில்முனைவோர்கள் தங்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு அனைத்தையும் சட்ட நடைமுறைப்படி பதிவு செய்து, ஆவணங்களைச் சரியாக நிர்வகித்து வந்தால் எந்த வங்கியும் கடன் தர முடியாது என்று சொல்ல முடியாது" என்றார்.

- ஜெ.சரவணன். படங்கள்: மீ நிவேதன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ