Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்ஆர்ஐகள் இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமா?

- லதா ரகுநாதன், ஆடிட்டர்,  எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை

எந்த வீட்டை எடுத்துக்கொண்டாலும், வீட்டின் உள்ளே நுழைந்தால் கண்ணில்படுவது , சுவரிலோ, டீவி காபினெட் மீதோ அல்லது மூலையாகப் போடப்பட்ட தூசி நிரம்பிய பழைய டேபிளிலோ இருக்கும் குழந்தை படங்கள்..

"என் பிள்ளை / பெண் வெளிநாட்டில் இருக்கார்"

ஆக வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இனி இல்லீங்க.. வீட்டுக்கு ஒரு என்ஆர்ஐ பெற்றெடுப்போம்.

இந்தச் சூழலில் மிகவும் முக்கியம்….. ஆனால் யாரும் உணராமல் இருப்பது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்களுக்கான (NRI) வருமான வரி விதிமுறைகள்..

இந்தியன் வங்கியில் வீட்டுக் கடன் வெரிஃபிகேஷன் பல வருடங்களாகச் செய்து வருகிறேன். இதில் பல என்ஆர்ஐ விண்ணப்பங்களில் அவர்களின் வருமானவரி ரிட்டர்ன் மூன்று வருடங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்காது. காரணம் கேட்டால் அவர்கள் என்ஆர்ஐ அதனால் வருமான வரி ரிடர்ன் ஃபைல் செய்யவில்லை என்பார்கள்.




இது எந்த அளவுக்கு சரி?

உண்மைதான் . வருமானம் இந்தியாவில் இருந்தால் அதற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இந்தியாவிற்க்கு வெளியே ஈட்டும் வருமானங்கள் நம் நாட்டு வரி சட்டங்களில் சிக்காது.

ஆனால் ஒருவர் என்ஆர்ஐ ஆக மாறும்போது அவர் இங்கே இருந்த காலகட்டத்தில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கலாம். வீடு இங்கே இருக்கலாம். வீட்டிற்கு வாடகை வந்து கொண்டிருக்கலாம். பிபிஎஃப் (PPF) கணக்கும் அவருக்கு இருக்கலாம்.

இப்படி அவருக்கு இந்தியாவிலேயே வேறு பல "இருக்கலாம்கள்" இருக்கலாம்.

இந்த நிலைமையில் அவர் இந்தியாவில் வருமானவரி ரிட்டர்ன் ஃபைல் செய்ய வேண்டாம் என்று சொல்வது எப்படி சரியாகும்?

இன்னும் சரியாகச் சொல்வதானால், இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாதிருப்பது சட்டத்திற்கு புறம்பானது (Illegal). அதாவது  தண்டனைக்குரியது.

இங்கே அடிக்கோடிடப்படவேண்டியது இந்த "சட்டத்திற்கு புறம்பானது "

முதலில் யார் என்ஆர்ஐ?

வருமானவரி சட்டத்தின் கீழ் ஒரு வருடத்தில் 182 நாட்கள் இந்தியாவில் இருந்தால் அல்லது இந்த வருடத்தின் முன் மூன்று வருடங்கள் சேர்ந்தாற்போல் எடுக்கப்பட்டு அதில் 365 நாட்கள் இந்தியாவில் இருந்திருந்தால்  அவர்கள் ரெஸிடெண்ட் ஆவார்கள்.

இப்படி இல்லாதவர் வெளிநாட்டு வாழ் நபர் (Non Resident) ஆகக்கருதப்படுவார். இன்னுமொரு வகையும் உண்டு.  இந்திய வம்சாவளி  (PIO Person of Indian Origin). இன்னொரு நாட்டின் குடியுரிமை (ரெஸிடெண்ட்) நிலை வைத்திருப்பவர் முன்னொரு சமயம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால், அல்லது இவரின் அப்பா அம்மா அல்லது தாத்தா பாட்டி இந்தியக் குடிமகனாக இருந்திருந்தால் அவர் பிஐஓ ஆவார்.

சரி ஒருவர் என்ஆர்ஐ ஆக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொரு வகை கணக்காகப் பார்ப்போம்.

சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட்.

வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை நான்கு விதமாக இருக்கும்.

Ordinary resident account

Non resident ordinary account- NRO Account

Non resident external account- NRE Account

Foreign currency non resident account -FCNR Account.

ஆர்டினர் ரெசிடென்ட் அக்வுன்ட் என்பது நாம் எப்போதும் வைத்திருக்கும் கணக்கு.

அடுத்து என்ஆர்ஓ கணக்கு . இது, இங்கே ரெசிடென்ட் அக்கவுன்ட் ஆக திறக்கப்பட்ட கணக்கு, அவர் என்ஆர்ஐ எனும்போது இவ்வகையாக மாற்றப்படும். இதில், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பலாம். இங்கே வரும் வருமானங்களும் வரவு வைக்கலாம். இந்தப் பணம் வெளிநாட்டிற்கும் எடுத்துச் செல்லலாம். அதற்கு சில நிபந்தனைகள் உண்டு. உதாரணத்திற்கு வங்கிக் கணக்கிலிருந்த அதில் கட்டப்படும் வாடகை , வட்டிப் பணம், பென்ஷன், டிவிடெண்ட் உள்ளிட்டவைகளை  வெளி நாட்டிற்கு அனுப்பலாம்.

ஆனால் அதற்கு ஒரு ஆடிட்டரிடம் சர்ட்டிஃபிக்கேட் பெற்று, அதில் இவர் தம் வருமான வரியைச் சரியாகச் செலுத்திவிட்டார் என்ற சான்றிதழும் பெறவேண்டும். இப்படி அனுப்பப்படும் தொகையும் ஒரு மில்லியன் ரூபாய் வரை மட்டுமே எனும் ஃபெமா (FEMA )விதி முறையும் உள்ளது.

என்ஆர்இ  கணக்கு -  இந்த அக்கவுண்ட்களில் வெளி நாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் மட்டுமே வரவு வைக்க முடியும்.

 உதாரணம்,வெளி நாட்டில் வேலை செய்பவர் தன் சம்பளப்பணத்தை அனுப்பி இந்த அக்கௌண்டில் சேமிக்க முடியும். ஆனால் , இங்கேயே உள்ள வீட்டு வாடகை வருமானம், இந்தக் கணக்கில் கட்ட முடியாது. இந்தக் கணக்கில் இருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டுக்கு அனுப்பலாம்.

எஃப்சிஎன்ஆர் கணக்கும் மேற்கூறியது போலத்தான்.
ஆனால் என்ஆர்இ கணக்கு ரூபாயிலும், எஃப்சிஎன்ஆர் கணக்கு – குறிப்பிட்ட வெளிநாட்டு கரன்சியிலும் (Designated foreign currency)  இருக்கும்.

ஒருவர் என்ஆர்ஐ ஆக நிர்ணயிக்கப்பட்ட உடன் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ.......மூன்று மாதம் என்று வைத்துக் கொள்வோம். ஏனென்றால் காலத்தைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை,  தன் இந்திய வங்கிக் கணக்கை என்ஆர்ஓ அக்கவுண்ட்டாக மாற்றிக் கொள்ள வேண்டும். இருக்கும் கணக்கை நிலை (status) மாற்றியோ அல்லது புதிதாக ஒரு என்ஆர்ஓ   கணக்கும் துவங்கலாம். தற்போது அவரின் ரெசிடெண்ட் கணக்கில் வரும் வருமானங்கள் இந்த புது என்ஆர்ஓ அக்கவுண்ட்டில் வரவேண்டும்.
செலுத்த வேண்டிய இன்ஷூரன்ஸ் பிரீமியம், இஎம்ஐ போன்றவைகளும் இந்தக் கணக்கிலிருந்துதான் செலுத்த வேண்டும்.

சேமிப்புக் கணக்குகள் (SB),  எஃப்சிஎன்ஆர் இல் திறக்க முடியாது. டெபாசிடடுக்களாக மட்டுமே கணக்கைத் துவங்க முடியும். சேமிப்பு கணக்குகள்  என்ஆர்ஓ, என்ஆர்இ ஆக மட்டிமே இருக்க முடியும்.

டெபாசிட்கள்

வங்கிக் கணக்கில ரெசிடெண்ட் ஆக துவக்கப்பட்டுள்ள டெபாசிட்டுகள் மேலே கூறியபடி அதன் ஸ்டேட்டஸை என்ஆர்ஓ ஆக மாற்றவேண்டும். மற்றவை எல்லாம் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு சொன்னவையே.

புதிய வேறு நாட்டிலிருந்து இப்போது அனுப்பப்படும் ரெமிடன்ஸ், என் ஆர்இ அல்லது, எஃப்சிஎன்ஆர் கணக்காகவும் தொடங்கப்படலாம்.

பிபிஎஃப்

பல என்ஆர்ஐகள் இந்தியாவில் இருந்த போது  நீண்ட கால  சேமிப்புத் திட்டமாக பிபிஎஃப் முதலீட்டைச்செய்துள்ளனர். என்ஆர்ஐ ஆனப்பிறகு இந்த வகைக் கணக்குகளின் நிலை என்னவென்று பார்ப்போம்

என்ஆர்ஐ ஆக மாறுவதற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பிபிஎஃப்கணக்குகள் தொடரப்படலாம். என்ஆர்இ, என்ஆர்ஓ கணக்குகளிலிருந்து வரும் வருடங்களில் சேமிப்புத் தொகையும் செலுத்தலாம். வருமான வரிச் சலுகைகளும் உண்டு.

இந்தியாவில் ஈட்டப்படும் வருமானத்திலிருந்து இந்த பிபிஎஃப்  சேமிப்புத் தொகை, பிரிவு 80சி யின் கீழ் சலுகையாக அனுபவிக்க முடியும். தொடங்கப்பட்ட காலம் முடிந்த பிறகு மேலே சொன்னபடி, ஒரு மில்லியன் ரூபாய் வரை, நிபந்தனைகளுக்குட்பட்டு வெளி நாட்டுக்கு அனுப்ப முடியும்.

ஆனால், புது பிபிஎஃப் கணக்கு துவங்க முடியாது.

அதேபோல இந்த பிபிஎஃப் கணக்கு முடிந்த பிறகு நீட்டிக்க முடியாது. இந்தப் பணம் என்ஆர்ஓ கணக்கிற்கு எடுத்துச் செல்லப்படாமல் இருந்திருந்தால் , அந்தக் கணக்கு Extension without Contribution என்று கூறப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கான கணக்காய் (Block of 5 years) வங்கியிலேயெ தொடர்ந்து வைக்கப்படும். இதற்கு வட்டியும் கொடுக்கப்படும். ஆனால் இந்த வைப்புத் தொகைக்கான வருட  வட்டி , வருமான வரிக்கு உட்படாது. ஆனால் இந்த பிபிஎஃப் முதலும், வட்டியும் என்ஆர்ஐ வசிக்கும் நாட்டின் வரிச் சட்டங்களுக்கு உட்பட்டு வரிசெலுத்த வேண்டி வரலாம்.

எனவே என்ஆர்ஐ ஆனவுடன் உங்கள் வங்கியில் தெரிவித்து புதிதாக ஒரு கேஒய்சி படிவம் (KYC Form) பூர்த்தி செய்து கொடுத்துவிடுங்கள்.

மனதில் கொள்ள வேண்டியது…….புது கணக்கு திறக்க முடியாது.

சரி முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்ஆர்ஐ என்னும் ஒரே காரணதிற்காக வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இதனால், என்ஆர்ஐ அக இருந்தாலும் தவறாமல் வருடா வருடம் வரிக் கணக்கு தாக்கல் செய்துவிடவேண்டும்.

என்ஆர்ஐக்களின் வரி நிலவரம்..

என்ஆர்இ, எஃப்சிஎன்ஆர் கணக்கில் செலுத்தும் தொகைக்கு  வருமான வரி கிடையாது. இதில் வரும் வட்டிக்கும் வரி இல்லை. ஆனால் இந்த முதலீடு மற்றும் அதன் வட்டிக்கு என்ஆர்ஐ ஆக இருக்கும் நாட்டின் வருமான வரிச் சட்டங்களுக்கு உட்பட்டு வரி விதிக்கப்படலாம்.

என்ஆர்ஓ கணக்கில் வரும் வட்டிக்கு நம் நாட்டில் வரி செலுத்த வேண்டும். இது எல்லோருக்குமான பொது வரி விகிதம்தான். வங்கிகளும் இந்த வட்டிக்கு டிடிஎஸ் (TDS) பிடிக்க வேண்டும். செலுத்த வேண்டிய வரிக்கு அதிகமாக டிடிஎஸ் பிடித்திருந்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்து ரீஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம். என்ஆர்ஐ இருக்கும் நாட்டைப்பொறுத்து இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (Double Taxation Avoidance Agreement)  கீழ் வரிச் சலுகை கேட்கலாம்.

இங்கே பங்குச் சந்தைகளில் பங்கு பெறுபவர், வீடு நிலம் விற்பவர் இப்படிப்பட்ட நிலைகலைப்பற்றி சொல்லப்படவில்லை காரணம் இந்த க் கட்டுரை  இந்தியாவில் எந்த வருமானமும் இல்லை என்ற கூற்றின் கீழ் வருமான வரி தாக்கல் செய்யாதிருக்கும் என்ஆர்ஐகளுக்காக எழுதப்பட்ட ஒன்று.

ஆக என்ஆர்ஐக்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதிருப்பது சட்டத்திற்குப்புறம்பானது என்பதை மனதில் கொள்ளவும்.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ