Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் வீடு கிடைக்குமா? கிரெடாய் கனவு நினைவாகுமா?

கிரெடாய் (CREDAI) என்றழைக்கப்படும் கான்ஃபெடரேஷன் ஆஃப் ரியல் எஸ்டேட் டெவலெப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா - சென்னை, இன்று தன்னுடைய அடுத்த 10 ஆண்டு கால பயணத்தின் இலக்குகளை வெளியிட்டிருக்கிறது.

அதில் குறிப்பாக அரசு சம்மந்தப்பட்ட கொள்கை வரைவுகளில் அரசுடன் இணைந்து கொள்கைகளை வரையறுப்பது, ரியல் எஸ்டேட் துறையில் பணத்தை சரியாக செலவு செய்து மிச்சப்படுத்துவது, ஒற்றைச் சாளர முறையை கொண்டு வருவது, கிரெடாயை மக்களின் நம்பகமான பிராண்டாக உயர்த்துவது, கிரெடாயின் பில்டர்கள் மற்றும் டெவலெப்பர்களின் நிலையை உயர்த்துவது போன்றவைகள் மிக முக்கியமானவைகளாக சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த கூட்டத்தில் சென்னை கிரெடாயின் தலைவர் சுரேஷ் கிருஷண் பேசியதாவது,"தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்த விலையில் தரமான நல்ல வீடுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற பார்வையில் தான் இந்த 25 கமிட்டிகளை அமைத்து செயல்படுத்த இருக்கிறோம். அதில் முதலாவதாக சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ரியல் எஸ்டேட் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த க்ரெடாய் சென்னை தன் ஒப்புதலை அரசிடம் தெரிவித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, எத்தனை ப்ராஜெக்ட்கள் இருக்கிறது, அதற்கு எவ்வளவு செலவாகிறது, எவ்வளவு கட்டுமானப் பொருட்கள் தேவை போன்ற விவரங்களோடு தனி டேட்டா பேஸ்களை உருவாக்க இருக்கிறோம். அதன் அடிப்படையில் அனைத்து பில்டர்களும் சேர்ந்து மொத்தமாக கட்டுமானப் பொருட்களை வாங்க இருக்கிறோம்.

வீட்டை குறைந்த விலைக்கு கட்ட வேண்டும் என்றால் நல்ல தரமான பணியாளர்களும் வேண்டும், அதனால் கிரெடாயே பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதோடு தற்போது உலக அளவில் கட்டுமான துறையில் இருக்கும் லேட்டஸ்ட் டெக்னாலஜிகளையும் பயன்படுத்த இருக்கிறோம்.

மிக முக்கியமாக ஒற்றை சாளர முறை என்றழைக்கப்படும் Single Window System-த்தை பல ஆண்டுகளாக அரசிடம் முறையிட்டு வருகிறோம். இந்த வசதி வந்துவிட்டால் வீடுகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்டி முடித்து தருவது இன்னும் சரியான நேரத்தில் கொடுக்க முடியும், அதனால் வாடிக்கையாளர் மற்றும் பில்டர்களுக்கு மத்தியிலான பணப் பிரச்னை குறையும்" என்றார்.

கிரெடாயின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனாலும், கிரெடாயின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதில் தான் தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் வீடு கிடைக்குமா என்பது தெரிய வரும்.

மு.சா.கொளதமன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ