Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரெக்ஸிட் தாக்கம்: கமாடிட்டி வர்த்தக நிலை என்ன?

பிரெக்ஸிட் தாக்கம் கமாட்டி சந்தையையும் விட்டுவைக்கவில்லை. கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி என அனைத்து கமாடிட்டிகளும் அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தை கடந்த வாரத்தில் சந்தித்தன. இனி அவற்றின் வர்த்தகப் போக்கைப் பார்க்கலாம். தங்கம் வர்த்தகப் போக்கு குறித்து ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.

தங்கம்!

தங்கத்தைப் பொறுத்தவரை கடந்த வாரத்தில் பக்கவாட்டில் சிறு ஏற்ற இறக்கங்களுடன் இருந்த வர்த்தகம் வெள்ளிக்கிழமை அன்று பிரெக்ஸிட் முடிவுகளை அடுத்து அதிரடியாக விலை உயர்ந்து வர்த்தகமாயின. 20 ஜூன் அன்று 1281.75 டாலராக இருந்த அவுன்ஸ் தங்கம் 24 ஜூன் வெள்ளி அன்று அதிகபட்சமாக 1334.72 டாலர் வரை உயர்ந்தது. இது கிட்டதட்ட 6 சதவிகித உயர்வு. மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியிருக்கிறது. பிரெக்ஸிட் தாக்கத்தினால் ரூபாயின் மதிப்பு குறைந்ததை அடுத்து தங்கத்தின் விலை ஏற்றம் இருந்தது. மேலும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதால் இங்கிலாந்து மக்களுக்கு தங்கத்தை விட்டால் வேறு எதிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஏனெனில் ஐரோப்பியப் பங்குச் சந்தைகள் சில நாட்களுக்கு இறக்கத்திலேயேதான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி அன்று 10 கிராம் தங்கம் ரூ. 31,708 என்ற நிலையில் வர்த்தகமானது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஏற்றமடைந்து வர்த்தகமாவதற்கே வாய்ப்புகள் அதிகம். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவுக்கு வரவே சில நாட்கள் ஆகும். அதனால் டாலரின் மதிப்பு உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே தங்கத்தின் விலை வரும் வாரத்திலும் ஏற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் ஏற்றத்தில் ஆரம்பித்து ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய முடிவால் கடுமையாக இறங்க ஆரம்பித்தது. வியாழன் அன்று 50 டாலருக்கும் அதிகமாக இருந்த பேரல் கச்சா எண்ணெய் விலை வெள்ளி அன்று 4 சதவிகிதம் அளவுக்கு இறங்கி 48.06 டாலருக்கு வர்த்தகமானது. காரணம் டாலரின் மதிப்பு உயர்ந்ததால் கச்சா எண்ணெய்யை அதிக டாலரைக் கொடுத்து வாங்க வேண்டிய நிலை பிற நாடுகளுக்கு ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய்யை வாங்குவதில் வர்த்தகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விலை வீழ்ச்சியடைந்தது. வரும் வாரத்தில் இதன் தாக்கம் ஓரளவுக்கு இருக்கும். ஆனால் கச்சா எண்ணெய் விலை சற்று ஏற்றமடைய வாய்ப்புள்ளது.

வெள்ளி!

வெள்ளியும் தங்கத்தைப் போலவே வெள்ளிக்கிழமை அன்று நல்ல ஏற்றம் கண்டது. பிரெக்ஸிட் விளைவினால் டாலரின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து விலை இறக்கத்தில் இருந்த வெள்ளி பெருமளவில் விலை ஏற்றமடைந்தது. வியாழன் அன்று அவுன்ஸ் வெள்ளி 17.23 டாலராக இருந்தது வெள்ளிக்கிழமை அன்று அதிகபட்சமாக 17.95 வரை உயர்ந்தது. பின்னர் சற்று இறங்கி 17.72 டாலருக்கு வர்த்தகமானது. எம்சிஎக்ஸ் சந்தையில் கிலோ வெள்ளி ரூ. 42,379-க்கு வர்த்தகமாகிறது. வரும் வாரத்திலும் இந்த விலை ஏற்றம் தொடரும்.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள்!

மஞ்சளைப் பொறுத்தவரை முக்கியச் சந்தைகளில் வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை ஏற்றம் கண்டு வர்த்தகமானது. ஆனால் கடந்த ஜனவரி மாதங்களில் 9 ஆயிரத்தையும் தாண்டி வர்த்தகமாகி வந்த மஞ்சள் தற்போது என்சிடிஇஎக்ஸ் சந்தையில் குவிண்டால் மஞ்சள் ரூ. 8000-8500 என்ற வரம்பில்தான் வர்த்தகமாகிறது. பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தினால் மஞ்சள் விளைச்சல் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக விலை சற்று ஏற்றத்தில் இருக்கிறது. வரும் வாரத்தில் விலை சற்று ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். ஆனால் வரத்து குறைவாக இருக்கும் என்பதாலும் டிமாண்ட் ஓரளவுக்கு இருப்பதாலும் அதிக இறக்கம் இருக்காது என்று நம்பலாம்.

ஜீரகம்!

ஜீரகம் கடந்த வாரத்தில் ஏற்றமடைந்து வர்த்தகமானது. வரும் மாதத்தில் ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பினால் விலை உயர்ந்தது. மேலும் ராஜஸ்தானில் மழை குறைவாக இருப்பதாலும், விளைச்சல் ஏரியா குறைக்கப்பட்டதாலும் ஜீரக உற்பத்தி வரும் மாதங்களில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு தேவைக்கான ஜீரகத்தை ஏற்கெனவே வர்த்தகர்கள் வாங்கி இருப்பில் வைத்துவிட்டார்கள். இதனால் ஜீரகத்துக்கான டிமாண்ட் இல்லாமல் இருந்தது. இதனால் விலை இறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஏற்றுமதி ஆர்டர்கள் கொடுத்த நம்பிக்கையினால் மீண்டும் விலை ஏற்றம் காண தொடங்கியிருக்கிறது. ஜீரகத்தை ரூ. 17550 இறங்கும் வரை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 17380 வைத்துக்கொள்ளவும். டார்கெட் 17680-17800.

கொத்துமல்லி!

கொத்துமல்லியும் கடந்த வாரத்தில் விலை ஏற்றத்தில் வர்த்தகமானது. டிமாண்ட் அதிகரித்ததாலும் பருவமழை பொய்த்ததால் வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாலும் கொத்துமல்லி வர்த்தகம் விலை ஏற்றமடைந்து வர்த்தகமானது. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ஜூலை கான்ட்ராக்ட் 100 கிலோ கொத்துமல்லி 0.18 சதவிகிதம் உயர்ந்து ரூ. 7251 என்ற அளவில் வர்த்தகமானது. ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 0.34 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது. வரும் வாரத்திலும் வரத்து குறையும் என்ற நிலை இருப்பதாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிமாண்ட் கணிசமாக இருப்பதாலும் விலை இறங்குவதற்கு வாய்ப்பு இல்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ