Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் நடந்த ஓய்வு கால கூட்டம்

நாணயம் விகடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் "நிம்மதியான ஓய்வுகாலத்துக்கு நிறைவான முதலீட்டுத் திட்டங்கள் " என்கிற பெயரில் ஒரு ஒய்வு கால விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்தியது. அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் மற்ற வெளி மாவட்டங்களிலிருந்தும் வாசகர்களும், முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

மும்பையைச் சேர்ந்த நிதிச் சந்தை நிபுணர் அர்ஜூன் பார்த்தசாரதி 2 மணிநேரத்திற்கு உரையாற்றினார். அவர் பேசியதிலிருந்து

" நம் இன்றைய சேமிப்பும், முதலீடுகளும் நம் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க வழி வகுக்குமா?

வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை பயங்கரமாக அதிகரிக்க இருக்கிறது. 2000ல் 7.6 கோடி பேராக இருந்த மூத்தோர்களின் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) எண்ணிக்கை 2025-ல் 16.8 கோடி பேராகவும், 2050ல் 32.4 கோடி பேராகவும் அதிகரிக்க இருக்கிறது.

 அதே நேரத்தில் பணவீக்கம் முதலீட்டு தொகைக்கே வேட்டு வைக்கும் விதத்தில் அதிகரித்து வருகிறது.

சராசரியாக 50 ஆண்டுகள் வரை வாழ்ந்த நாம் இன்று அசால்டாக 70 - 80 வயது வரை வாழ்கிறோம். அதோடு சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் போன்றவைகளும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இந்த மாற்றத்தில் தனி குடும்பங்களாக வாழும் கலாச்சாரம் வலுத்து வருவதை சொல்ல வேண்டுமா. கூட்டுக் குடும்ப கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவில், இன்று எத்தனை பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களோடு கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள் அல்லது வாழத் தயாராக இருக்கிறார்கள்..?

உலகம் அசுர வேகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விஷயம் கூட இன்று நம் முதலீட்டை நேரடியாக பாதிக்கிறது. இதற்கு சிறந்த சமீபத்தைய உதாரணம் பிரெக்ஸிட். எனவே அதற்கு தகுந்தாற் போல உங்கள் சேமிப்பு பழக்கங்களும், முதலீட்டு திட்டங்களும் மாற வேண்டும்.

​ அதோடு உலகம் முழுவதும் இன்று ஒரு கிராமம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் ஒரு புதிய பிசினஸ் முறை வருகிறது என்றால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அது பரவத் தொடங்கிவிடுகிறது.

உதாரணமாக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். இன்று இந்தியாவில் ஓலா, உபர், பேடிஎம், ஃப்ளிக்கார்ட்... என்று பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் வெற்றிக் கொடியை நாட்டி பிசினஸ் செய்து வருகிறது.

இப்படி உலகம் தலைகீழாக மாறுவதால் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது.

ஏனென்றால் அவர்கள் கல்லூரியில் பயிலும் பாடங்களும் நடைமுறையும் மாறுபட்டுவிடுகிறது.

அதோடு அதிகப்படியான தொழில்நுட்ப வளர்ச்சியால் 10 பேர் செய்ய வேண்டிய வேலையை 2 பேர் இருந்தாலே தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்து முடித்துவிட முடியும் என்கிற நிலை வந்துவிட்டது.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்கையை பார்த்துக் கொள்ளவதற்கே, உங்களை விட பல மடங்கு கூடுதலாக உழைத்து, ஓட நேரமில்லாமல் இருக்கும் போது அவர்களிடம் நாம் உதவியை கேட்க முடியுமா என்ன...? எனவே வலுவான ஓய்வுகால முதலீட்டு போர்ட்ஃபோலியோக்களை கட்டமைத்து வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள் " என்றார்.


மு.சா.கெளதமன். படங்கள் : மீ.நிவேதன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ